ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!
,

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கடன் முகாமைத்துவத்துக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் இருந்தபோதிலும், தவறான நிர்வாக முடிவுகளால் நட்டத்தைச் சந்திக்கும் முன்னணி அரச நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த அரசாங்கம் இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க எடுத்த தீர்மானத்தை மாற்றியமைத்து, தற்போதைய அரசாங்கம் அதை தேசிய விமான சேவையாக தொடர்ந்து செயற்படுத்தவும், புதிய நிர்வாகத்தின் கீழ் இலாபகரமான நிறுவனமாக மாற்றி, முன்னோக்கிக் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளது.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் சரத் கனேகொட மற்றும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.