விடுதலைப்புலிகள் செயலிழக்கும் வரையும் ஓடுமீன் ஓடி உறுமீன் வரும் வரையும் கொக்கு சுமந்திரன்!
.
இரா.சம்பந்தன் புலிகளால் நியமிக்கப்பட்ட போதும் மானசீகமாக சம்பந்தன் புலிகளின் அரசியலை ஆதரிக்கவில்லை.
தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், பொதுச்சபையும் திருகோணமலையில் கூடி கலைந்தது போல், வவுனியாவில் மத்திய செயற்குழு கூட்டம் கூடி ஊடகங்களுக்கு “பம்பலாக” கலைந்திருக்கிறது. நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளுக்காக ஏறி, இறங்கவேண்டிய நிலையில், நடந்து முடிந்த வவுனியா கூட்டம் கட்சியின் உள் மோதல்களுக்கு “தீர்வு” காணப்பட்டதுபோன்ற ஒரு தோற்றத்தையும், இது தீர்வல்ல “பிரிவு” என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகக்குறைந்தது முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு இது முள்ளை முள்ளால் எடுத்த நிம்மதி. தமிழரசுக்கு தீர்வில்லாவிட்டாலும் சுமந்திரன் அணிக்கு தீர்வு.
தமிழரசுகட்சியில்/தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சுமந்திரனின் வருகை பலர் நினைப்பது போன்று ஒரு அரசியல் விபத்தோ, அரசியல் தற்செயல் நிகழ்வோ அல்ல. நன்கு திட்டமிட்ட நகர்வு. விடுதலைப்புலிகள் செயலிழக்கும் வரையும் ஓடுமீன் ஓடி உறுமீன் வரும் வரையும் கொக்கு காத்திருந்த கதை. 2001 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக இரா.சம்பந்தன் புலிகளால் நியமிக்கப்பட்ட போதும் மானசீகமாக சம்பந்தன் புலிகளின் அரசியலை ஆதரிக்கவில்லை.
ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வு. இதுவே சம்பந்தனது மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் பின்கதவு அரசியலாக இருந்தது. இது “தமிழீழம் ஒரு வில்லங்கமான காரியம்” என்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வார்த்தைகளின் உள்ளீட்டை தமிழ்மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தகாலம் என்பதால் இதற்கான நியாயப்பாடு தமிழர் அரசியல் தராசில் ஒரு பக்க தராசுத் தட்டை கதிக்கச்செய்தது.
மறு பக்கத்தில் புலிகள் தவிர்ந்த ஆயுத போராட்ட அமைப்புக்களின் பாராளுமன்ற அரசியல் பிரவேசம் இதை மேலும் உறுதிப்படுத்தியது. இந்த அமைப்புக்களும்/கட்சிகளும் தமிழீழத்தை புலிகளின் துப்பாக்கி தங்களை குறி பார்த்ததால் ஆயுத போராட்டத்தில் தாங்களாகவே தோற்றும், தோற்கடிக்கப்பட்டும் இருந்த நிலையில் கொண்ட கொள்கையில் “அரசியல் கற்பு” இவர்களிடமும் இருக்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டு துடுப்பு விடுதலைப்புலிகளின் கைகளில் இருந்தது. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைகளை அழித்த பாவத்திற்காக பிராபாகரன் செய்த பிராயச்சித்தம் இவர்களையும் கூட்டமைப்பில் உள்வாங்கியது. உமா மகேஸ்வரனை புலிகள் கொல்லவில்லை என்பதால் சேர்க்கவில்லை போலும். (?). பின்னர் சேர்த்துக்கொண்ட போது விமர்சனங்கள் எழுந்தன.
அதுவரை தலையாட்டும் அரசியல் செய்த கூட்டமைப்பு 2009 மே மாதத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல சுயரூபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. ஒரு புறம் கிளிநொச்சி சந்திப்புக்களில் ஒன்றும், கொழும்பு சந்திப்புக்களில் இன்னொன்றும் பேசி வந்த இரா.சம்பந்தருக்கும், எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையிலான கொழும்பு உறவில் நெருக்கம் ஏற்பட்டது. சம்பந்தரின் நம்பிக்கையை திட்டமிட்ட படி சுமந்திரன் பெற்றார்.
சாத்தியமற்ற தமிழீழம், பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல் சூழல்கள் பற்றிய கலந்துரையாடல்களில் இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்தனர். விளைவு 2010 பாராளுமன்ற தேர்தலில் முள்ளிவாய்க்கால் வலியோடு தமிழ்மக்கள் பெற்றெடுத்த தேசிய பட்டியல் குழந்தையை தூக்கி சாய்மனைக்கதிரை கொழும்புவாசி சுமந்திரனுக்கு சம்பந்தர் கொடுத்தார்.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை தங்கள் திசைக்கு திருப்ப புலிகளின் கையில் இருந்த துடுப்பு சம்பந்தருக்கும், சுமந்திரனுக்கும் கைமாறியது. சம்பந்தரின் வயோதிபம் அவருக்கு நம்பிக்கையான ஒரு கையாளைத்தேடியது. அந்த இடத்தை சம்பந்தர் சுமந்திரனுக்கு கொடுத்தார். மறுபக்கத்தில் சம்பந்தரின் முதுமையை சுமந்திரன் பயன்படுத்தி, கட்சியில் முக்கிய செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார்.
சம காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தமிழரசு உள்ளிட்ட பங்காளிகள் கட்சிகளின் பலவீனங்களை சுமந்திரனால் இலகுவாக அடையாளம் கண்டு அரசியல் செய்ய முடிந்தது. பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முற்று முழுதாக சுமந்திரனில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. சம்பந்தர் எதிர்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட அனைத்து வரப்பிரசாதங்களுடனும் கொழும்பு அரசாங்க மாளிகையில் முடங்கிப்போனார். இது ஒரு வகையில் எஸ்.ஜே.வி.செல்வாநாயகத்தின் முதுமையை அ.அமிர்தலிங்கம் பயன்படுத்தியதற்கு ஒப்பானது.
இந்த அரசியல் சூழ்நிலையில், சரியாக காலக்கணக்கை பார்த்து வந்த எம்.ஏ. சுமந்திரன் தருணம் பார்த்து இரா.சம்பந்தர் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தார். இது பல விமர்சனங்களுக்கு வழிவிட்டபோதும் தமிழ்த்தேசிய அரசியலை முன்னோக்கி நகர்த்துதல் என்பதில் சாதகமானதாக நோக்கப்பட்டது.
ஆனால் சுமந்திரனின் தனிப்பட்ட, அரசியல் குணாம்சங்களை நன்கு அறிந்திருந்தவர்கள், சம்பந்தரின் செயற்பாடற்ற பலவீனமான அரசியலை அறிந்திருந்தும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். ஆனால் சுமந்திரனின் அரசியல் தந்திரோபாய உட்கட்சி நகர்வுகளை அறியாதவர்களும், அவரது வாதத்திறமையையும், அரசியல் நியாயப்படுத்தல்களையும் , சர்வதேச உறவுகளையும், பாராளுமன்ற செயற்பாடுகளையும் மட்டும் அறிந்தவர்களும் சுமந்திரனுக்கு பின்னால் ஆதரவாக நின்றனர்.
2010 இல் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பல்வேறு காரணங்களுக்காக உடைவுகள் ஏற்பட்டன. ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் சுமந்திரனின் பங்காளிகள் தனித்து போட்டியிடல் என்ற தொழில்நுட்பம்/பொறிமுறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தமிழரசுக்கட்சி என்ற நிலைக்கு கொண்டு வந்தது.
2015, 2020 தேர்தல்களில் சுமந்திரன் மீதான மக்கள் நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து 2024 இல் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டார். இதற்கு என்னதான் காரணங்களை கூறினாலும் அந்த காரணங்களில் சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பங்குண்டு. அதை அவர் சுயவிமர்சனம் செய்ததாக தெரியவில்லை. தனது நிலைப்பாடே சரியென தனித்து ஓடும் சுமந்திரன் இதை செய்வார் என்றும் எதிர்பார்ப்பதற்கில்லை.
பாராளுமன்ற அரசியலில் சம்பந்தரினதும், பங்காளிக்கட்சிகளினதும் பலவீனங்களை பயன்படுத்தி பாராளுமன்ற குழுவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சுமந்திரன் அடுத்த நகர்வாக தமிழரசுகட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர களத்தில் இறங்கினார். மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவ பலவீனமும், வயோதிபமும் சம்பந்தர் காலம் போன்று மீண்டும் ஒரு வாய்ப்பை சுமந்திரனுக்கு வழங்கியது.
கட்சிக்குள் தனக்கு சாதகமாக சி.வி.கே.சிவஞானம், சத்தியலிங்கம், சாணக்கியன், துரைராசசிங்கம் போன்றவர்களை வளைத்துப் போட்ட சுமந்திரன் தலைமை பதவிக்கு போட்டியிட்டார். எனினும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. வெற்றி பெற்ற சி.சிறிதரன் பதவியேற்க முடியாதவாறு வழக்கு தாக்கலானது. இந்த இழுபறியில் மாவை சேனாதிராஜாவை பதவியில் இருந்து நீக்கி பதில் தலைவர் ஒருவரை தேர்வு செய்யும் முயற்சியில் அதுவும் தனது சார்பான சி.வி.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது சுமந்திரனுக்கு வெற்றியே. தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் பதவியும் சுமந்திரனுக்கு உறுதியானது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் -தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் நிலைப்பாடே கட்சியின் நிலைப்பாடாக முடிவுகளாக எடுக்கப்படுகின்ற நிலை தொடர்கிறது. அதற்கு வாய்ப்பு இல்லாத நிலை காணப்படுமாயின், ஏதோவொரு வகையில் அதற்கான காலம் கனியும் வரை முடிவுகளை எடுப்பதை சுமந்திரன் தனது அணியின் மூலம் சாதித்து வருவது வழக்கம்.
இதற்கான வாய்ப்பை சுமந்திரன் தேடிச் செல்லவில்லை. மாறாக அது காலடிக்கு வரும் வரையும் காத்திருந்து காரியம் செய்கிறார். அந்த வாய்ப்புக்களை அவரின் காலடியில் கொண்டு குவிப்பவர்களாக இரா.சம்பந்தருடன் மாவை.சேனாதிராஜா, சி.சிறிதரன், பா. அரியநேத்திரன், சி.வி.தவராசா….போன்றவர்கள் இருக்கிறார்கள். அவற்றை சுமந்திரன் அணி பயன்படுத்துகிறது. இதனால் கட்சியில் சுமந்திரனின் அடைவுகள் காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையல்ல.
எம்.ஏ. சுமந்திரனின் அதே அரசியல் குணாம்சங்களை கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசுகட்சிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரின் சிறிதரன், செல்வம் ஊடான நகர்வு நிச்சயமாக சுமந்திரனுக்கு எதிரானது என்பது வெளிச்சம். இது தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
ஒரு சந்தர்ப்பத்தில் “சுமந்திரனை திருத்த முடியாது” என்று சொன்ன கஜேந்திரகுமார், சுமந்திரன் இல்லாத பாராளுமன்றத்தில் வகிக்கப் போகின்ற முக்கியத்துவம் என்ன?