25 வருடங்களாக இருட்டறையில் இருந்த பட்டலந்த வதைமுகாம் அறிக்கை! பிமல் ரத்நாயக்க அதிரடி அறிவிப்பு!
சிங்களவருக்கு வெளிச்சம் வந்துள்ளது சரி, தமிழருக்கு வெளிச்சம் வருமா?

பட்டலந்த வதைமுகாம் அறிக்கை 25 வருடங்களாக இருட்டறையில் இருந்ததாக சபைத் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்திற்கு குறித்த அறிக்கையை சமர்ப்பித்த போது அவர் இதனைத் தெரிவித்தார். அறிக்கையை சமர்ப்பித்து தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
1976 ஆம் ஆண்டில் பெருமளவிலான பலத்தை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மக்களுடைய அபிப்பிராயம் இல்லாமல் ஒரு நிறைவேற்று ஜனாதிபதியை நியமித்தது.
ஜனநாயக ரீதியான தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், மாணவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இலக்கியவாதிகள், சங்கத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள் போன்றவர்களை தடுத்து வைத்து மக்களுக்கு எதிராக மனிதக் கொலைகளை நடத்தினார்கள்.
இந்த சித்திரவதைக் கூடத்தில் அப்போதைய அரசாங்கத்தின் தலையீடுகளினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
சித்திரவதைகள் தொடர்பாக சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் கண்டனங்கள் வெளியிடப்பட்டன. அரசாங்க மாற்றங்கள் காரணமாக இந்த சாபத்திற்கு எதிராக தற்போது மீண்டும் ஜனநாயகம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.
பட்டலந்த போன்ற வதை முகாம்கள் தொடர்பாக அப்போதைய தலைவர்கள் அந்த இடத்திற்கு சென்று வெளிப்படுத்திய போது மக்கள் நீதிநியாயங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தார்கள்.
தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறிய ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அந்த கொடூரமான நிலைக்கு அரசியல் பூச்சு பூசுவதற்கு முயற்சித்தார்கள்.
பொது மக்களுக்கு எதிராக குற்றங்களை செய்தவர்கள் அனைவரும் சேர்ந்து இருந்தார்கள், சட்டத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து விடயங்களையும் செய்திருந்தார்கள்.
இந்த அறிக்கை இருட்டறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்தது. 25 வருடங்களுக்கு பின்னர் வெளியே வந்திருக்கிறது. பட்டலந்த சித்திரவதைமுகாம் சம்பந்தமான விடயங்கள் இந்த அறிக்கையில் இருக்கின்றன என்று தெரிவித்தார்.