புதுச்சேரியில் பிரான்ஸ் துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
.
புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த ஊழியா்கள் வெளியேற்றப்பட்டு போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே உள்ள மரைன் வீதியில் பிரான்ஸ் துணைத் தூதரகம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். தூதரக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரியகடை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி கிழக்குப் பிரிவு எஸ்.பி. லட்சுமி சௌஜன்யா தலைமையில் ஏராளமான போலீஸாா் பிரான்ஸ் துணைத் தூதரக அலுவலகத்துக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினா், 2 போலீஸ் மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்புத் துறையினா் உள்ளிட்டோா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என்பது தெரிய வந்தது.
ஜிப்மரை தொடா்ந்து மிரட்டல்: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பிரான்ஸ் துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோரிக்கை: வெடிகுண்டு கண்டறியும் சோதனைக்கான நவீன சாதனங்கள் புதுச்சேரியில் இல்லை என்றும், சோதனையில் ஈடுபடும் போலீஸாா் பாதுகாப்பு கவசமின்றியே பணிபுரியும் நிலையுள்ளது. எனவே, வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக்கு தேவையான உபகரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே வீதியின் முகப்பில் கயிறு கட்டியும், கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதியிலிருந்து பிரான்ஸ் துணைத் தூதரக அலுவலகத்துக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீஸாா் தடுப்புகள் ஏற்படுத்தி கண்காணித்தனா்.