பிரான்சில் மீண்டும் மாபெரும் வேலைநிறுத்தம்? அரசுக்குச் சங்கங்கள் விதித்த கெடு!
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை!
பிரான்சில் மீண்டும் மாபெரும் வேலைநிறுத்தம்? அரசுக்குச் சங்கங்கள் விதித்த கெடு - கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் என எச்சரிக்கை!
பாரிஸ், 19 செப்டம்பர் 2025: சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் பேரணியின் வெற்றிக்குப் பிறகு, பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுவின் அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளன. தங்கள் கோரிக்கைகளை ஏற்க வரும் புதன்கிழமை வரை கெடு விதித்துள்ளதாகவும், இல்லையெனில் நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளன.
பிரான்சின் எட்டு பெரிய தொழிற்சங்கங்களான CFDT, CGT, FO உள்ளிட்டவை இணைந்து, அரசின் சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. அவற்றின் முக்கிய கோரிக்கைகள்:
மருத்துவக் கட்டண உயர்வு: மருத்துவச் செலவுகளில் பொதுமக்களின் பங்களிப்பை இரட்டிப்பாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசுப் பணியாளர் குறைப்பு: 3,000 அரசு ஊழியர் பணியிடங்களை நீக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும்.
வேலைவாய்ப்பின்மை காப்பீடு: வேலைவாய்ப்பின்மை காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்களைக் கைவிட வேண்டும்.
மே 1 ஆம் தேதியை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை தினமாக இல்லாமல் ஆக்கும் திட்டத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
"எதிர் வரும் புதன்கிழமை, செப்டம்பர் 24 ஆம் திகதிக்குள், பிரதமர் லெகோர்னு தங்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை என்றால், தாங்கள் அனைவரும் மீண்டும் கூடி, அடுத்த மாபெரும் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்திற்கான தேதியை மிக விரைவில் அறிவிப்போம்" என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது அரசுக்கு விடுக்கப்பட்ட ஒரு "இறுதி எச்சரிக்கை"யாகவே பார்க்கப்படுகிறது.
புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள செபாஸ்டியன் லெகோர்னு, மே 1 விடுமுறையை இரத்து செய்யும் திட்டம் கைவிடப்பட்டதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும், தொழிற்சங்கங்களின் தலைவர்களை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், மக்களின் கோரிக்கைகள் அரசின் ஆலோசனைகளின் மையமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், மற்ற முக்கிய சிக்கன நடவடிக்கைகள்குறித்து அவர் இதுவரை எந்த உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. இதனால், நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பிரதமரின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே, பிரான்ஸ் மீண்டும் மிகப் பெரிய போராட்டத்தைச் சந்திக்குமா அல்லது அமைதி திரும்புமா என்பது தெரியவரும்.


