பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுமா?,,, இலவு காத்த கிளிகளா தமிழர்கள்?
அனுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்த பின்னரும் பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.
நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற உரையின் போது, 27.02.2025. நாட்டில் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் வாக்குறுதி வழங்கி இருந்த நிலையில் அது தொடர்பில் சர்வதேச நிறுவனங்கள் என்னிடம் வினவியிருந்தன. புதிய அரசியலமைப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் நிரந்தரமாக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார் என நான் குறிப்பிட்டேன். அதனால் தயவுசெய்து இது போன்ற வேடிக்கையான விடயங்களை செய்யாதீர்கள். இந்த நாடு தொடர்பில் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எமக்கு தெரிந்து கொள்ள வேண்டியது. நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்வதாக குறிப்பிட்டீர்கள். இப்போது அதனை செய்கின்றீர்களா? இல்லையா? நிறைவேற்று அதிகாரத்தை இரத்து செய்கின்றீர்களா? அவ்வாறாயின் எப்போது? புதிய அரசியலமைப்பை கொண்டு வருகின்றீர்களா? அவ்வாறாயின் அது தொடர்பிலான செயற்பாடுகளை எப்போது ஆரம்பிக்கப் போகின்றீர்கள்? இந்த அரசியலமைப்பிற்கும் அப்பால் இப்பாராளுமன்றத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்திற்கு பாரிய இழப்பு நேரிடுவதாக குறிப்பிடப்பட்டது. இன்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 159 பேர் இருக்கின்றனர்.
நான் அறிந்தவகையில் ஒரு உறுப்பினரின் சம்பளம் குறைந்தது 2 இலட்சம் என்று எடுத்துக் கொள்வோம். தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் மாவட்டத்திற்கு மாவட்டம் அது வேறுபடும். தொலைவில் உள்ளவர்களுக்கு 3 இலட்சம் அவ்வாறு இருக்கின்றது. குறைந்தபட்சம் 2 இலட்சம் என்று பார்த்தால் 159இனை 2இலட்சத்தினால் பெருக்கினால் மாதத்திற்கு 31 மில்லியன் செலவாகிறது. மாதத்திற்கு 381 மில்லியன். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அவ்வளவு செலவாகிறது. ஐந்து வருடத்திற்கு கணக்கிட்டால் 1.9 பில்லியன் ரூபாய் செலவாகிறது. காசோலையின் 60 பக்கங்களிலும் கையெழுத்து இடப்பட்டு பெறப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களே எம்மிடம் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் நிதியை சேமிப்பதாயின் சம்பளம் பெறாது இதனை நாட்டு மக்களுக்கு வழங்குங்களேன். அஸ்வெசுவ திட்டத்திற்கு வருடத்திற்கு முழு நாட்டிற்கும் செலவாகும் தொகை 2.3 பில்லியன் ரூபாய் என்று நான் நினைக்கின்றேன். ஆனால் ஐந்து வருடத்திற்கு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் 1.9 பில்லியன் ரூபாய். நாட்டின் நிதி, வரி பணம் ஆகியவற்றை நாம் சேமிப்போம் என்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஏன் இந்த சம்பளத்தை பெற்று கட்சிக்கு வழங்குகிறது? அவ்வாறாயின் அதனை கிராமத்தில் உள்ள மத இஸ்தலத்திக்கு வழங்குங்கள். அல்லது சம்பளத்தை பெற்று பாடசாலை ஒன்றுக்கு வழங்குங்கள். இதற்கு அடுத்தபடியாக, இன்று நிறைய விடயங்கள் குறித்து பேச வேண்டி இருக்கிறது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பில் கவனத்தில் கொண்டால். அதிகாரமுடைய சகல துறைகளினதும் அனைத்து அதிகாரங்களையும் தமக்கு கீழ் வைத்திருப்பது தொடர்பில் இந்த அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு பாரிய அழுத்தத்தில் உள்ளது. நான் அறிந்த வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் தற்போதுள்ள பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸாரை இடமாற்றும் பொறுப்பை எமக்கு வழங்குமாறு கோரியுள்ளார். கௌரவ நீதி தொடர்பான அமைச்சர் இந்த சபையிலே இருக்கிறார். அரசியலமைப்பிற்கு அமைய ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் அதிகாரத்தை அவ்வாறு ஒரு தனிநபருக்கு வழங்க முடியாது. இந்த கடிதம் எழுதப்பட்ட நாள் முதல் பொலிஸாரும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையே பாரிய பிரச்சினை நிலவுகிறது. கடந்த வாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 190 பொலிஸ் அதிகாரிகளை இடமாற்ற கோரினர். அதில் 140 அங்கீகரிக்கப்பட்டது. எஞ்சிய 50 பேர் தொடர்பில் சில சிக்கல்கள் காணப்படுவதால் அவை செய்யப்படவில்லை. இதற்கு தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்கள் ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவொரு தீவிரமான நிர்வாகப் பிரச்சினை. நாம் நாட்டின் தரத்தை மேலோங்க செய்வோம் என சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார். அந்த மேலோங்க செய்யப்பட்ட தரம் தான் தற்போது பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு வந்துள்ளது. நாட்டிற்குள் நல்லது கெட்டது செய்ய வேண்டும். எமக்கு அது தேவையற்றது. ஆனால், ஒரு நடைமுறை காணப்படுமாயின் அதனை கடைப்பிடிக்க வேண்டும். இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுவதால் அதனை கடைப்பிடிக்க தேவையில்லை என யாராலும் கூற முடியாது. அடுத்தது தேர்தல் ஆணைக்குழு. தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்தின் பாரிய அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. உடனடியாக தேர்தலை நடத்த அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளது. சுயாதீனமாக தேர்தல் தினத்தை தீர்மானிப்பது ஒரு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு. வரவு செலவு திட்ட விவாதத்தின் பின்னர் மாகாண சபை தேர்தல் குறித்து அறிவிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம். ஏனெனில் மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாம் அங்கு இருக்க வேண்டும். இங்கு விவாதங்களில் பங்குகொள்ள இயலாது. அரசாங்கத்தின் தேவை அதுவாகதான் இருந்ததோ தெரியவில்லை. ஆனால் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்தின் சார்பில் அழுத்தம் வழங்கப்பட்டு வருவதாக எமக்கு அறிய கிடைத்தது. இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த செயற்பாடுகளையே இந்த அரசாங்கமும் முன்னெடுத்து வருகிறது.
மனித உரிமை ஆணைக்குழுவும் இந்த விவாதத்தில் உள்ளடங்குகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் அண்மையில் உரையாற்றியிருந்தார். அவரது ஜெனீவா உரைக்கும், இந்த சபையில் நீதி தொடர்பான அமைச்சரின் உரைக்கும் இடையே பாரிய வேறுபாடு நிலவுகிறது. அது ஜே.வி.பி. க்கும் என்.பி.பி.க்கும் இடையிலான வித்தியாசமா என்று எனக்கு தெரியவில்லை. அரச வழக்கறிஞர்கள் அலுவலகம் ஒன்றை நிறுவ போவதாக நீதி அமைச்சர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கு ஒரு வாரம் முன்னதாக பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீதி தொடர்பான அமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். நீதி தொடர்பான அமைச்சர், பிரதமர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பயங்கரவாத தடை சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றீடு இல்லை என்ற நிலைபாட்டிலேயே இருந்தனர். ஆனால் இன்று பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டத்தில் கூட பங்கு கொள்வதை அவர்கள் மறுத்தனர். அதுமட்டுமின்றி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும் பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அறுகம்பேயில் இடம்பெற்ற சம்பவமொன்று. இரண்டாவது மாவீரர் தினத்தில் சமூக வலைத்தள பதிவொன்று தொடர்பில் இடம்பெற்றது. மூன்றாவது கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறாயின் உங்களுக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் என்ன வித்தியாசம்? வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் ஜெனீவாவில் பயங்கரவாத தடை சட்டம், பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வது குறித்து ஏதாவது பேசுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் ஒன்றுமில்லை. பொறுப்புகூறல் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. உங்களது கருத்துக்களுக்கு இடையேயும் வித்தியாசம் காணப்படுகின்றதா? எனது இந்த உரையின் பின்னர் நீங்கள் அதற்கும் பதிலளிக்கலாம்.
வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவிற்கு சென்று பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் மிக முக்கியமான விடயம் பொறுப்புகூறல் விடயம் தொடர்பில் அமைச்சர் ஜெனீவாவில் கடந்த காலங்களில் செய்த விடயங்களைவிட புதிய அரசாங்கத்தின் புதிய முன்மொழிவுகள் தொடர்பிலும் எதுவும் குறிப்பிடவில்லை. எங்களுடைய வடக்கு கிழக்கு மக்கள் பொறுப்புகூறல் விடயம் குறித்து மிகுந்த கரிசணையுடன் இருக்கின்றார்கள். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். ஆனால் கடந்த காலத்தில் வந்த அனைத்து அரசாங்கங்களையும் போல நீங்களும் அதே வேலையை தான் செய்யப் போகின்றீர்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே புதிய அரசியலமைப்பை பற்றி நீங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இன்றுவரை புதிய அரசியலமைப்பு பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. கூறிய ஒரே விடயம் அரசியலமைப்பில் எதிர்க்கட்சி தலைவரின் பெயர் நிரந்தரமாக்கப்படும் என்ற விடயம் மாத்திரமே. புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வு பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள். சரி அதிகாரப் பகிர்வை விடுங்கள். புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? வந்தால் அதன் உள்ளடக்கம் என்ன? பொறுப்புகூறல் விடயத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்த தலைப்பை நான் பேசுவதற்கு காரணம் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுக்கான ஒதுக்கீடுகளும் இந்த வரவு செலவு திட்டத்தில் இருக்கின்றது. தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளில் பொறுப்புகூறல் விடயம் என்பது பிரதானமான ஒரு விடயம். இந்த விடயம் தொடர்பாக உங்களுடைய வெளிவிவகார அமைச்சர் எந்த சாதகமான பதிலையும் கூறவில்லை. இதற்கான பதிலடியை எதிர்வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.