ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்தல் குறித்த மனு பரீசீலனைக்கு: தடை உத்தரவு பிறப்பித்தால் என்ன நடக்கும்?
.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை (08.07.24) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வர்த்தகர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
இதனிடையே எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணப்படுவதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதற்கமைய,ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் எதிர்வரும் 10 நாட்களில் கிடைக்கப்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஜனாதிபதி தேர்தலுக்கான சரியான திகதியை தீர்மானிக்கும் என்றும் கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தேர்தலுக்காக 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படவுள்ளது.
இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் சில நாட்களில் அவை மாவட்ட ரீதியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களின் குறைபாடுகள் குறித்து அறிக்கை ஒன்றை வழங்குமாறு அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேவையான மேலதிக நடவடிக்கைகள், தேர்தல்கள் கண்காணிப்பு தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், தேர்தல் திகதியை அறிவிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.