இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட 'மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்'
ெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதால் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்னமும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது

தொண்டு அமைப்புக்கள் பல செயற்பட்டிருந்தாலும் அவை காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதால் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்னமும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் புகழாரம் சூட்டினார்.
இளவாலை மக்கள் ஒன்றிய அமைப்பின் பிரதான நிதிப் பங்களிப்புடனும், அமரர் மருத்துவர் மோகன் அவர்களது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களினது நிதிப்பங்களிப்புடனும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட 'மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்' இன்று சனிக்கிழமை (12) இளவாலையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பல சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்கள் மிகச் சிறப்பாக உள்ளக விளையாட்டரங்கை இன்று பெற்றிருக்கின்றார்கள்.
எமது மாகாணத்தில் இயங்கும் சில அமைப்புக்கள் புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்று அவர்களை ஏமாற்றியிருக்கின்றார்கள். இவ்வாறு ஏமாற்றுவதற்காகவும் சிலர் அமைப்புக்களை ஆரம்பித்திருந்தார்கள். அவை எல்லாம் நிலைத்து நிற்பதில்லை. நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தால்தான் நிலைத்து நிற்கும்.
இன்றைய இளையோருக்கு பொழுதுபோக்குக்கான வசதிகள் உரிய வகையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் சமூகப்பிறழ்வை நோக்கிச் செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களுக்கு புத்திமதி சொல்லவும் யாரும் முன்வருவதும் இல்லை. அந்தளவு தூரம் அச்சுறுத்தல்களும் இருக்கின்றன.
ஆனால் இளையோரின் அவ்வாறான போக்கை மாற்றியமைக்க கூடிய ஒன்றாக இந்த உள்ளக விளையாட்டரங்கம் எதிர்காலத்தில் இருக்கும். அன்று நாம் பாடசாலை மாணவர்களாக இருந்தபோது பாடசாலை முடிவடைந்த பின்னர் விளையாடுவோம். இன்று பிள்ளைகளுக்கு அவ்வாறான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. பிள்ளைகளை இவ்வாறான உள்ளக விளையாட்டரங்குகளுக்கு விளையாட அனுமதிக்கவேண்டும். அவர்களுக்குரிய வாய்ப்புக்களை வழங்கவேண்டும்.
புலம்பெயர்ந்து சென்றவர்கள் எமது ஊர்களையும், எமது மக்களையும் மறக்கவில்லை. அவர்களால் இங்கு பல விடயங்கள் நடந்தேறுகின்றன. இவ்வாறாக எமது மக்களுக்கும் குறிப்பாக இளையோருக்கும் தேவையான விடயங்களுக்கு தொடர்ந்து உதவவேண்டும், என்றார் ஆளுநர். இந்த நிகழ்வில் உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்ட பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.