எஸ்.பி.பி-க்கு தொண்டை கட்டியதால் கிடைத்த வாய்ப்பு; கமல்ஹாசன் படத்தால் ஹிட் ஆன மலேசியா வாசுதேவன்!
.
தமிழ் சினிமாவில், பல ஹிட் பாடல்களை பாடியிருந்த மலேசியா வாசுதேவன், தொடக்கத்தில் வாய்ப்புக்காக முயற்சி செய்துகொண்டிருந்தபோது, எஸ்.பி.பிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவர் பாடிய ஒரு பாடல் பெரிய வெற்றியை பெற்று அவருக்கு மேலும் வாய்ப்புகளை கொடுத்துள்ளது.
ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகிற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் நிலைத்திருக்கும் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இவர், கிராமம் சார்ந்த கதைகள் மற்றும் நகரம் சார்ந்த கதைகள் என பல வகையான கதைளை இயக்கி இயக்குனராக பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.
இவரது உதவியாளர்கள் பலரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இணைந்திருக்கின்றனர்.
இப்படி பல சாதனைகளை படைத்துள்ள பாரதிராஜா முதலில் இயக்கிய படம் 16 வயதினிலே. 1977-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
கண்ணதாசன், கங்கை அமரன், ஆலங்குடி சோமு ஆகியோர் இந்த படத்தில் பாடல்கள் எழுதியிருந்த நிலையில், கண்ணதாசன் எழுதிய 3 பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அதில் ஒரு பாடல்தான் ‘’செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா’’ என்ற பாடல். இந்த பாடலை மலேசியா வாசுதேவன், பி.சுசீலா இணைந்து பாடியிருந்தனர். உண்மையாக இந்த பாடலை முதலில் பாட இருந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன்.
இந்த பாடல் பதிவின்போது, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் லேட்டாக வந்துள்ளார்.
அதே சமயம் அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால், அவரால் பாட முடியாத நிலையில், இளையராஜாவும், பாரதிராஜாவும் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பியடி இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் மலேசிய வாசுதேவனை பாட வைக்க முடிவு செய்து, இளையராஜா அவருக்கு பாட்டு சொல்லி கொடுத்துள்ளார். அப்போதே கமல்ஹாசனுக்கு பாட போர இந்த பாட்டு உனக்கு பெரிய லைப் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
இளையராஜா சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு மலோசியா வாசுதேவன் பாடிய அந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காலத்தால் அழியான ஒரு பாடலை நிலைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.