பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் ஆயுதக்குழுவின் தாக்குதலில் 39 பேர் பலி- என்ன நடந்தது?
.
பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தானின் முஸாகேல் மாவட்டத்தில் ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த 22 பயணிகள் கொல்லப்பட்டனர்.
வாகனங்களில் சென்று கொண்டிருந்த நபர்களை கட்டாயமாக வெளியேற்றி அவர்களின் அடையாள அட்டைகள் சோதனையிடப்பட்ட பிறகு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் இரவு முழுவதும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஏற்கனவே அந்த பகுதியில் வகுப்புவாதம், பிரிவினை மற்றும் இன வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் முயற்சித்து வரும் சூழலில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
வாகனங்களில் பயணித்தவர்களின் அடையாள அட்டைகளை சோதனையிட்ட ஆயுதமேந்திய நபர்கள், பஞ்சாப் மாகாணத்தில் இருந்து வந்தவர்களை மட்டும் வாகனங்களில் இருந்து வெளியேற்றி சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும், அவர்களின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மூத்த உள்ளூர் அதிகாரியான நஜிபுல்லா காக்கர், இந்த விவகாரத்தில் 30 முதல் 40 ஆயுதமேந்திய நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
“22 வாகனங்களை அவர்கள் நிறுத்தியிருக்கின்றனர்,” என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.
“பஞ்சாப் மாகாணத்தை நோக்கி செல்லும் வாகனங்களும், அங்கிருந்து வரும் வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. அதில் பஞ்சாப் மாகாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், “பொதுமக்கள் உடையில் பயணித்த ராணுவத்தினர்தான் தங்களின் இலக்கு” என பலோச் விடுதலைப் படை கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
பலோச் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பலோச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு முன்பு கூறியிருந்தது. மேலும், ”ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிரான சண்டை இது” என்று கூறியிருந்தது.
வளமான பகுதியாக பலுசிஸ்தான் இருந்தாலும் அதிகமாக வளர்ச்சியடையாத பகுதியாகவே இந்த பகுதி உள்ளது
மற்ற மாகாணங்களைக் காட்டிலும் அதிக வளம் கொண்ட பகுதியாக பலுசிஸ்தான் உள்ளது
பலுசிஸ்தானில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், அதனை முழுமையாக முடக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது பலோச் விடுதலைப் படை.
“இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனங்களையும் வருத்தத்தையும்” தெரிவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மாகாணங்களில் மிகவும் பெரியது பலுசிஸ்தான். அதிக வளங்களை கொண்ட மாகாணமாக இருக்கின்ற போதும் வளர்ச்சியடையாத ஒரு பிராந்தியமாக அது உள்ளது.
பலுசிஸ்தானில் பணியாற்றி வரும் பாகிஸ்தானின் பிற பகுதிகளை சேர்ந்த பஞ்சாபிகள் மற்றும் சிந்திகள் மீது பலோச் விடுதலைப் படை மற்றும் இதர பிரிவினைவாத அமைப்புகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
இவர்கள் இங்குள்ள வெளிநாட்டு எரிசக்தி நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்குள்ள வளங்களை பயன்படுத்தி ஆதாயம் காணும் எரிசக்தி நிறுவனங்கள் அதில் இருந்து கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொள்வதில்லை என்று கூறி அந்த நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் மாதமும் இதே போன்ற சம்பவம் பலுசிஸ்தானில் நடைபெற்றது. அங்கே பேருந்தில் பயணித்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு 9 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில், பலோச் விடுதலைப் படை, காவல் நிலையம், பாதுகாப்பு படையினர் முகாம்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் பலோச் விடுதலைப் படையை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.