ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் தான் தமிழ்ப் படங்கள் ஓடுமா? வைரமுத்து வேதனை
தமிழில் திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயர் வைத்தால் ஓடாது என்று யார் சொன்னது? என 'பிரேக்ஃபாஸ்ட்’ பட விழாவில் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்தால், அகில உலகமும் ஓடி விடும் என்று உங்களுக்கு யார் சொன்னது? என வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ராணவ், ரோஸ்மின் நடித்திருக்கும் காதல் திரைப்படம் 'பிரேக்ஃபாஸ்ட்’ (Breakfast: Accept the Reality). இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பரத், இயக்குர் வசந்த பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்களுக்கு அவரால் மட்டுமே இசையமைக்க முடியும். அதேபோல் இந்தப் படத்தில் புதுமுகம் கதாநாயகனாக நடித்துள்ள போதும் கதையை நம்பி இசையமைத்துள்ளார்” என்றார்.
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசுகையில், ”எனது முதல் திரைப்படம் ’வெயில்’. அந்தப் படத்தின் இயக்குநர் வசந்தபாலன், அவரையும், படத்தின் கதாநாயகன் பரத்தையும் இந்த மேடையில் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய திரைப் பயணத்தில் ஆரம்ப காலகட்டத்தில் என்னுடன் இருந்தவர்களுடன் மீண்டும், மீண்டும் பயணிப்பது எனக்கு நெகிழ்ச்சி அளிக்கக் கூடியது. அந்த வகையில் ஆனந்த ’தாண்டவம்’ திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருடன் மீண்டும் பயணிப்பது மகிழ்ச்சி” என கூறினார்.
தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, “எனக்கு கடந்த 30 ஆண்டுகளாக இயக்குநர் காந்தி கிருஷ்ணாவை தெரியும். நான் சினிமாவில் 45 ஆண்டுகள் இருக்கிறேன். ஒருவர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒரு துறையில் நிலைத்திருந்தாலே அவர் காலத்தோடு இணைந்து பயணிக்கிறார் என பொருள் தரும். அந்த வகையில், காந்தி கிருஷ்ணா காலத்திற்கு தகுந்தார் போல இருக்கிறார். எனக்கு இந்த படம் பிடித்திருக்கிறது, ஆனால் இந்த படத்தின் பெயர் எனக்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக கூறுகிறேன்.
ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் அகில உலகமும் ஓடிவிடும் என்று உங்களுக்கு யார் சொன்னது? அப்படியானால் ஆங்கில படங்கள் அனைத்தும் ஓடி இருக்க வேண்டுமே? தமிழில் பெயர் வைத்தால் ஓடாது என்று யார் சொன்னது? ’ரோஜா’ தமிழில் வைத்த பெயர், நன்றாக தானே ஓடியது. ’பாகுபலி’ தெலுங்கில் வைத்த தலைப்பு, அதுவும் நன்றாக தானே ஓடியது. இதை நான் குறையாக சொல்லவில்லை, என்னுடைய ஆதங்கத்தை சொல்கிறேன்.
நீங்கள் ஒரு பெயரை வைத்துள்ளீர்கள் என்றால், ஒரு கோடி பேர் அதை உச்சரிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தமிழில் எடுக்கும் படத்திற்கு, தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.
தொடர்ந்து நடிகர் பரத் பேசுகையில், “இயக்குநர் ஷங்கரின் ’பாய்ஸ்’ திரைப்படம் மூலம் நான் அறிமுகமானேன். அதை தொடர்ந்து அவரின் உதவியாளர்கள் காந்தி கிருஷ்ணா, பாலாஜி சக்திவேல், வசந்த பாலன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளேன். காந்தி கிருஷ்ணாவை பொருத்தமட்டில், எதையும் அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக எதிர்கொள்ளக் கூடியவர். நிச்சயமாக இது வெற்றி திரைப்படமாகும்” என தெரிவித்தார்.


