'சீமான் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்' - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கட்டாயம் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏப்ரல் 8ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைத்தளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்ததாக திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்-4 ல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு பிப்.19-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) பாலாஜி, வழக்கை ஏப்.7-ம் தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்தார். நேற்று இவ்வழக்கு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதும், சீமான் ஆஜராகவில்லை.
அப்போது அவர் நேரில் ஆஜராக முடியாததற்கான காரணத்தை அவரது வழக்கறிஞர்கள் விளக்கினர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, (நேற்று) மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, அவரது வழக்கறிஞர்கள் வழக்கை அன்றே (நேற்று) தள்ளிவைக்க (பாஸ் ஓவர்) கோரினர். அதன்மீதான விசாரணை நடந்தபோது, சீமான் ஆஜராகாத காரணம் குறித்த மனுவை அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமான் இன்று (ஏப்.8) கட்டாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.