ஜனாதிபதி தேர்தல்: ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?
.
அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் அல்லது தயாரிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
“ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது, எனினும், இப்போது வரை, ஊரடங்கு உத்தரவை ஏற்பாடு செய்வதற்கான திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் எதுவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கு இருப்பதாகவும், “ஜனாதிபதி விரும்பினால், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம்,” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய அரசாங்க ஒழுங்குமுறை ஆகும்.
இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட 38 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர்.
நாட்டில் 17.1 மில்லியன் மக்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களில் ஒரு மில்லியன் பேர் முதல் முறை வாக்காளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.