மலையக இரத்தத்திற்கு விலை நிர்ணயித்து, காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்டுள்ள பெறுமதியற்ற சம்பள அதிகரிப்பதை வைத்து தேசிய மக்கள் சக்தி அரசியல் செய்யக்கூடாது!
தற்போதைய பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பு என்பது அடிமை நிர்வாக முறையை தக்கவைக்கும் கட்டமைப்பே
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சிக்கும் மலையக பிராந்திய பெருந்தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட சம்பள அதிகரித்து தொடர்பான ஒப்பந்தம் இமாலய வெற்றியாக வர்ணிக்கப்படுகின்றது. இந்த ஹிமாலய வெற்றியின் மகிழ்ச்சி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கா? பெருந்தோட்ட கம்பெனிகளுக்கா? உழைப்பையே மூலதனமாக்கி இரு நூற்றாண்டுகளைக் கடந்தும் அரை அடிமையாக்கப்பட்டு உழைத்து வரும் எம் மலையக உறவுகளுக்கா? அல்லது முத்தரப்பிற்குமா? எனும் கேள்விகளை மலையக சமூக ஆய்வு மையம் தொடுப்பதோடு; இரத்தம் சிந்தி உழைக்கும் மலையக உழைக்கும் ரத்தத்திற்கு விலை நிர்ணயித்து காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்டுள்ள பெருமதியற்ற சம்பள அதிகரிப்பதை வைத்து தேசிய மக்கள் சக்தி அரசியல் செய்யக்கூடாது என்பதையும் கூற விரும்புகின்றது.
தற்போதைய பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பு என்பது அடிமை நிர்வாக முறையை தக்கவைக்கும் கட்டமைப்பே. இந்நிர்வாக முறையினின்று மலையக உழைக்கும் மக்களை அவர்கள் சார்ந்த சமூகத்தை விடுவித்து சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலமே நாடு உண்மையான சுதந்திரத்தை முழு நாடும் காண முடியும். அனுபவிக்க முடியும்.
அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முறையில் ஜனாதிபதி வாக்களித்த ரூபா 1750 தொழிலாளர்களுக்கு கிடைக்க உள்ளது. ஏற்கனவே கொடுக்கப்படும் சம்பளத்தோடு அடிப்படை சம்பளத்தில் ரூபா 200 அதிகரிக்கப்பட்டு வருகைக்கான கொடுப்பனவாக ரூபா 200 யும் சேர்ந்து சம்பளம் ரூபா 1750 ஆக நாளாந்த சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இலக்க ரீதியில் வரலாறு காணாத வெற்றியாக அமையலாம் ஆனால் உண்மையில் இது உழைக்கும் மக்களுக்கு வெற்றி அல்ல.
இந்த வரலாற்று வெற்றியை முழுமைப்படுத்த தொழிலாளர்களும் குற்றமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கம்பெனிகள் சார்பாக கருத்து தெரிவித்த அதிகாரி சம்பள அதிகரிப்பால் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆறு பில்லியனுக்கும் அதிகமாக செலவிட வேண்டி உள்ளதாகவும் குறிப்பிட்டார். இவர்கள் குறிப்பிடும் அல்லது மேலும் அதிகமாக கருதும் பணத்தையும் உழைத்துக் கொடுக்க வேண்டியவர்கள் உழைக்கும் மக்களே என நாசுக்காக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே அவர்களின் இமாலய வெற்றியை அதன் மகிழ்வை சுமக்கும் சுமை தொழிலாளர்கள் தலையிலே வைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. அரசாங்கம் ஒதுக்கி உள்ள பணத்திலும் மலையக மக்களின் பெரும் பங்களிப்பு உள்ளது எனில் சம்பள அதிகரிப்பின் சுமை மீண்டும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தியமை முதலாளித்துவத்தின் வெற்றி எனலாம். சம்பளம் அதிகரிப்பை எந்த வகையிலும் மலையக உழைக்கும் வர்க்கம் கொண்டாட முடியாது. சம்பள அதிகரிப்பு செய்ததாக கூறுவோரை கடவுளாக்கவும் முடியாது.
"மலையக பெருந்தொட்ட தொழிலாளர் சமூகம் உழைப்பாளர்கள் என்பதற்காகவும், தமிழர்கள் என்பதற்காகவும் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் "என மிக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா பிரதிநிதி ஒமேகா ஒபகாட்டோ கூறியவை எமக்கு நினைவு உண்டு. பெருந்தொட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 2000 ரூபாய்க்கு அதிகமான தொகையை சம்பளமாக வழங்க வேண்டும் என பேராதனை பல்கலைகழக விரிவுரையாளர் திரு விஜயச் சந்திரன் அவர்கள் தனது ஆய்வின் மூலம் நான்கு வருடங்களுக்கு முன்பே குறிப்பிட்டிருந்தார். கடந்த பொது தேர்தலுக்கு முன்னர் மலையக மக்களின் சம்பளம் தொடர்பாக கருத்து தெரிவித்த தற்போதைய தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் செல்வராஜா அவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்ளம் ரூபா 2100 ஆக அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டார். எனவே தற்போதைய சம்பளம் அதிகரிப்பு என்பது மக்களுடைய தேவைக்காக அல்ல. கம்பனிகளின் பாதுகாப்பு மற்றும் இலாபத்தை மையப்படுத்தியதும் தேசிய மக்கள் சக்தியின் அரசியலை மையப்படுத்தியதுமாகும்.
அவ்வாறெனில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையிலான மறைமுக உடன்பாடு வெற்றி கண்டுள்ளது. ஒருவரை ஒருவர் காப்பாற்றி உள்ளனர். ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி அரசாங்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால் இந்த வெற்றியில் தொழிலாளர்களின் இரத்தமே உள்ளது.
தேசிய மக்கள் சக்தி மேலதி வெற்றியும் சூட்சுமமாக தனதாக்கியுள்ளது எனலாம். இதுவரை காலமும் சம்பள அதிகரிப்பு என்பது தொழிலாளர்களின் போராட்டம், தொழிற்சங்கங்களின் இடையீடு பேச்சுவார்த்தை என்பதன் மூலமாக சாத்தியமாகியது. தொழிற்சங்கங்கள் தம்மை தொழிலாளர் மத்தியிலே பலம் மிக்கவர்களாக அடையாளம் காட்டினர். ஆனால் தற்போது அவர்களை எல்லாம் பின் தள்ளி ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர்கள் கட்சியும் மிகவும் பல வாய்ந்தது என்பதை மலையகத்துக்கு உணர்த்தி முழு மலையத்தையும் தமதாக்கும் மறைமுக செயற்பாட்டுக்கான அடித்தளத்தை இட்டுள்ளனர் எனவும் கூறலாம்.
தற்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த மூலம் முதலாளித்துவ தோட்ட நிறுவனங்கள் தமது லாபத்திற்கும் சுகபோக வாழ்வுக்கும் அரசின் ஆதரவை தேசிய மக்கள் சக்தியும் தமது வெற்றி அரசியலுக்கு ஒப்பந்தத்தை லாபமாக பயன்படுத்துவதற்கு அடித்தளம் பெற்றுள்ளது அடுத்த மாகாண சபை சேவையாக இருக்கலாம் நாடாளுமன்ற தேர்தலாக இருக்கலாம் இதை வைத்தே மலையகத்தில் தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவர். தற்போதைய தொழிற்சங்கங்கள் காலம் நிறைவுக்கு வந்தாலும் வரலாம். அதற்கென்று பிரஜா சக்தியையும் பலப்படுத்தி வருவதை நாம் அறிவோம்.
தேசிய மக்கள் சக்திக்குள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி தொழிலாளர்களுக்கு விடுதலையை விடுதலையிலிருந்து தம்மை மிருகத்துக்கொண்டு நெடுநாள் ஆகிவிட்டன. சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்துக்கு இன்று வடக்கு கிழக்கு தமிழர்களை அவர்களின் அரசியலை தகர்ப்பது போல் மலையக தமிழர்களின் தேசிய இன அடையாளங்களை சிதைக்கவும் அதற்காக குரல் கொடுப்போரே தெரிந்து அகற்றவும் இவர்கள் பின்நிற்க போவதில்லை.
இந்நிலையில் பெருந்தோட்ட பிரதேசத்தை மையப்படுத்திய அரசியல் செயல்பாட்டார்களும் மலையக சிவில் சமூகமும் தமது பலத்தை ஒருங்கே கட்டியெழுப்பி மக்கள் அரசியலை நோக்கி மலையக அரசியல் கட்சிகளை இழுத்து வரல் வேண்டும். இல்லையேல் மலையகம் என்பது வெறும் சுற்றுலா தளமாகவும், அரசாங்கத்துக்கு இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் தொழில்துறையாவுமே இருக்கும் என்பதை மலையக சமூக ஆய்வு மையம் எச்சரிக்கோடு அறிவிக்கின்றது.


