முஸ்லிம்கள் அண்ணன் சம்பந்தன் மீது கொண்டிருக்கின்ற வாஞ்சை அளவிட முடியாதது – ரவூப் ஹக்கீம்
மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போது.
முஸ்லிம்கள் அண்ணன் சம்பந்தன் மீது கொண்டிருக்கின்ற வாஞ்சை அளவிட முடியாதது. முஸ்லிம்களையும் அரவணைத்த ஒரு தீர்வு வடக்கு, கிழக்கில் வரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (07) நடைபெற்ற மறைந்த இரா. சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களின் தானைத்தளபதி சம்பந்தன் மூத்த அண்ணனாக, வழிகாட்டியாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ்த் தேசியப் பரப்பின் ஆலமரமாக இன விடுதலைக்காக சிம்ம சொப்பணமாக ஒலித்த குரல் நித்தியமாக ஓய்ந்துள்ளது.
அவரது அரசியல் வாழ்க்கையின் சாதனைகளைப் பற்றி நீண்ட நெடிய உரையாற்றுகின்ற நேரம் இதுவல்ல. தமிழின் விடுலைக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டாலும், நில அபகரிப்புக்களுக்கு எதிராக கர்ஜித்த குரல் நிரந்தரமாக மௌனித்துவிட்டாலும் அந்த அண்ணாருக்கு செலுத்துகின்ற அஞ்சலி எதுவாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் சிந்திப்பதுதான் தலையாய கடமையாகவுள்ளது என்று கருதுகின்றேன்.
குறிப்பாக தமிழ் பேசும் தரப்பினருக்குள் காணப்படுகின்ற ஒற்றுமையை குலைத்துவிடாது பாதுகாப்பதுதான் அன்னாருக்கு செலுத்துகின்ற பாரிய அஞ்சலியாக இருக்கும் என்பது தான் எனது தாழ்மையான கருத்தாகும்.
முஸ்லிம்கள் அண்ணன் சம்பந்தன் மீது கொண்டிருக்கின்ற வாஞ்சை என்பது அளவிட முடியாதது. முஸ்லிம்களையும் அரவணைத்த ஒரு தீர்வு வடக்கு, கிழக்கில் வரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கு எதிராக சலசலப்புக்கள் அவ்வப்போது எழுந்தபோது அதற்கு எதிராக தயங்காது சலனமில்லாது குரல் கொடுத்தார் என்றார்.