இறுதிப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்கிறார் சரத் பொன்சேகா
.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச் சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், போருக்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களை அவர் நிராகரிக்கவில்லை.
சம்பவம் ஒன்று
ஒரு சம்பவம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்ததாகவும், ஆனால் இறுதியில் கட்டளையிலிருந்து நீக்கப்பட்டதன் காரணமாக, விசாரணையை முடிக்க முடியவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாம் இன்னமும் முடிவுச் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சவாலை ஏற்று நாட்டை மீண்டும் பாதைக்கு கொண்டு வரத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“தம்முடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பொன்சேகா கூறினார்.
“நான் பேசத் தயங்கினாலும், அவர் என்னை அழைத்து, வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையாக, ஒன்றாக முன்னேறுவோம் என்று சொல்ல வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
மக்கள் அழுத்தம்
‘அறகலய’ காலத்திலும் அதற்குப் பின்னரும் அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த பொதுமக்கள் அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால் இலங்கை அரசியலில் தற்போதுள்ள தலைவர்கள் மூலம் அந்த மாற்றம் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான உறவுகள் குறித்து பேசிய அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை எனவும், தன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் எனவும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் நாட்டிற்காக தன்னால் இயன்றதைச் செய்துவருகிறது என்பதையும் பொன்சேகா இதன் போது ஒப்புக்கொண்டுள்ளார்.