ஈரானின் புதிய அலை ஏவுகணை தாக்குதல்!
பரபரப்பான 35-வது அலை ஏவுகணைத் தாக்குதல்
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்கள் முற்றுப்பெறவுள்ளதாக அமெரிக்கத் தரப்பிலிருந்து அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்களிலேயே, ஈரான் தனது 35-வது அலைத் தாக்குதல்களைத் தொடங்கி பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான 35-வது அலை ஏவுகணைத் தாக்குதல்
ஈரானியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் வளைகுடாப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளைக் குறிவைத்து பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களுக்காக 'பாரா' (Farah), 'இமாட்' (Emad), 'கைபர்' (Khaibar) மற்றும் 'காதிர்' (Qadr) ஆகிய அதிநவீன பலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் அலைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவம் தனது குடிமக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு முறைமைகள் (Air Defence Systems) தீவிரமாக இயங்கி வருவதாகவும் அறிவித்துள்ளது.
உளவு வலைப்பின்னல் தகர்ப்பு: 30 முகவர்கள் கைது. இதேவேளை, ஈரானுக்குள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 30 முகவர்களை ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் அதிரடியாகக் கைது செய்துள்ளது. இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என்றும், அவர் ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தரவுகளை இரு வளைகுடா நாடுகளுக்குப் பரிமாறி, அங்கிருந்து அவை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சென்றடைந்ததாகவும் ஈரானிய அரச ஊடகமான 'தஸ்னிம்' (Tasnim) செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் அரசாங்க எதிர்ப்பு சக்திகளுடன் தொடர்புடைய ஊடக மற்றும் களப் பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
"யுத்தத்தின் காலத்தை ஈரான் தீர்மானிக்கும்": நீண்ட காலப் போர் எச்சரிக்கை!
யுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஈரான் அடியோடு நிராகரித்துள்ளது. "இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் என்பதை டெஹ்ரான் மாத்திரமே தீர்மானிக்கும்" என ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைப் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் சோர்வடையச் செய்யும் ஒரு 'நீண்ட கால தேய்மானப் போருக்கு' (War of Attrition) ஈரான் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், இதற்காகத் தங்களிடம் உள்ள இன்னும் அதிநவீன ஆயுதங்களை இனிவரும் காலங்களில் பயன்படுத்தவுள்ளதாகவும் ஈரானியப் புரட்சிகரக் காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெஹ்ரானில் உக்கிரமடையும் மோதல்கள்
கடந்த சில மணிநேரங்களாக டெஹ்ரான் நகரின் மையப்பகுதிகள் மற்றும் முக்கிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. அதேவேளை, ஈரானிய வான் பாதுகாப்புப் படைகள் அவற்றிற்குச் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருவதையும், நகரின் பல பகுதிகளில் குண்டுச் சத்தங்கள் மற்றும் வான் பாதுகாப்பு முறைமைகளின் ஒலிகள் எதிரொலிப்பதையும் சர்வதேச செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


