யுக்ரேன் இந்த ஏவுகணையை முழு அளவில் சுதந்திரமாக பயன்படுத்த ரஷ்யா எதிர்ப்பு ஏன்?
.
ரஷ்ய எல்லைக்குள் ஸ்டார்ம் ஷாடோ (Storm Shadow missiles) எனப்படும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கு யுக்ரேனுக்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஏவுகணைகள் யுக்ரேனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்நாட்டில் எல்லைக்குள் மட்டுமே இது பயன்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று யுக்ரேன் கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவிற்குள் உள்ள அந்நாட்டின் ராணுவ தளங்களை தாக்க யுக்ரேன் அனுமதி கோரி வருகிறது.
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்த ஏவுகணைகளை அவ்வாறு பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்காதது ஏன்? இந்த ஏவுகணைகள் ரஷ்யா –
ஸ்டார்ம் ஷாடோ ஏவுகணை என்றால் என்ன?
ஸ்டார்ம் ஷாடோ ஏவுகணை எனப்படும் நீண்ட தூர ஏவுகணை என்பது ஒரு ஆங்கிலோ-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பு ஆகும். அதனைக் கொண்டு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்க முடியும். பிரெஞ்சு நாட்டவர் இதனை ‘SCALP’ என்றழைத்தனர்.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஏற்கனவே யுக்ரேனுக்கு இந்த ஏவுகணைகளை வழங்கியுள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளன. அதன்படி, யுக்ரேன் தனது நாட்டின் எல்லைக்குள் மட்டுமே இந்த ஏவுகணையை பயன்படுத்த முடியும்.
இந்த ஏவுகணை விமானத்தில் இருந்து ஏவப்படுகிறது. இது ஒலியின் வேகத்திற்கு பறந்து, இலக்கை அடைந்ததும் குண்டுகளை வெடிக்கச் செய்யும். எதிரி நாட்டின் பதுங்கு குழிகளையும் வெடிகுண்டு கிடங்குகளையும் அழிக்க இது ஒரு பயனுள்ள ஆயுதமாகும். ரஷ்யாவும் யுக்ரேன் மீது இதேபோன்ற ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது அதிக ஆற்றல் வாய்ந்த ஏவுகணையாகும். அதற்கேற்ப இதன் விலையும் அதிகம். ஒரு ஏவுகணையின் விலை சுமார் 10 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பாக எதிரிகளின் ரேடார்களைத் திசைத் திருப்ப மலிவு விலை ட்ரோன்கள் பறக்கவிடப்படுகின்றன. இதே உத்தியை ரஷ்யாவும் பயன்படுத்துகிறது.
இந்த ஏவுகனைகளைக் கொண்டு யுக்ரேன், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரைமியாவின் செவாஸ்டபோல் நகரில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்தை தாக்கியுள்ளது. இது கிரைமியா முழுவதிலும் உள்ள ரஷ்ய கடற்படைக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியது.
“நீண்ட தூர ஏவுகணைகள் யுக்ரேனுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் ரஷ்ய நாட்டின் ராணுவத் தளங்களை மிகத் துல்லியமாக தாக்கும்”, என்று ராணுவ அறிஞரும், பிரிட்டனின் முன்னாள் ராணுவ அதிகாரியும், சிபிலைன் கன்சல்டன்சியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜஸ்டின் க்ரம்ப் கூறினார்.
படக்குறிப்பு, யுக்ரேனில் தினமும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
யுக்ரேன் கோரிக்கை என்ன?
யுக்ரேனில் பல நகரங்கள் ரஷ்ய குண்டு வீச்சுக்கு தினமும் இலக்காகின்றன.
யுக்ரேனின் இராணுவ தளங்கள், குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களை நடத்த ரஷ்யா பயன்படுத்தும் ராணுவத் தளங்களை தாக்க அனுமதி தராமல் இருப்பது, போரில் கையை பின்னால் கட்டிக்கொண்டு பணிந்து செயல்படுவதற்கு ஒப்பானது என்று யுக்ரேன் கூறுகிறது.
யுக்ரேனுக்கு சொந்தமாக நவீன மற்றும் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் டிரோன்கள் இருக்கின்றன.
இந்த ஆயுதங்களை கொண்டு ரஷ்ய எல்லைக்குள் சுமார் 100 கிலோமீட்டர் உள்ளே வரை யுக்ரேன் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனால் இதில் மிகவும் குறைந்த எடை கொண்ட குண்டுகளை மட்டும் கொண்டு செல்ல முடியும் என்பதால் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த முடியாது. இந்த டிரோன்களை ரஷ்யா பல முறை இடைமறித்து அழிக்கவும் செய்துள்ளது.
போர்க்களத்தில் ரஷ்யாவை சமாளிக்க ஸ்டார்ம் ஷாடோ ஏவுகணை போன்ற நீண்ட தூர ஏவுகணைகளையும், அமெரிக்காவின் ATACM போன்ற 300 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் ஏவுகணை அமைப்புகளையும் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்குமாறு யுக்ரேன் கோரி வருகின்றது.
ஸ்டார்ம் ஷாடோ, ரஷ்யா – யுக்ரேன்
படக்குறிப்பு, மேற்கத்திய நாடுகள் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் பயன்படுத்த நீண்ட காலமாக யுக்ரேன் அனுமதி கோரி வருகின்றது.
ரஷ்யா- யுக்ரேன் போரில் நீண்ட தூர ஏவுகணை என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?
மேற்கத்திய நாடுகள் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் பயன்படுத்த அனுமதிக்குமாறு நீண்ட காலமாக யுக்ரேன் கோரி வருகின்றது. இந்த அனுமதி வழங்கப்பட்டால் என்ன ஆகலாம் என்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரஷ்யா ஏற்கனவே எடுத்துள்ளது.
குண்டுவீச்சு விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் சில ராணுவ உள்கட்டமைப்புகளை நாட்டின் உள்புறம் ரஷ்யா நகர்த்தியுள்ளது. அதாவது, யுக்ரேன் எல்லையில் இருந்து நீண்ட தூர ஏவுகணைகளால் எட்ட முடியாத தொலைவுக்கு ரஷ்யா நகர்த்தியுள்ளது.
யுக்ரேன் எல்லையில் இருந்து நீண்ட தூர ஏவுகணைகளால் எட்டக் கூடிய தொலைவுக்குள் சுமார் 200 ரஷ்ய ராணுவ தளங்களை போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) கண்டறிந்துள்ளது. ATACMS ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்தால், மேலும் சில ரஷ்ய ராணுவத் தளங்கள் இந்த வரம்பிற்குள் வரும்.
ரஷ்ய எல்லைக்குள் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்குவது போரில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து வெள்ளை மாளிகைக்கும், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனுக்கும் குழப்பம் இருப்பதாக, முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
ரஷ்ய எல்லைக்குள் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்பது குறித்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு முயற்சிகளை ரஷ்யா எடுத்து வருகிறது.
ஆனால், ரஷ்யாவுக்கு இந்த பணி மிகவும் கடினமானதாக இருக்கும் என்று சிபிலின் ஜஸ்டின் க்ரம்ப் கூறினார்.
கட்டுப்பாடுகளை நீக்குவது யுக்ரேனுக்கு இரண்டு முக்கிய நன்மைகளை அளிக்கும் என்று RUSI திட்டக்குழுவின் இராணுவ அறிவியல் இயக்குநரான மேத்யூ சாவில் கருதுகிறார். முதலாவதாக, இதன் மூலம் யுக்ரேனுக்கு இன்னொரு ஏவுகணையான ATACMS-ஐ பயன்படுத்துவற்கான வழிபிறக்கக் கூடும்.
இரண்டாவதாக, வான் பாதுகாப்பு ஆயுதங்களை எங்கு நிலைநிறுத்துவது என்பது குறித்து ரஷ்யாவிற்கு ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும். இதனால் யுக்ரேனின் ட்ரோன்கள் எளிதாக ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
“நீண்ட தூர ஏவுகணைகள் போரில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இந்த வகை ஏவுகணைகள் யுக்ரேனிடம் அதிக அளவில் இல்லை. பிரிட்டனிடம் கொடுக்க இன்னும் சில ஏவுகணைகளே கையிருப்பில் உள்ளன” என்றும் மேத்யூ சாவில் கூறினார்.
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடென் மற்றும் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி
அனுமதி வழங்க ஏன் மேற்கத்திய நாடுகள் தயங்குகின்றன?
இதுவரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அச்சுறுத்தல்கள் அனைத்தும் வெற்றுப்பேச்சாகவே இருந்தாலும், மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா எல்லைகளை தாக்க யுக்ரேனுக்கு அனுமதி வழங்குவது ரஷ்யா தரப்பில் இருந்து பகிரங்கமான எதிர் தாக்குதல் வரக்கூடும் என்று அமெரிக்கா கவலைப்படுகிறது.
ரஷ்யாவின் எதிர் தாக்குதலில் போலந்தில் உள்ள விமானப்படை தளம் மற்றும் யுக்ரேனுக்கு ஏவுகணைகளை கொண்டு செல்லும் வழியில் உள்ள இடமாற்றம் செய்யும் தளங்களும் தாக்கப்படலாம் என்பதே அமெரிக்காவின் அச்சமாக இருந்து வருகின்றது.
அப்படி நடந்தால், நேட்டோவின் பிரிவு 5 செயல்படுத்தப்படலாம். அதாவது அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவை எதிர்த்து போரில் ஈடுபடும்.
2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று யுக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சில் போர் தொடுத்ததில் இருந்து, ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடாமல் முடிந்தவரை யுக்ரேனுக்கு ஆதரவு வழங்குவதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்து வருகின்றது.
ஆயினும்கூட, கிரைமியா மற்றும் 2022 ஆம் ஆண்டு ரஷ்யா சட்டவிரோதமாக தனது நாட்டுடன் இணைத்துக் கொண்ட கிழக்கு யுக்ரேன் பகுதிகளில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யப் படைகளுக்கு எதிராக பயன்படுத்த யுக்ரேனுக்கு அமெரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பகுதிகளை ரஷ்யா தனது எல்லைக்குட்பட்ட பகுதியாகக் கருதினாலும், அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளால் அது அங்கீகரிக்கப்படவில்லை.
மேற்கத்திய நாடுகளின் ஈடுபாடு குறித்து புதினின் கருத்துக்கள்
மேற்கத்திய நாடுகள் உதவி இல்லாமல் யுக்ரேனால் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த முடியாது என்றும் இந்த நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இந்த போரில் நேரடியாக தலையிடுகின்றது என்றும் ரஷ்ய அதிபர் புதின் கருதுகிறார்.
ரஷ்யாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேட்டோ நாடுகளின் ராணுவ வீரர்கள் மட்டுமே இத்தகைய ஏவுகணைகளை விமான அமைப்புகளில் பொருத்த முடியும்”, என்று கூறினார். தாக்குதல் நடத்த ரஷ்ய எல்லைகளை தேர்ந்தெடுப்பதற்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய செயற்கைக்கோள் நுண்ணறிவையே யுக்ரேன் நம்பியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து பேசுவதற்கு ஏவுகணை உற்பத்தி நிறுவனமான MBDA-வை பிபிசி அணுகியபோது, அது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதுடன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேள்வி கேட்குமாறு கூறியது.
யுக்ரேன் அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் புதினின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். “ஆயுதங்கள் தொடர்பான சிறப்பு தொழில்நுட்ப விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது”, என்று அவர் கூறினார்.
“புதின் கூறுவது உண்மையாக இருந்தால், இந்த ஆயுதங்களைக் கொண்டு கிரைமியாவில் செவஸ்தபோல் நகரில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்தை வெற்றிகரமாக யுக்ரேன் படை தாக்கியபோதே, இது குறித்து ரஷ்யா தெளிவாக கருத்து தெரிவித்திருக்கும்”, என்று ஜஸ்டின் க்ரம்ப் பிபிசியிடம் கூறினார்.
“இந்த ஏவுகணையை வாங்கி பயன்படுத்துபவர்கள் நேட்டோ நாடுகள் அல்லது பிரிட்டனின் ஆதரவை பெற்றவர்களாகவே இருக்க முடியும் என்று ரஷ்யா கூறுகின்றதா? அவ்வாறு இருந்தால் ரஷ்யா இந்த சிந்தனையை உடனடியாக கைவிட வேண்டும், இவ்வாறு கூறுவதில் ஒரு பயனும் இல்லை”, என்று அவர் குறிப்பிட்டார்.