மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ.
போர்சுகலின் வெற்றி பாதிக்கப்படவில்லை. ஷூட்அவுட் முறையில் போர்ச்சுகல் அணி யூரோ 2024 இன் காலிறுதிக்கு முன்னேறியது.
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதால் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு கால்பந்து உலகில் பேசுபொருளாகி இருக்கிறது.
யூரோ கோப்பை தொடரில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியின்போது கூடுதல் நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் கோல் அடிக்க முயன்றார். ஆனால் ஸ்லோவேனியா கோல்கீப்பர் அதைத் தடுத்து விட்டார்.
எனினும் இதனால் போர்சுகலின் வெற்றி பாதிக்கப்படவில்லை. ஷூட்அவுட் முறையில் போர்ச்சுகல் அணி யூரோ 2024 இன் காலிறுதிக்கு முன்னேறியது.
இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில், ஷூட் அவுட் முறையில் போர்ச்சுகல் வென்றது.
யூரோ 2024 தொடரில் தனது முதல் கோலை அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ரொனால்டோ.
ஆனால் இதுவரை அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்தப் போட்டியின் ஆட்ட நேரத்தின் கடைசி நேரத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பு ஒன்றை அவர் வீணடித்தார்.
நேராக பந்தை ஸ்லோவேனியா கோல்கீப்பர் ஒப்லாக்கிடம் அடித்ததால், அவர் அதை எளிதாகத் தடுத்துவிட்டார்.
முன்னதாக போட்டி முழுவதும் தலையால் முட்டி பந்தைக் கடத்தும் அவரது பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பல வாய்ப்புகளை அவர் தவறவிட்டதைப் பார்க்க முடிந்தது.
பெனால்ட்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் வெற்றிபெறாமல் போயிருந்தால், அது ரொனால்டோவுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்திருக்கும்.
வெள்ளிக்கிழமை ஹம்பர்க்கில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் பிரான்ஸை எதிர்கொள்கிறது, அதே சமயம் ஸ்லோவேனியா போட்டியை விட்டு வெளியேறுகிறது.
கோல் அடிக்கத் திணறும் ரொனால்டோ
எப்போதும்போல ரொனால்டோவுக்கும் ரசிகர்களின் பலமான வரவேற்பு யூரோ போட்டியில் இருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஸ்லோவேனியாவுடனான போட்டியில் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். தனது உணர்ச்சிகளையும் அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தார்.
கைகளை வானத்தை நோக்கி வீசுவதும், விரக்தியில் காற்றில் குத்துவதும், தவறவிட்ட வாய்ப்புகளைக் கண்டு திகைத்து நிற்பதும் ரொனால்டோவின் வழக்கமாக இருந்தது. ஆனால் அவருக்கான வாய்ப்பு வந்தபோது, அவர் அதைத் தவறவிட்டார்.
கண்ணீர்விட்ட ரொனால்டோ
கூடுதல் நேரத்தில் போர்சுகலுக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. ரொனால்டோ அதை கோலாக்குவதற்கு அடித்தார். ஆனால் ஸ்லோவேனியா கோல்கீப்பர் அதை சிறப்பாகத் தடுத்துவிட்டார்.
29 கோல்களை பெனால்டி மூலம் அடித்திருக்கும் ரொனால்டோ, மிக முக்கியமான தருணத்தில் கோல் அடிக்க முடியாததால் திகைத்து நின்றார். கோலடிக்க முடியவில்லை என்பதை அவராலேயே நம்பமுடியவில்லை என்பது போலக் காணப்பட்டார்.
சில நொடிகளில் கூடுதல் நேரத்தின் பாதி முடிந்துவிட்ட விசில் அடித்ததால், ரொனால்டோ கண்ணீர் மல்க அழத் தொடங்கிவிட்டார். சக வீரர் பல்கின்ஹா அவரை ஆறுதல்படுத்தினார்.
ரொனால்டோ அழுவதை பெரிய திரையில் கண்ட அவரது ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தும் பாடலைப் பாடினர்.
பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வென்ற பிறகு மகிழ்ச்சி
ஆட்ட நேரம் முடிந்த பெனால்ட்டி ஷூட் அவுட் வந்த பிறகு, 3-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் வென்றது.
“முதலில் ஒரு துயரம். பிறகு மகிழ்ச்சி அதுதான் கால்பந்து உங்களுக்குத் தருவது” என்று வெற்றி பெற்ற பிறகு ரொனால்டோ கூறினார்.
“இந்த ஆண்டில் பெனால்ட்டியில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாகத் தேவைப்பட்டபோது ஒப்லாக் அதைத் தடுத்துவிட்டார்” என்று கூறினார் அவர்.
-நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
-இத்தொடரில் கோல் அடிக்காத வீரர்களின் பட்டியலில், 20 முறை கோல் அடிக்க முயற்சி செய்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ரொனால்டோ
-ரொனால்டோ கடந்த எட்டு யூரோ கோப்பை அல்லது உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்ததில்லை
-யூரோ கோப்பை 2024 தொடரின் லீக் சுற்று போட்டிகளில் கோல் அடிக்க தவறியதன் மூலம், இத்தொடரின் லீக் போட்டிகளில் முதல் முறையாக கோலை பதிவு செய்ய தவறியுள்ளார் ரொனால்டோ