அமெரிக்காவின் அடிமடியிலேயே கைவைத்த சீனா... எங்களுக்கா வரி போடுறீங்க? டிரம்ப்புக்கு எகிறும் பிரஷர்!
சீனா, அமெரிக்காவின் இறைச்சி மற்றும் விவசாயத்துறை டார்கெட் செய்துள்ளது.

அமெரிக்காவும், சீனாவும் மாறி மாறி வரிகளை அதிகமாக விதித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் தொடங்கி உள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவின் விட்டு விட்டு விவசாயத்துறையை டார்கெட் செய்து சீனா அதிகப்படியான வரிகளை அதிரடியாக விதித்து வருகிறது. அமெரிக்காவின் டெக் உள்பட பிற உற்பத்தி சார் துறைகளை விட்டு விட்டு சீனா ஏன் விவசாய துறையை குறிவைத்து வரிகளை விதித்து வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் உண்மையில் அதன் பின்னணியில் சீனா மெகா பிளானை கையில் வைத்துள்ளதோடு, அமெரிக்கா மக்கள் மூலமாகவே டொனால்ட் டிரம்புக்கு பிரஷரை கொடுக்க திட்டமிட்டுள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது எப்படி சாத்தியம்? உண்மையில் சீனாவின் பிளான் என்ன? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக செயல்பட்டு வரும் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக வரிகளை விதித்து வருகிறார். அமெரிக்காவின் பொருட்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் விதிப்பதுபோல் அதற்கு நிகராக டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு வரிகளை விதித்து வருகிறார். டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆனதுமே தலா 10 சதவீதம் என்று மொத்தம் 20 சதவீதம் வரை சீனாவுக்கு அவர் வரிகளை விதித்தார்.
அதன்பிறகு கடந்த 2ம் தேதி இந்தியா உள்பட பல நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். நம் நாட்டுக்கு டொனால்ட் டிரம்ப் 26 சதவீதம் கூடுதல் வரியை விதித்த நிலையில் சீனாவுக்கு மீண்டும் 34 சதவீத வரிகளை விதித்தார். இதனால் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்கா, சீனாவுக்கு 54 சதவீதம் வரை கூடுதல் வரிகளை போட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா வரி மோதல் இது சீனாவை கோபத்தின் உச்சிக்கே செல்ல வைத்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு முறை என்பது ஏற்க முடியாதது. ஒரு தலைபட்சமானது. இதனை கண்டு சீனா பயப்படாது. அமெரிக்காவுடன் எந்த வகையான போருக்கும் தயார். வர்த்தக போராக இருந்தாலும் சரி, நேரடி போராக இருந்தாலும் சரி மோதிப்பார்க்க தயார் என்று சீனா அறிவித்தது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கும் கூடுதல் வரிகளை விதிக்க தொடங்கியது சீனா.
அதன்படி முதற்கட்டமாக சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் சோயா பீன்ஸ், மாட்டு இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு 10 சதவீதமும் கோதுமை, மக்காச்சோளம், பருத்தி, கோழி இறைச்சிக்கு 15 சதவீதமும் சீனா வரி போட்டது. கடந்த 2ம் தேதி அமெரிக்கா 34 சதவீத வரிகளை விதித்த நிலையில் இப்போது சீனா மீண்டும் அமெரிக்காவுக்கு 34 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த புதிய வரி என்பது ஏப்ரல் 10ம் தேதி முதல் அமெரிக்கா பொருட்களுக்கு நடைமுறையில் வரும் என்று சீனா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் வெடித்துள்ளது. போட்டி போட்டுக்கொண்டு பதிலடி தரும் வகையில் இரு பெரும் வல்லரசு நாடுகளின் இந்த நடவடிக்கை தான் வர்த்தக போருக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
விவசாய பொருட்கள் டார்கெட்
இந்நிலையில் தான் இப்போது அனைவருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது சீனா ஏன் அமெரிக்காவின் விவசாய பொருட்களை குறிவைத்து வரி விதிப்புகளை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் டெக், உற்பத்தி, பொருளாதாரம் சார்ந்த பல துறைகளை விட்டு விட்டு சீனா விவசாய துறை மீது டார்கெட் செய்வது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அமெரிக்காவை பொறுத்தவரை விவசாயத்துறை தொடர்ந்து செழித்து வருகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் விவசாயம் பெரிதும் பங்கு வகித்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விவசாய பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் மட்டும் இறைச்சியில் 20 சதவீதம் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
சீனா வாங்குவது என்ன?
சீனாவை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து 29.50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விவசாய பொருட்களை இறக்குமதி செய்தது. இது முந்தைய 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது 14 சதவீதம் குறைவாகும். ஆனாலும் கூட அமெரிக்காவின் மிக முக்கிய வாடிக்கையாளராக சீனா தான் இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து சோயா பீன்ஸ், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோதுமை, சோளம் உள்ளிட்டவற்றை சீனா அதிகமாக வாங்கி வருகிறது. குறிப்பாக சோயபீனை அதிகமாக அமெரிக்காவிடம் இருந்து சீனா வாங்குகிறது.
2024ம் ஆண்டில் அமெரிக்கா தனது சோயாபீன் ஏற்றுமதியில் பாதியை சீனாவுக்கு அனுப்பி உள்ளது. மொத்தம் 12.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு சோயாபீன் சென்றுள்ளதாக தரவுகள் சொல்கின்றன. சோயபீனை தொடர்ந்து அடுத்த இடத்தில் பருத்தி உள்ளது. அமெரிக்காவிடம் இருந்து பருத்தி 1.5 மில்லியன் டாலர் அளவுக்கும், தானிய சோளம் 1.3 பில்லியன் டாலர் அளவுக்கும், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என்று ரூ.1 பில்லியன் டாலர் அளவுக்கும், ஷெல் பிஸ்தாக்கள் 627 மில்லியன் டாலர் அளவுக்கும் சீனா வாங்கி உள்ளது.
டிரம்புக்கு பிரஷர் போடும் சீனா
இதன்மூலம் அமெரிக்காவின் பெரிய வாடிக்கையாளராக சீனா இருக்கிறது. இப்படியான சூழலில் தான் பணத்தை தவிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பெரும் அழுத்தத்தை கொடுக்க சீனா முடிவு செய்துள்ளது. இதனால் தான் சீனா, அமெரிக்காவின் இறைச்சி மற்றும் விவசாயத்துறை டார்கெட் செய்துள்ளது. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் அமெரிக்காவின் பெரும் நகரங்களை விட்டுவிட்டு புறநகர் பகுதிகளில் அதிகமான மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர். இந்த இடங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரும் ஆதரவு உள்ளது.
இதனால் இறைச்சி மற்றும் விவசாய பொருட்கள் மீது சீனா அதிக வரிகளை விதிக்கும்பட்சத்தில் புறநகர் பகுதியில் உள்ள கால்நடை பண்ணை மற்றும் விவசாயம் செய்யும் அமெரிக்க மக்கள் பாதிப்படைவார்கள். இது டொனால்ட் டிரம்புக்கு பிரஷரை ஏற்படுத்தும். இதனை மையப்படுத்தி தான் சீனா, அமெரிக்காவின் விவசாய துறையை டார்கெட் செய்து கூடுதல் விதிகளை விதிக்க தொடங்கி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.