மஹிந்தவை விட மைத்திரியே பொது நிதியை அதிகம் செலவுசெய்துள்ளார்: விமானப்படையின் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியமை அம்பலம்
.
பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே உலகம் முழுவதும் 90 வீதமானவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பதுதான் பொதுப்படை.
அதிலும், ஒவ்வொரு நாட்டினதும் ஜனாதிபதியாக பதவி வகிக்கப்பவர்கள் அவர்களுக்கே உரிய சிறப்புரிமையின் ஊடாக வித விதமான சொத்துக்களை சேர்ப்பது மாத்திரமல்ல பலதரப்பட்ட சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
பதவியில் இருக்கும் காலத்தில் இவையெல்லாம் கண்டுகொள்ளப்படாத போதிலும், அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்து காலங்கள் கடக்க இவ்வாறான விடயங்களும் பூதாகரமாகிவிடுகின்றன.
இவ்வாறு இருக்க, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தமது பயண நடவடிக்கைகளுக்காக பெருமளவு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களில் மாத்திரம் 978 தடவைகள் பயணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் பதவிவகித்த ஐந்து வருடங்களில் 557 தடவைகள் விமான போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விமானப்படை தலைமையகம் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, மஹிந்த ராஜபக்ஷவின் விமான பயணங்கள் 2005 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் படிப்படியாக அதிகரிக்கப்பட்ட போதிலும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரே பயண நடவடிக்கை துரித வளர்ச்சிப் போக்கைக் காட்டியுள்ளது.
இதனிடையே, கடந்த 2014 ஆம் ஆண்டு மாத்திரம் உள்ளூர் பயணங்களுக்காக 148 தடவைகள் விமானப்படையின் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியுள்ளார்.
இருப்பினும், ஒப்பீட்டளவில் மஹிந்த ராஜபக்ஷவை விட மைத்திரிபால சிறிசேனவே தமது பதவிக்காலத்தில் விமானப்படையின் ஹெலிகாப்டர்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாக இதன் மூலம் தெரியவருகிறது.
இதன்படி, ஆண்டு ஒன்றுக்கு மைத்திரிபால சிறிசேன 111 தடவைகள் விமான பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷ 88 தடவடிகள் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
குறித்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேன 131,277.17 கிலோமீற்றர் வரையில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் விமான பயணங்களுக்காக பொது நிதியைப் பயன்படுத்தியுள்ளமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.