அனுரவின் நண்பரா ரணில்?: நேரடி விவாதத்துக்கு அழைப்பு
.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தாம் விரும்புவதாகவும் அவர் நேரடி விவாதத்துக்கு வந்ததால் அவரது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போது, “எனது நண்பர் அனுர“ (மா மித்ர அனுர – சிங்கத்தில்) என்று அடிக்கடி கூறிவருகிறார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க,
தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்ற போகிறதென ரணில் விக்ரமசிங்க நன்கு அறிந்துள்ளார். அதன் காரணமாக தற்போது எம்முடன் சுமூகமான உறவை பேண முயற்சிக்கிறார்.
ஆனால், அதற்கு நாங்கள் இடமளிப்பவர்கள் அல்ல. எல்எல்ஆர்சி காணி பகிர்வு, மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பகிர்வு, மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் – மோசடி உட்பட அவர் மேற்கொண்டுள்ள ஊழல்- மோசடிகள் தொடர்பில் கட்டாயம் நீதியான விசாரணைகள் எமது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்படும்.
அதனால் ரணில் விக்ரமசிங்க என்னை அவரது நண்பர் என அழைப்பதால் நான் அவரை கண்டுகொள்ள போவதில்லை. அவரது நண்பரின் தரம் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் அவருக்கு தெரியவரும்.” என்றார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஒவ்வொரு மேடையிலும் தம்மிடம் கேள்வியெழுப்பி வருகிறார். அவர் நாடு முழுவதும் சென்று கேள்வியெழுப்புவதால் என்ன பயன்?. அவருக்கு நேரடியாக பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன். நேரடியான விவாதமொன்றுக்கு வருமாறு ரணிலை பகிரங்கமாக அழைக்கிறேன்.” என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.