சுகாதார அமைச்சில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள், மோசடிகள்: விசேட குழுவை நியமிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை
.
சுகாதார அமைச்சிற்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்ய உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் (SRTSL) தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பிலான தகவல்களை மேற்படி குழுவிற்கு வழங்க தயாராக உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கூறியுள்ளார்.
”தற்போதைய பிரதமர் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். அதனால் அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
கடந்த காலங்களில் அதிக அளவில் ஊழல், மோசடிகள் அமைச்சுக்குள் இடம்பெற்றுள்ளன. புதிய ஜனாதிபதியும், சுகாதார அமைச்சராக கடமையாற்றும் பிரதமரும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய ஜனாதிபதியும் சுகாதார அமைச்சரும் விசாரணை நடத்த குழுவொன்றை நியமிப்பதற்கு உடனடியாக செயற்படுவார்கள் என நம்புகின்றோம். நியமிக்கப்படும் குழு கடந்த காலத்தில் இருந்தவை போன்று இருக்கக் கூடாது. அது சுயாதீன குழுவாக இருக்க வேண்டும்.
சுகாதாரப் பாதுகாப்பு தொழிற்சங்கத் தலைவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் தாம் அறிந்த மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்.” என்றும் சானக தர்மவிக்ரம வலியுறுத்தியுள்ளார்.