ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார வெற்றிபெற அதிக வாய்ப்பு: சர்வதேச ஊடகங்களில் பரவலாக வெளியாகும் செய்தி
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
தொழிலாள வர்க்கத்தை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் கூட்டணியாக உள்ள தேசிய மக்கள் சக்தி இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் ஒரு வலுவான போட்டியாளரை கொண்டு களங்கண்டுள்ளதாக இந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது மக்கள் அடைந்துள்ள ஏமாற்றத்துக்கு மாற்று சக்தியாக தேசிய மக்கள் சக்தி தம்மை முன்னிறுத்தி மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவுடன் மாற்றத்தின் முகவராக தன்னை அறிவித்துக்கொண்டது செயல்படுகிறது.
2022ல் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றிய பொதுப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய மக்கள் சக்தி திகழ்ந்ததாகவும் குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் associated press க்கு கருத்து வெளியிட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க,
“எங்கள் நாட்டு மக்கள் ஒரு மாற்றத்திற்காக பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர். நாங்கள்தான் அந்த மாற்றத்தின் முகவர்கள். மற்ற அனைத்து வேட்பாளர்களும் பழைய, தோல்வியுற்ற பாரம்பரிய அமைப்பின் முகவர்கள்
தற்போதுள்ள IMF திட்டத்தில் இருந்து எங்களால் வெளியே வர முடியாது. ஏனெனில் நாடு நிதி ரீதியாக சரிந்த பின்னரே IMF திட்டத்துக்குள் நுழைந்தோம். மற்றொரு மாற்று இருந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
இப்போது அனைத்து இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளின் கீழ் மறுசீரமைக்க வேண்டிய கட்டாய நிலையில் அரசாங்கம் உள்ளது. இதுகுறித்து எமது அரசாங்கத்தில் அவதானம் செலுத்தி மக்களுக்கு சாதகமான தீர்வுகள் எட்டப்படும்.
IMF திட்டத்துடன் முன்னேறும்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று இலங்கையின் கொடூரமான 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்க தனது நிர்வாகம் முயலாது.
அதற்குப் பதிலாக, மனித உரிமை மீறல்கள் எனக் கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உடன்பாட்டைப் பெறுவதிலும் கவனம் செலுத்தும்.
பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினையில், அது பழிவாங்கும் வகையில் இருக்கக்கூடாது. ஒருவரைக் குற்றம் சாட்டும் வகையில் இருக்கக்கூடாது. ஆனால் உண்மையைக் கண்டறிய வேண்டும்
பாதிக்கப்பட்டவர்கள் கூட யாரும் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்தது என்பதை மட்டுமே அவர்கள் அறிய விரும்புகிறார்கள்.” என்றும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
பாரிய கடன், மோசமான வரிக் கொள்கை, தவறாக திட்டமிடப்பட்ட இறக்குமதித் தடைகள், கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார விளைவுகள் மற்றும் நாட்டின் நாணயமான ரூபாயை வீழ்ச்சி, வெளிநாட்டு இருப்புக்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி இலங்கை எதிர்கொண்டது.
கோட்டாபய ராஜபக்ச தமது பதவியை துறந்ததும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்.
இவரது இந்த காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்பு உட்பட பல்வேறு விடயங்களில் அரசாங்கம் சர்வதேசத்திடமும் உள்நாட்டிலும் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையால் தற்போது பொருளாதார நெருக்கடி ஓரளவு தளர்ந்துள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் பிரகாரம் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருக்கும் பிரதான வேட்பாளராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.