ஸ்ரீதரன் எம்பிக்கு பயணத் தடையா? தடுத்து நிறுத்த முடியாது.
.
தமிழக முதலமைச்சரின் விசேட அழைப்பிற்கிணங்க அங்கு சனிக்கிழமை ஆரம்பமாகும் அயலகத் தமிழர் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியான எஸ்.சிறீதரன் ‘பயணத் தடை’ உள்ளதாக தெரிவித்து விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதால் இருதரப்புக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அவர் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை நடத்தும் ‘அயலகத் தமிழர் தினம் 2025’ 11ஆம் திகதி சனி மற்றும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பியான சிறீதரன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் எம்.பி ஆகியோர் தமிழக முதலமைச்சரால் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக சென்னைக்கு புறப்பட்டுச் செல்வதற்காக சென்ற போது, சிறீதரன் எம்.பிக்கு பயணத் தடை இருப்பதாக தெரிவித்து விமான நிலைய அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
என்ன காரணத்திற்காக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது என சிறீதரன் எம்.பி வினவிய போதும் அவர்கள் எவ்வித விளக்கத்தையும் வழங்கவில்லை.
விமான நிலைய அதிகாரிகளின் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ரவூப் ஹக்கீம் எம்.பி, சிறீதரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவருக்கு இராஜதந்திர கடவுச் சீட்டு உள்ளது. அவரை இவ்வாறு திடீரென தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறெனில் தகுந்த காரணம் காண்பிக்கப்பட வேண்டும். எனவே அவரின் பயணத்தை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் பயணம் முடித்து வந்த பின்னர் தேவையானால் நீங்கள் விசாரணைகளை நடத்த முடியுமென வாதிட்டார்.
இதனையடுத்து சிறீதரன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள் சிறீதரனின் பயணத்தை தொடர அனுமதித்தனர்.