போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான்.. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்பு!
.
இளம் வயதில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர், அதனால் மாணவர்களை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் கண்காணிக்கத் தவறுவதால் அவர்கள் தவறான வழிக்கு செல்லும் வாய்ப்புள்ளது எனவும் மாரத்தான் விழாவில் பங்கேற்ற கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தெரிவித்தார்.
போதைப் பொருள் இல்லா எதிர்காலத்தை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் நேற்று (டிசம்பர் 22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, 2, 5 மற்றும் 8 கி.மீ என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் போட்டி கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி, கேபிஆர் கல்லூரி முகப்பு என மூன்று இடங்களில் தொடங்கி, கேபிஆர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றுள்ளது. இதில், கேபிஆர் நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.தற்போது, போதைப் பொருள் இல்லா எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தத் தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இந்த போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, முதலில் வந்த 100 பேருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே.பி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், இந்திய தடகள வீராங்கனை அபிநயா ராஜாராம், இந்திய ராணுவத்தைச் சார்ந்த தடகள வீரர் மற்றும் பயிற்சியாளர் கணபதி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தங்கராமன், "போதைப் பொருள் இல்லாத சமூகம் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பார்கள்.
போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் இயலும். தற்போது போதைப் பொருட்கள் ஸ்டாம்ப், சிந்தடிக் என பல்வேறு வகைகளில் எளிதாக மாணவர்களுக்கு கிடைக்கிறது.அவற்றை மாணவர்கள் பயன்படுத்தி தவறான பாதைக்கு செல்கின்றனர். மாணவர்களை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். கண்காணிக்கத் தவறுவதால் அவர்கள் தவறான வழிக்கு செல்லும் வாய்ப்புள்ளது. 17 வயதில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உயிரிழக்கின்றன. போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.