தமிழ் அரசு கட்சியின் எதிர்காலம்
.
“தமிழ் அரசுக்கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் மாவை சேனாதிராஜா , சிறிதரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களையும் மத்திய குழு உறுப்பினர்கள் பலரையும் வெளியே தூக்கி வீச வேண்டியிருக்கும்”
“தமிழர்களுக்கு சுயாட்சி தீர்வை பெற்றுக் கொள்வதற்காக , சமஷ்டியை முன்னிறுத்தி தோற்றுவிக்கப்பட்ட தமிழ் அரசு கட்சி இந்த ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி தீர்வை முன்னிறுத்தவோ அது சார்ந்து செயற்படவோ,அதனை நோக்கிய பேரங்களை நடத்தவோ, பிரசாரங்களில் ஈடுபடவோ இல்லை”
இந்த ஜனாதிபதித் தேர்தல், பல கட்சிகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது, சிதைத்து சின்னாபின்னம் ஆக்கி இருக்கிறது.
நீண்டகால பாரம்பரியம் பேசுகின்ற கட்சிகளும் சரி, பலம் கொண்ட கட்சிகளும் சரி, இந்த புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சாய்ந்து போயிருக்கின்றன.
இந்த முறை அவ்வாறு பெரும் சரிவைச் சந்தித்த பாரம்பரிய கட்சிகளில் மூன்று முக்கியமானவை.
முதலாவது, இலங்கை தமிழ் அரசு கட்சி. இரண்டாவது, சிறிலங்கா சுதந்திர கட்சி. மூன்றாவது ,சிறிலங்கா பொதுஜன பெரமுன.
இந்த மூன்று கட்சிகளுமே ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அதிகாரபூர்வமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தன.
ஆனால் அந்தக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,தலைவர்கள், பிரமுகர்கள் அதனை முறையாக பின்பற்றவில்லை. வெவ்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்தனர். ஒவ்வொரு மேடைகளில் ஏறி பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் இந்த மூன்று கட்சிகளுமே அதற்காக யாரையும் தூக்கி எறியவும் முடியவில்லை, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் இல்லை.
இந்த மூன்று கட்சிகளும், இன்று சிதைந்து போனதற்கு முக்கியமான ஒரு காரணியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கூறலாம்.
இன்னொரு காரணம், பலவீனமான தலைமைத்துவங்கள் அல்லது கட்சியை கட்டியாளக் கூடிய தலைமைத்துவ கட்டமைப்பை இந்த கட்சிகள் இழந்திருப்பது.
தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், எவ்வாறான நிலையை எதிர்கொள்ளப் போகிறது என்பது முக்கியமானது ஒரு கேள்வியாக இருக்கிறது.
ஏனென்றால் , இந்த தேர்தலில் தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்தது.
அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் போன்றவர்கள் பலர் பொது வேட்பாளரை ஆதரித்தனர்.
தமிழ் அரசு கட்சியில் இன்னும் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இப்படி மூன்று அணியாக தமிழ் அரசு கட்சி சிதைந்து போனது.
தமிழ் அரசு கட்சி தமிழர்களுக்கு சுயாட்சி தீர்வை பெற்றுக் கொள்வதற்காக , சமஷ்டி கோரிக்கையை முன்னிறுத்தி தோற்றுவிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி தீர்வை அது முன்னிறுத்தவோ அதனை சார்ந்து செயற்படவோ,அதனை நோக்கிய பேரங்களை நடத்தவோ, பிரசாரங்களில் ஈடுபடவோ இல்லை.
ஒற்றையாட்சியை உறுதி செய்வதிலும், 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைக்குள் தீர்வை தேடுவதிலும் மாத்திரம் அது கவனம் செலுத்தியது.
கட்சியின் இந்த அணுகுமுறை அதன் இப்போதைய நிலைக்கு ஒரு முக்கிய காரணம்.
அடுத்து, தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் ஒரு கட்சி தமிழ் தேசிய நலனை முன்னிறுத்தி ஒரு செயற்பாட்டை முன்னெடுக்கின்ற போது, அதில் இணைந்து கொள்ளாமல் சிங்கள தேசிய கட்சிகளுடன் கைகோர்த்து செயற்படுவதற்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமை அதன் பின்னடைவுக்கு இன்னொரு காரணம்.
தமிழ் அரசு கட்சியின் சிதைவுக்கு இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றைத் தேடிப் பிடித்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டியது அல்லது தீர்க்க வேண்டியது அந்தக் கட்சியின் பொறுப்பு. இவற்றையெல்லாம் செய்யக் கூடிய நிலையில் தமிழ் அரசு கட்சி இருக்கிறதா என்று தெரியவில்லை.
தங்களை தாங்களே கட்டுக் கோப்பான கட்சி, ஜனநாயகம் அதிகம் கொண்ட கட்சி என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் தமிழ் அரசு கட்சியின் எதிர்காலம் எவ்வாறானதாக இருக்கப் போகிறது என்ற கேள்வி இனி வலுவாக எழும்.
ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி தேர்தல் என வரிசையாக தேர்தல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
இந்த ஒழுங்குமுறை மாறலாமே தவிர, அடுத்தடுத்து மூன்று தேர்தல்களை குறுகிய காலத்துக்குள் சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகும்.
அதற்குள் தமிழ் அரசு கட்சி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் , மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும், தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும். இதனை செய்தால் தான் அந்தக் கட்சியால் அடுத்து வரும் தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
இல்லாவிட்டால், இப்போது உள்ள நிலையை விட கீழ்நோக்கி செல்லும் நிலையே உருவாகும்.
ஆனால் தமிழ் அரசு கட்சி எவ்வாறு அடுத்த கட்டத்தை எதிர்கொள்ளப் போகிறது என்பதில் சிக்கல்கள் பல இருக்கின்றன.
தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாசவை வெற்றியாளராக மாற்ற தவறினாலோ, அதற்கு தமிழ் பொது வேட்பாளரின் வாக்குகள் காரணமாக அமைந்தாலோ, தமிழ் அரசுக் கட்சிக்குள் குழப்பத்தை அதிகப்படுத்தும்.
மத்திய குழுவின் தீர்மானத்தின் மீது அதிக அளவில் கேள்விகள் எழுப்பப்படும். அந்த தீர்மானத்தை எடுப்பதற்கு காரணமாக இருந்த சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குரல்கள் தீவிரமடையும்.
அதே சந்தர்ப்பத்தில் மாவை சேனாதிராஜா போன்றவர்களுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களும் தீவிரமாக முன்வைக்கப்படும்.
அதேபோல பொது வேட்பாளருக்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருமளவில் கிடைக்கின்ற சூழல் ஏற்பட்டால், அது தமிழ் அரசு கட்சி அநாதரவாக விடப்பட்ட நிலைக்குள் தள்ளப்பட்டதாக அந்தக் கட்சியினரால் உணரப்படும்.
அடுத்து வரும் தேர்தல்களில் கட்சி மேலும் பின்னடைவை சந்திக்கும் என்ற ஆபத்தையும் அச்சத்தையும் அவர்களுக்குள் உருவாக்கும்.
தமிழ் அரசு கட்சியினால் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புடன் இணைந்து செயற்படவும் முடியாது.
அதற்கு அந்தக் கட்சியினரின் ‘ஈகோ’ இடம்கொடாது..அதேவேளை மாற்றத்தின் தாக்கத்தை அவர்களால் ஜீரணிக்கவும் முடியாது.
ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறும் நிலை ஏற்பட்டால் தமிழ் அரசு கட்சி நிச்சயம் அவருடன் ஒட்டிக் கொள்ளும். அதுநிலைமையை இன்னும் மோசமாக்கும். அந்தக் கட்சிக்குள் அதிருப்தியும் வெறுப்பும் தீவிரமடையும்.
அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றால், தமிழ் அரசுக்கட்சியின் ஒருசிலர் இடைக்கால அமைச்சரவையில் இடம்பெற்றாலும் கூட ஆச்சரியம் இல்லை.
வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட எல்லா தரப்புக்களையும் உள்ள இடைக்கால அமைச்சரவையை அமைப்பதாக அநுரகுமார கூறியிருந்தார்.
அவ்வாறான அமைச்சரவையில் சுமந்திரனுக்கு இடம் அளிக்கப்படுவதோ, அவர் அதில் இணைந்து கொள்வதோ ஆச்சரியத்திற்குரிய விடயமாக இருக்காது.
ஏனென்றால் தாம் அநுரவுடன் கூட்டுச் சேர்வதை அதிகம் விரும்புவதாக சுமந்திரன் கூறியிருந்தார். அவர்களுக்கிடையில் ஒரு கள்ள உறவும் நீடித்து வந்தது.
இப்படி யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் அரசு கட்சி பல சிக்கலான காலகட்டத்தை கடக்க வேண்டி இருக்கும்.
கட்டுக்கோப்பான கட்சி என்று தன்னை தானே கூறிக் கொள்ளும் தமிழ் அரசு கட்சி ஜனாதிபதி தேர்தலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்வியும் இருக்கிறது.
சுமந்திரன் தரப்பு அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்கிறது.
அப்படி நடவடிக்கை எடுப்பதானால் மாவை சேனாதிராஜா , சிறிதரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்களையும் மத்திய குழு உறுப்பினர்கள் பலரையும் வெளியே தூக்கி வீச வேண்டியிருக்கும்.
அவ்வாறு செய்ய முனையும் போது கட்சிக்குள் இரண்டு விடயங்கள் நடந்தேறும்.
ஒன்று தமிழ் அரசு கட்சி முற்று முழுதாக சுமந்திரனின் தனிப்பட்ட கொள்கை மயப்படுத்தப்பட்ட கட்சியாக மாறும். அவரது ஆதரவாளர்கள் நிரம்பிய கட்சியாக மாத்திரம் இருக்கும்.
இரண்டு, தேசிய நீக்கம் செய்யப்பட்ட கட்சியாக மாற்றமடையும். அவ்வாறான நிலையில் தமிழ் அரசு கட்சி பெயருக்கும் செயற்பாட்டுக்கும் பொருத்தம் இல்லாததாக மாறும்.
இந்த இரண்டும் நடந்தேறினால், தமிழ் தேசிய அரசியலில் இருந்து தமிழ் அரசு கட்சி முற்று முழுதாக துடைத்தெறியப்படும். அது முழுமையாக தேசிய அரசியலை பேசுகின்ற கட்சியாக மாறும்.
அது முக்கால் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட ஒரு தமிழ் தேசிய கட்சியின் இறுதிச் சடங்காகவே அமையும்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயன்றால் அது பலத்த குழப்பங்களையும். குத்துவெட்டுகளையும் ஏற்படுத்தும்.
சுமந்திரன் தரப்பினால் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கத்தை கைக்குள் வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியும். அவரது கையொப்பமே வேட்பு மனுக்களில் முக்கியம் என்பதால் வேட்பாளர்கள் தெரிவிலும் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியும்.
அவ்வாறான நிலை வரும் போது, கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் நீதிமன்றம் செல்வது தடை உத்தரவை வாங்குவது போன்ற செயற்பாடுகளில் இறங்கலாம்.
அது தமிழ் அரசு கட்சியை இன்னமும் சிக்கலான நிலைக்கு கொண்டு செல்லும்.
இப்போது சிறிசுதந்திர கட்சியில் யார் தலைவர் , யார் செயலாளர் என்று தெரியாத நிலை இருக்கிறதோ- அதேபோன்ற நிலை தான் தமிழ் அரசு கட்சிக்கும் ஏற்படும்.
தமிழ் அரசு கட்சி தனது கொள்கையில் உறுதியுடன் இருந்திருந்தால் தமிழ் தேசிய நீரோட்டத்தில் ஒத்தோடுகின்ற ஒன்றாக இருந்திருந்தால், அதன் நிலை வேறோரு பரிமாணத்தை எட்டியிருக்கும்.
தவறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் விளைவாக, இன்று, அந்தக் கட்சியை காப்பாற்றுவதற்காக போராடுகின்ற நிலை உருவாகி இருக்கிறது.