மனிதர்களை மனிதர்களாக நேசித்து மனித உரிமைகளை மதித்து தமிழினத்தின் உரிமைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து நின்ற விராஜ் மெண்டிஸ்!
விராஜ் மெண்டிஸ் சாவை அணைத்த செய்தி இடியாக அதிர்ச்சி தருகிறது.
மனிதர்களை மனிதர்களாக நேசித்து மனித உரிமைகளை மதித்து தமிழினத்தின் உரிமைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து நின்ற விராஜ் மெண்டிஸ்!
பிறப்பிலே சிங்கள இனத்தவராக இருப்பினும் தன் பரந்த மனத்தினால் மனிதர்களை மனிதர்களாக நேசித்து மனித உரிமைகளை மதித்து தமிழினத்தின் உரிமைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து நின்ற அதி உன்னத மனிதம் விராஜ் மெண்டிஸ் சாவை அணைத்த செய்தி இடியாக அதிர்ச்சி தருகிறது.
உயர்ந்த கல்வியலாளரான இவர் தன்னுடைய சொந்த வாழ்விலேயே ஒரு மனிதன் எப்படி நடத்தப்படக் கூடாதோ அப்படி சிறிலங்கா - பிரித்தானிய அரசுகளாலும் துன்புறுத்தப்பட்டவர். சிறிலங்கா சிங்கள அரசினால் நாடற்றவராக்கப்பட்ட விராஜ் மெண்டிஸ் அவர்கள் பிரித்தானிய அரசினால் கொடூரமாக நடத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
தொடர்ந்து பிறீமனில் புகலிடத் தஞ்சம் பெற்று தொடர்ந்து தமிழினத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடி வந்த உன்னத மனிதம் விராஜ் மெண்டிஸ் அவர்கள் தமிழின இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் விசாரணைக்குட்படுத்த பல முன்னோடி செயற்பாடுகளில் தொடர்ந்து உழைத்து வந்தார்.
கடந்த காலங்களில் இனப்படுகொலை சர்வதேச விசாரணைக்கான ஆரம்பமாக அமைந்திருந்த மக்கள் தீர்ப்பாயங்ளை உதாரணமாகக் கொண்டு தமிழின இனப்படுகொலைக்கான பிறீமன் மக்கள் தீர்ப்பாய அமர்வுகளை நடத்தித் தீர்ப்பளிக்க அச்சாணியாக இருந்து இயங்கியவர் உன்னத மனிதர் விராஜ் மெண்டிஸ் அவர்கள்.
சிங்களவர்கள் அத்தனை பேரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது என்கின்ற ஒரு எண்ணம் மனதில் உதிக்கின்ற போது எல்லாம் தமிழினத்திற்காக வாழ்ந்து கொண்டிருந்த உன்னத மனிதம் விராஜ் மெண்டிஸ் அவர்களே எம் மனக் கண் முன் முதலில் தோன்றுவார்.
தமிழிழின விடுதலைப் போராட்டத்தினையும் அதன் உந்து சக்தியாக இயங்கிய த-மி-ழீ-ழ வி-டு-த-லை-ப் பு-லி-க-ளுடன் நல்ல ஆத்மார்த்தமான உறவைக் கொண்டிருந்த விராஜ் மெண்டிஸ் அவர்கள் மூத்த தளபதி கிட்டு அவர்கள் அனைத்துலகப் பணிகளில் இருந்த நாட்களில் அவருடன் சேர்ந்து இயங்கி ஒரு தமிழனாகவே மாற்றம் பெற்றிருந்தார் என்பதை விடப் போராளியாகவே மாறியிருந்தார் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.
சாவு என்ற மனித வாழ்வின் முடிவு இந்த உன்னத மனிதத்தினை மௌனிக்க வைத்த போதும் அவரது கனவுகளை தொடர்ந்து செல்வோம் என்ற உறுதி மொழியுடன் நன்றிகளையும் விழியிலிருந்து சொரியும் நீரஞ்சலிகளையும் சமர்ப்பிப்போம். அவரது குடும்பத்தினருடைய துயரிலும் பங்கெடுத்து அஞ்சலிப்போம்.