1972-ல் புதைக்கப்பட்ட இறைமையும் தமிழ்த் தலைமைகளின் 'வரலாற்றுத் துரோகமும்'
அரசாங்கங்கள் மாறலாம், ஆனால் 1972-ல் அஸ்திவாரம் இடப்பட்ட அந்த 'சிங்கள பௌத்த அரசு' அப்படியேதான் இருக்கிறது.
அரசும் அரசாங்கமும்: 1972-ல் புதைக்கப்பட்ட இறைமையும் தமிழ்த் தலைமைகளின் 'வரலாற்றுத் துரோகமும்'
அரசியல் என்பது சாக்கடை என்று சொல்வார்கள். ஆனால், அந்தச் சாக்கடைக்குள் விழுந்த வைரத்தைத் தேடுவது போல, நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது திரிக்கப்பட்ட உண்மைகளைத் தேடுவது மிக அவசியமானது. ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் நாம் அடிக்கடி குழப்பிக் கொள்ளும் இரண்டு வார்த்தைகள்: 'அரசு' (State) மற்றும் 'அரசாங்கம்' (Government).
இலங்கைத் தீவில் ஆட்சி பீடம் ஏறுபவர்கள் மாறலாம்; ஆனால், தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மட்டும் ஏன் மாறுவதில்லை? இதற்கான விடை, 1972-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு வரலாற்றுத் துரோகத்தில் ஒளிந்திருக்கிறது.
அரசும் அரசாங்கமும்: என்ன வித்தியாசம்?
எளிமையாகச் சொல்வதானால், 'அரசாங்கம்' என்பது அவ்வப்போது வந்து போகும் ஒரு நிர்வாகக் குழு. இன்று அனுரா இருக்கலாம், நாளை சஜித் வரலாம், அல்லது நாமல் வரலாம். இவர்கள் ஓட்டுநர்கள் மட்டுமே.
ஆனால், 'அரசு' என்பது அந்த வாகனம். அந்த வாகனம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது? அதன் எஞ்சின், சக்கரங்கள், கட்டமைப்பு அனைத்தும் எதைக் கொண்டு உருவாக்கப்பட்டது? இலங்கையைப் பொறுத்தவரை, அந்த வாகனம் (அரசு) சிங்கள பௌத்தப் பேரினவாதம் எனும் இரும்பினால் வார்க்கப்பட்டு, நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
ஓட்டுநர் (அரசாங்கம்) எவ்வளவு நல்லவராக இருந்தாலும், வாகனம் (அரசு) பௌத்த மேலாதிக்கம் நோக்கித்தான் செல்லும். இந்த வாகனத்தை அதிகாரப்பூர்வமாக வடிவமைத்த ஆண்டுதான் 1972.
1972: இறைமை பறிபோன ஆண்டு.
பிரித்தானியர்கள் 1833-35 காலப்பகுதியில், தங்களின் நிர்வாக வசதிக்காகத் தனித்தனியாக இருந்த இராச்சியங்களை ஒன்றிணைத்து, 'சிலோன்' என்ற ஒற்றை நிர்வாக அலகை உருவாக்கினார்கள். அப்போது எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட இறைமை, பிரித்தானிய மகாராணியிடம் இருந்தது.
1972-ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், 'சோல்பரி யாப்பை' தூக்கியெறிந்துவிட்டு, புதிய 'குடியரசு யாப்பை' (Republican Constitution) உருவாக்கியது. இந்தத் தருணத்தில்தான் பிரித்தானியரிடமிருந்த இறைமை மீண்டும் மக்களிடம் திரும்பியது. ஆனால், அந்த இறைமை தமிழர்களிடம் திரும்பியதா? இல்லை. அது சிங்கள பௌத்தர்களிடம் முழுமையாகக் கையளிக்கப்பட்டது.
சரத்து 9: மதச்சார்பின்மையின் மரணம்
1972 யாப்பின் மிக ஆபத்தான அம்சம் அதன் 9-வது சரத்து.
"இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் (Foremost Place) வழங்கப்படும்."
என்று அது பிரகடனப்படுத்தியது. இதன் மூலம் இலங்கை என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல, அது ஒரு பௌத்த நாடு என்பது சட்டப்பூர்வமானது. அரசு, நீதித்துறை, இராணுவம் என அனைத்தும் சிங்கள பௌத்தத்தைப் பாதுகாப்பதை தமது கடமையாகக் கொண்டன. இதற்குப் பெயர்தான் 'நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாதம்'.
தமிழ்த் தலைமைகளின் நாடகமும் துரோகமும்
இங்குதான் வரலாற்றின் மிகச் சுவாரசியமான, அதே சமயம் வேதனையான திருப்பம் நிகழ்கிறது. 1972 யாப்பு உருவாக்கப்பட்டபோது, அப்போதிருந்த தமிழ்த் தலைவர்கள் (கூட்டமைப்பு முன்னோடிகள்) என்ன செய்தார்கள்?
வெளியுலகிற்குப் பார்ப்பதற்கு அவர்கள் யாப்பை எதிர்ப்பது போலவும், அரசியல் நிர்ணய சபையிலிருந்து வெளிநடப்பு செய்வது போலவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். மக்கள் அவர்களை நம்பினார்கள். ஆனால், திரைக்குப் பின்னால் நடந்தது என்ன?
புதிய யாப்பு நடைமுறைக்கு வந்தவுடன், பழைய நாடாளுமன்றம் 'தேசிய அரசுப் பேரவை' ஆக மாறியது. அந்தப் புதிய யாப்பின் கீழ் அமைந்த சபையில் அமர்வதற்கும், தமது நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பதவியைத் தக்க வைப்பதற்கும், அதே 9-வது சரத்து உள்ள யாப்பை ஏற்றுக்கொள்வதாகச் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்.
இது சாதாரண விடயமல்ல.
எந்த யாப்பு தமிழர்களின் இறைமையைப் பறித்ததோ,
எந்த யாப்பு பௌத்தத்தை நம் தலையில் கட்டியதோ,
எந்த யாப்பு தனிச் சிங்களச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்ததோ,
அதே யாப்பிற்கு விசுவாசமாக நடப்பேன் என்று சத்தியம் செய்துவிட்டுத்தான் அவர்கள் அந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.
9-வது சரத்திற்கு எதிர்ப்பு எங்கே?
இன்று மேடைகளில் முழங்கும் தலைவர்கள், அன்று இந்த 9-வது சரத்து புகுத்தப்பட்டபோது, அதற்கு எதிராகத் தீவிரமான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், பதவி ஆசை கண்ணை மறைக்க, எதிர்ப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு, இறுதியில் அந்த யாப்பிற்குள்ளேயே ஐக்கியமானார்கள்.
பிரித்தானியர் எம்மிடமிருந்து நிர்வாக வசதிக்காகப் பறித்த இறைமை, 1972-ல் செல்லுபடியற்றதாகியபோது, நாம் எமது சுயநிர்ணய உரிமையை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்க வேண்டிய தருணம் அது. ஆனால், தமிழ்த் தலைமைகளின் இந்தச் சரணாகதி அரசியல், சிங்கள பௌத்த அரசு இறுகுவதற்குத் துணை போனது.
இன்றைய வேஷம்.
இன்று அதே அரசியல் பரம்பரையில் வந்தவர்கள், "எங்களுக்கு நீதி வேண்டும், சமஷ்டி வேண்டும்" என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், சிங்கள அரசு என்ற இந்த 'பேரினவாத இயந்திரத்தை' உருவாக்க மறைமுகமாகத் துணை நின்றவர்கள் இவர்களே என்பது புரியும்.
அரசாங்கங்கள் மாறலாம், ஆனால் 1972-ல் அஸ்திவாரம் இடப்பட்ட அந்த 'சிங்கள பௌத்த அரசு' அப்படியேதான் இருக்கிறது. அதனை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு, அதற்குள்ளேயே பதவி சுகம் அனுபவித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல், இன்றைய அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது.
தமிழர்களின் அரசியல் தோல்வி என்பது எதிரிகளின் பலத்தில் இல்லை; அது நமது தலைவர்கள் இழைத்த வரலாற்றுத் தவறுகளிலும், சந்தர்ப்பவாத அரசியலிலும் தான் உள்ளது என்பதற்கு 1972-ம் ஆண்டுச் சம்பவமே சாட்சி.
- சிவா சின்னப்பொடி.


