இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி,கண்ணை மூடிக்கொண்டு பால்குடித்த கதை!
அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சி காரணமாக இடம்பெற்ற ஒரு செயற்பாடு

இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் யாரையும் வளர விடுவதற்கு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அச்சம் காணப்பட்டமையினால், அவர் அதனை விரும்ப மாட்டார் என அந்த அமைப்பின் முன்னாள் தளபதியும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழ் உடனான நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை அரசாங்கத்தற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இந்த காலப் பகுதியிலேயே முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்திருந்தனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் பிரிந்தமையானது, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சி காரணமாக இடம்பெற்ற ஒரு செயற்பாடு என பல்வேறு தரப்பினரும் பேச ஆரம்பித்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், கருணாவிடம் வினவியது.
”சூழ்ச்சி என்று கூறுவதை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்று முழுதாக தவறான விடயம். உண்மையிலேயே எங்களுடைய தளபதிகளும், போராளிகளும் நீண்டகாலமாக வெறுப்படைந்திருந்தார்கள்.
வடக்கை பொருத்தவரையில் தலைவருக்கு நெருக்கடி வருகின்ற பொழுதெல்லாம், எங்களது அணி தான் அவரை காப்பாற்றியது. மணலாறு சண்டையாக இருக்கலாம். மட்டக்களப்பு போராளிகள்தான் அவரை காப்பாற்றினார்கள். அதேபோன்று தலைவரின் மெய் பாதுகாவலர்களை கூட நாங்கள் தான் தெரிவு செய்து அனுப்புவோம். அந்தளவிற்கு காப்பாற்றினோம்.
அதன் பிறகு போராட்ட கட்டமைப்பு. 25திற்கும் அதிகமான போராட்ட கட்டமைப்புக்கள் இருந்தாலும் அதில் ஒரு கட்டமைப்பில் கூட கிழக்கு மாகாண போராளிகள் வரவே இல்லை. கடற்புலியாக இருக்கலாம். புலனாய்வு துறையாக இருக்கலாம். அரசியல் துறையாக இருக்கலாம். அந்த துறைகளில் கிழக்கு மாகாண போராளிகளை காண முடியாது.
அது அவர்கள் திட்டமிட்டு செய்தார்களா? அல்லது மனம் இடம் கொடுக்காமல் தானாக வளர்ந்ததா? என்பதை நாங்கள் புரிந்துக்கொள்ளவில்லை.
இருந்தாலும், தலைவரிடம் நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். இந்த சமநிலையை பேணாவிட்டால், பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பிருக்கின்றது என் கூறினேன். விடுதலைப் புலி கட்டமைப்பு என்பது அரசுக்கு சமமான கட்டமைப்பாக இருந்தது. கருணா அம்மானை தவிர வேறு எவருமே மேல் பதவியில் இருக்கவில்லை. எத்தனையோ பதவி நிலைக்கான நிர்வாக கட்டமைப்புக்கள் இருந்தும், இருக்கவில்லை.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே கிழக்கு மாகாண போராளிகள் இணைந்து கொண்டார்கள். அவர்கள் காலம் கடந்து இணையவில்லை. எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதே அவர்களும் இணைந்துக்கொண்டார்கள். அந்த சமநிலை பேணாமை முக்கியமான காரணமாக இருந்தது.” என அவர் கூறுகின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்திற்குள் சந்தேகம் எழ ஆரம்பித்ததாகவும் கருணா அம்மான் கூறுகின்றார்.
”விடுதலைப் புலிகள் தலைமைத்துவத்திற்குள் சந்தேகங்கள். ஏற்கனவே மாத்தையா என்கின்ற தளபதி தலைவர் பிரபாகரன் அவர்களை கொலை செய்வதற்கு முற்பட்ட போது, அதிலிருந்து அவர் தப்பித்தார். அது உண்மையாக நடந்த ஒன்று. அதற்கு பிறகு மாத்தயா அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு, 27 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அதனை வழங்கியது. அதற்கு பிறகு தலைவருக்கு எவரையும் வளர விடுவதற்கு அச்சம் இருந்தது. எவரும் வளர்ந்து வருவதை அவர் விரும்பமாட்டார். ஏனென்றால், தனக்கு ஏதாவது ஆபத்து வரும் என்ற காரணமாக இருக்கலாம்.
விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது தலைவர், இரண்டாம் கட்ட தலைவர் என்ற அடிப்படையில் எவரும் இருக்கவில்லை. வடப் பகுதி மக்கள் எல்லாம் எங்களுடைய கிழக்கு போராளிகளை ஜெயந்தன் படை என்று அழைப்பார்கள். அவர்கள் யுத்தங்களுக்கு செல்லும் போது வடப் பகுதி மக்கள் பாரிய வரவேற்பை கொடுத்தார்கள். குளிர்பானங்கள் எல்லாம் வழங்கி வரவேற்பை வழங்குவார்கள்.
அடுத்த நாள் அவர்கள் வெற்றியுடன் திரும்புவார்கள். இது அங்குள்ள மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகின்ற விடயமாக மாறியது. சண்டை பிடிக்கின்றது என்றால் கிழக்க போராளிகள் தான், ஜெயந்தன் படை தான் என்று வடப்பகுதி மக்கள் பேச ஆரம்பித்தார்கள். தலைவரே பல தடவைகள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இது ஏனைய தளபதிகளுக்கு பொறாமை தன்மையை ஏற்படுத்தியது. திட்டமிட்டு சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள் எப்படியாவது கருணா அம்மான், கருணா அம்மானின் தளபதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அதற்கு காரணமாக அமைந்தது அந்த பேச்சுவார்த்தைகயில் கையெழுத்திட்ட சம்பவம். அந்த சம்பவத்தை அனைவரும் சேர்ந்து தூண்டினார்கள்.
அதன்பிறகு இதில் இருப்பதில் அர்த்தம் இல்லை என்று நாங்கள் ஒதுங்கி வந்தோம். மற்றபடி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையின் பின்னர் கருணா அம்மான் வெளிநாடு சென்ற பின்னர், வெளிநாடுகளிலுள்ள சுகபோகங்களை பார்த்து, அல்லது ரணில் விக்ரமசிங்கவின் சூழ்ச்சியில் மாட்டினார் என்பது எல்லாம் போலியான விடயம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதே சொகுசான இயக்கம் தான். அங்கே இல்லாத வசதி ஒன்றுமே இல்லை. கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் வசதி வாய்ப்புகளும் இருந்தன. அது தவறாக விடயம்.
ஆனால், நாங்கள் ஆயுதங்களை கலைந்ததன் பின்னர் எங்களுடைய தளபதிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக என்னோடு தோளோடு தோள் நின்றவர் பிள்ளையான். தொப்பிகல காட்டிலிருந்து இறுதியாக வெளியேறியது நாங்கள் இருவரும் தான்.
குகனேசன் என்ற ஒரு போராளியுடன் நாங்கள் மூவரும் தான் அனைத்து போராளிகளையும் வீடுகளுக்கு அனுப்பி அதனை உறுதி செய்ததன் பின்னர் இறுதியாக வெளியேறியவர்கள் நாங்கள். நானும், பிள்ளையானும் ஒரே வாகனத்தில் கொழும்பிற்கு பயணித்தோம்.
பாதுகாப்பிற்காக எனது நண்பர் அலி சாயிர் மௌலானாவை அழைத்தது உண்மை. அவர் ரணில் விக்ரமசிங்க அனுமதியுடன் எங்களை பாதுகாப்பாக தலைநகருக்கு கூட்டி கொண்டு போனார்.
அது உண்மையான விடயம். அதனால், அவர் பல பாதிப்புகளை சந்தித்தார். விடுதலைப் புலிகளின் கொலை முயற்சிகளில் தப்பி அரசியல் அழுத்தம் காரணமாக பாராளுமன்ற பதவியையும் இழந்து அமெரிக்கா சென்ற வரலாறும் இருக்கின்றது. அவரை இன்னும் நாங்கள் மதிக்கின்றோம். சூழ்ச்சியின் அடிப்படையில் பிரிந்தது என்பது முற்று முழுதாக போலியான விடயம்.” என கருணா அம்மான் கூறுகின்றார்.
கருணா மீதான பிரித்தானியா தடை
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் இன்றும் அவ்வாறே காணப்படுகின்றன.
வலிந்து காணாமலாக்கப்பட்டார் விவகாரம், யுத்தக் குற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இன்றும் அவதானம் செலுத்தி வருகின்றன.
இந்த ஆண்டு பிரிட்டன் அரசாங்கம் மூன்று பாதுகாப்பு தளபதிகளுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பில் தளபதியாக செயற்பட்ட கருணா அம்மானிற்கும் தடை விதித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், கருணா அம்மானிடம் கேள்வி எழுப்பியது.
”இயக்கத்தை தடை செய்தமைக்கு சமமான தடையாக தான் இதனை பார்க்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தாலும் இந்த தடையை அவர்கள் நிச்சயமாக விதித்திருப்பார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது நான் அந்த குற்றங்களை செய்ய வில்லை.
பிரிட்டன் அரசாங்கத்தை இந்த இடத்தில் வன்மையாக கண்டிக்கின்றோம். அவர்கள் ஒரு ஜனநாயக நாடு. ஏற்கனவே எனக்கு ஒரு தீர்ப்பை வழங்கியவர்கள். ஆகவே நீதியை நீதியாக அவர்கள் சிந்திக்க வேண்டும். சிறந்த நீதியாக அவர்கள் அதனை சிந்தித்திருந்தால் என் மீது தடையை விதிக்க முடியாது. குற்றமற்றவர் என்று நிருபித்து தான் என்னை நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
நாங்கள் நாட்டிற்கு வந்து ஜனநாய நீரோட்டத்தில் இணைந்து அரசியல் ரீதியில் மக்கள் மத்தியில் வேலை செய்கின்ற போது இவ்வாறான அவதூறுகளை விடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற சக்தியை உருவாக்கியதன் பிறகுதான் இந்த தடையை அவர்கள் விதித்தார்கள். இங்கு தமிழ் மக்களின் வளர்ச்சி இருக்கக் கூடாது என்பதில் அவர்களும் கவனமாக இருக்கின்றார்கள்.” என கருணா அம்மான் கூறுகின்றார்.
இலங்கை பாதுகாப்பு தளபதிகள் உள்ளிட்ட நால்வர் மீது பிரிட்டன் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் அறிவிப்பொன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கையில் முன்னாள் மூன்று தளபதிகள் என கூறியுள்ள போதிலும், கருணா அம்மானின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்திருந்த நிலையில், அவரது சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக கருணா அம்மானே பாதுகாப்பு படையால் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
இந்த நிலையில். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ராணுவத்திற்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியதாக கூறப்படும் கருணா அம்மானின் பெயர், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து பிபிசி தமிழ், அவரிடம் கேள்வி எழுப்பியது.
”பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் அதில் சில தவறிழைத்திருக்கின்றது என்று தான் கூறுவேன். என்னை பொருத்த வரையிலும், பிள்ளையானை பொருத்தவரையிலும் ஆயுத கலாசாரத்தை மாற்றியமைத்து ஜனநாயக நீரோட்டத்திற்கு போராளிகளையும், மக்களையும் ஊக்கப்படுத்தியவர்கள் அல்லது மாற்றி காட்டியவர்கள் நாங்கள்தான்.
ஆகவே இலங்கை அரசாங்கம் எங்கள் மீது நிறைய கடமைப்பாடு கொண்டுள்ளது. ஏனென்றால், எவராலும் செய்ய முடியாத சாதனையை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்.
அதன்பின்னர் தான் வடப் பகுதியிலும் அரசியல் ரீதியில் மாற்றம் வந்தது. பல இடங்களில் மாற்றம் வந்தது. 30 வருடங்களில் வெறுப்பிலிருந்த மக்கள் இன்று அரசியலுக்குள் வருகைத் தந்து, ஆயுத கலாசாரம் ஒழிக்கப்பட்டு இன்று மக்கள் எல்லாம் நிம்மதியாக வாழ்கின்ற நிலைமைக்கு அத்திவாரம் இட்டவர்கள் நாங்கள்தான்.
இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஜே.வி.பியினர் தமிழ் மக்களுக்கு விரோதமான முடிவுகளைதான் எடுப்பார்கள். அன்று இணைந்திருந்த வடகிழக்கை பிரித்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான். தமிழ் மக்களை கூறு போட்டவர்கள். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
அவர்கள் தமது பழைய வரலாறுகளை மறக்கின்றார்கள். எத்தனையோ சிறைச்சாலைகளில் ஜே.வி.பி போராளிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
மாறிவந்த அரசுகள் மஹிந்த அரசாக இருக்கலாம். சந்திரிகா அரசாக இருக்கலாம். மன்னிப்பு கொடுத்த வரலாறும் இருக்கின்றது. ஜே.வி.பிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது, அப்படியிருக்கும் போது ஏன் எங்களுடைய அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது.
அவர்கள் ஆயுததாரிகளும் இல்லை. ஆதரவாளர்கள் என்ற வகையில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளே இருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கான பிரச்னையில் அவர்கள் ஒதுங்கி நிற்பதற்கு தான் விரும்புகின்றார்கள். இதனால் சர்வதேசத்தில் பல வாய்ப்புக்களை இழந்துக்கொண்டிருக்கின்றார்கள்.” என கருணா அம்மான் கூறுகின்றார்.
2009ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், 19-ம் தேதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல், நந்திக்கடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த நிலையில், கருணா அம்மான் அந்த உடல் பிரபாகரனின் உடல் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலுக்கு என்ன நேர்ந்தது என்பது இன்று வரை எவருக்கும் தெரியாத ஒன்றாக காணப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டியவரும், அப்போதைய அரசாங்கத்தின் பிரதான பங்கை வகித்தவருமான கருணா அம்மானிடம், பிபிசி தமிழ் வினவிது.
”ஆம். உண்மையில் இதுவொரு சிறந்ததொரு கேள்வி. புலம்பெயர்ந்து வாழ்கின்ற பலர் என்னிடம் தொலைபேசியூடாக இதனை கேட்பார்கள். நான் தெளிவான பதில்களை அவர்களுக்கு கூறியிருக்கின்றேன்.
தலைவர் பிரபாகரனின் உடலத்தை அடையாளப்படுத்துவதற்காக சென்றிருந் தேன். அடையாளப்படுத்திவிட்டு வந்த பின்னர் என்ன நடந்தது என்பது உண்மையிலேயே எனக்கு தெரியாது.
அவரின் உடல் இருந்த இடத்தை சென்று பார்த்து அடையாளங்களை அடையாளப்படுத்தி அவர் மரணித்த செய்தியை நான் உலகத்திற்கு தெரிவித்தேன்.
அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது உண்மையிலேயே எங்களுக்கு தெரியாத விடயம். அந்தளவிற்கு அதிகாரம் மிக்க வகையில் செயற்படுவதற்கு அப்போது காலமும் இருக்கவில்லை.
அந்த நேரம் ராணுவ மேலாதிக்கம் என்பது மேலோங்கியிருந்தது. ராணுவ கட்டமைப்பை உடைத்துக் கொண்டு அதனை ஆராய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இருக்கவில்லை என்பது தான் உண்மையான விடயம். உடல் எங்கே என்பது எனக்கு தெரியாத விடயம்.” என கருணா அம்மான் பதிலளித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற சில குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை, ஈஸ்டர் தாக்குதல் போன்றவற்றின் பின்னணியின் பிள்ளையான் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், பிள்ளையானிடம் கேள்வி எழுப்பியது.
இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் பிள்ளையான் மறுத்திருந்தார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், தான் சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்டிருந்த தருணத்திலேயே, ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்ததாக கூறிய அவர், சிறையிலுள்ள ஒருவரினால் எவ்வாறு இவ்வாறான தாக்குதலை திட்டமிட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கிலிருந்து நீதிமன்றம் தன்னை விடுவித்து விடுதலை செய்திருந்ததாகவும் பிள்ளையான் கூறுகின்றார்.
இதேவேளை, போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இந்திய அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அந்த அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் தெரிவிக்கின்றார்.
”இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகளை அளித்து, அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்ததில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமை வகித்திருந்தார்.
இந்தியாவில் பயிற்சி முகாம்கள் மேற்கொள்ளப்பட்டது. நானும் இந்திய முகாமில் பயிற்சி பெற்ற ஒருவர்.
சர்வதேச நாடுகளை பொருத்த வரையில் மேற்குலக நாடுகளை பொருத்த வரையில் இந்த போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற வகையில் உதவி செய்தார்களே தவிர, தனிநாடு அமைப்பதற்கு அவர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
பிரிட்டன் அரசாங்கமாக இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கலாம். அனைவருமே போராட்டத்தை நிறுத்தவே முயற்சித்தார்கள்.
தனிநாட்டு கோரிக்கையை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், பல முறை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர் என்ற விதத்தில் அவர்கள் ஒருபோதும் தனிநாட்டு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறந்த தீர்வு திட்டத்தின் ஊடாக மாகாண சபைகளை பலப்படுத்தி, வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தை பலப்படுத்தும் திட்டத்தில் தீவிரமாக இருந்தார்கள்.
அன்றைய சூழலில் சமஷ்டி முறைக்கு சமமாக ஒரு தீர்வு திட்டத்தையே நாங்கள் முன்வைத்து பேசியிருந்தோம். அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலகம் ஒரு முடிவெடுத்திருந்தது பயங்கரவாத இயக்கமாக இருக்கின்ற எந்தவொரு போராட்ட இயக்கத்தையும் அழிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது”, என்று கூறினார் கருணா அம்மான்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்த சில தலைவர்கள் காரணமாக கருணா அம்மனால் தமிழர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை
தொடர்ந்து பேசிய அவர், “அதிலிருந்து தப்பித்து பாதை மாற்றி பயணிக்க வேண்டும் என்பதில் அன்டன் பாலசிங்கம் அண்ணனும் நானும் மிகவும் கவனமாக இருந்தோம். விடுதலைப் புலிகள் இயக்கத்தை நேரடியாக வந்து அழிப்பதற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள்.
அந்த கட்டத்தில் தான் அந்த பேச்சுவார்த்தை வந்து சமஷ்டி முறையான தீர்வை எடுப்போம் என்று பேசியிருந்தோம். அதை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் ஏனைய சில தளபதிகள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் பிரிந்தோம்.
ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு நோர்வே நாடு கேட்டுக்கொண்டது. சமஷ்டி முறையிலான தீர்வை பற்றி பரிசீலிப்போம் என்ற வசனம் மாத்திரமே இருந்தது. வேறு ஒன்றுமே இல்லை. அது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றோ அல்லது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றோ அதில் இருக்கவில்லை.
அதில் கையெழுத்து வைக்க நான் தூண்டினேன். அன்டன் பாலசிங்கம் அண்ணனிடம் சொன்னேன். அண்ணன் இதில் கையெழுத்து வைப்போம் என்று சொன்னேன். அதில் கையெழுத்து வைத்தால் தான் தற்போதுள்ள சர்வதேச அழுத்தத்தை மாற்றி அமைத்து, ராஜதந்திர ரீதியாக முன்நகர்த்த முடியும் என சொன்னேன்.
அதை தலைவரிடம் கொடுத்த பின்னர் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆத்திரமடைந்து அதை வீசி எறிந்து தளபதிகளை அழைத்து இவர் தான் துரோகம் செய்து விட்டார். இவர் தான் போராட்டத்தை விற்றுவிட்டு வந்து விட்டார் என் மீது குற்றம் சுமத்தினார்கள். அதன்பின்னர் பேச்சுவார்த்தைகளிலிருந்து ஒதுங்கியிருக்க முடிவெடுத்தேன்.
அதன்பிறகு அவர்களே எங்களை ஒதுக்கி வைத்தார்கள். அது தான் பிரிவுக்கு காரணமாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து தனி மக்கள் பிரச்னைக்கு முடிவை கொடுக்கலாம் என்பது முடியாத காரியம். புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் அதிகளவில் வாழ்கின்ற இடம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகள் அந்த நாட்டு தலைவர்களின் அழுத்தங்களை இங்கு கொண்டு வருகின்ற போதுதான் இங்கு மாற்றத்தை உருவாக்க முடியும்.
அந்த நாட்டு அரசத் தலைவர்களின் அணுகு முறையை எங்களது நாட்டு தலைவர்கள் சரியாக அணுகவில்லை. அதற்கான வாய்ப்பும் இருக்கவில்லை. இவர்கள் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர். அதைவிடுத்து, தமிழ் மக்களுக்காக தீர்வை பற்றி கதைப்பது இல்லை.
இது புறையோடிபோன பிரச்னை. இதை கிளறி பிரச்னையை ஏற்படுத்தினால், எந்தவித தீர்வும் வர போவதில்லை.
இந்தியாவையும் நாங்கள் தவிர்க்க முடியாது. அண்டைய நாடான இந்தியா ஒரு பாரிய நாடாக இருக்கின்றது. இந்தியாவை மீறி எந்தவொரு நாடும் எங்களது நாட்டிற்குள் நுழைவதற்கு விரும்ப மாட்டார்கள்.
அழுத்தங்களை கொடுப்பார்களே தவிர, நுழைவதற்கு விரும்ப மாட்டார்கள். சீனா ஒருபோதும் எமது பிரச்னையில் தலையீடு செய்ய போவதில்லை. அவர்கள் வர்த்தக ரீதியிலேயே எங்களை பார்ப்பார்கள்.” என கருணா தெரிவிக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான பலம் வாய்ந்த கட்சியுடன் இருந்த ஒருவர் என்ற வகையில், ஏன் தமிழர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என பிபிசி தமிழ் கருணாவிடம் கேள்வி எழுப்பியது.
தாம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் 13வது தீர்வு திட்டத்தை பற்றி பேசியதாகவும், அதற்காக 13 பிளஸ் திட்டத்தை வழங்குவதாக அவர் பதில் வழங்கியதாகவும் கருணா குறிப்பிடுகின்றார்.
தமது அழுத்தங்கள் காரணமாகவே 13ஐ விடவும், 13ஐ தாண்டிய அதிகாரங்களை வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியதாக அவர் கூறினார்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்த சில தலைவர்கள் காரணமாக அவரால் அதனை செய்ய முடியவில்லை என கருணா குறிப்பிடுகின்றார்.
பிள்ளையான் கைது
இதற்கிடையே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் உறுதி செய்தனர்.
பிபிசி