"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தூக்கம் போனது" - மனம் திறந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசுக்கு எதிராக பேசியது குறித்து ஆர்.எம்.வீரப்பன் ஆவணப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அவருக்கு எதிராக பேசியது குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சரும், சத்யா மூவிஸ் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பனின் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி உயிரிழந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆர்.எம்.வீரப்பன் குறித்த ஆவணப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசியுள்ளனர். இந்த ஆவணப்படத்தில் ’he is real kingmaker’ என்ற தலைப்பில் பேசிய ரஜினிகாந்த், “இந்த ஆவணப்படத்தில் பேசுவது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள், என் மீது அன்பு காட்டியவர்கள் மூன்று, நான்கு நபர்கள் தான். பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் இல்லை என்று நினைக்கும் போது மிகவும் மிஸ் பண்ணுகிறேன்” என ரஜினிகாந்த் வருந்தினார்.
ரஜினிகாந்த் நடிப்பில் மெகா ஹிட்டான ’பாட்ஷா’ படத்தை சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் 100வது நாள் விழா குறித்து ரஜினிகாந்த் பேசுகையில், “பாட்ஷா திரைப்பட 100வது நாள் விழா மேடையில் நான் தமிழ்நாட்டின் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து பேசினேன். அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்து கொண்டு நான் அந்த விவகாரம் குறித்து பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு தெளிவோ, புரிதலோ இல்லை.
அந்த நிகழ்வுக்கு பிறகு அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். எப்படி ரஜினிகாந்த் அரசுக்கு எதிராக வெடிகுண்டு கலாசாரம் குறித்து மேடையில் பேசலாம் என அமைச்சர் பதிவியில் இருந்து நீக்கப்பட்டார். என்னால் ஆர்.எம்.வீரப்பனுக்கு அமைச்சர் பதவி பறிபோனது தெரிந்த போது எனக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் காலை ஆர்.எம்.வீரப்பனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கூறினேன்.
அவர் இது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றார். நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும், எப்போது அடுத்து ஷுட்டிங் என சாதாரணமாக பேசத் தொடங்கினார். எனக்கு அந்த தழும்பு எப்போது போகாது, நான் தான் அந்த மேடையில் கடைசியாக பேசினேன்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக குரல் கொடுத்ததற்கு எதிராக சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் மிக முக்கியமானது. அதற்கு பிறகு ஜெயலலிதாவிடம் அமைச்சர் பதவி குறித்து பேசலாமா என கேட்டேன், அதற்கு ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதா முடிவு எடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேச வேண்டாம் என மறுத்தார். ஆர்.எம்.வீரப்பன் பெரிய மனிதர், ரியல் கிங் மேக்கர்” என பேசியுள்ளார்.