“டெலிகொம் நிறுவனத்தை நிர்வகிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்“: புதிய திட்டத்தை அறிவித்த தேசிய மக்கள் சக்தி
.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை நிர்வகிக்க வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரை கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக உள்ளதென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதியியல் நிபுணர்களின் தேசிய மாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி எதிரானது. அதனை நிர்வகிப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டாளரை வரவழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
நாங்கள் ஸ்ரீலங்கா டெலிகொம் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடினோம். டெலிகொம் ஒரு உயர் தொழில்நுட்பத் துறையாக இருப்பதால்அதனை நிர்வகிக்க போதுமான திறன் இல்லையென அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தேசிய மக்கள் சக்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திறமையான மனித வளங்கள் இன்மையால் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நாட்டிற்கு புதிய அறிவு மற்றும் திறன்களைக் கொண்டுவரும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்தது 200 மாணவர்களை அரசாங்க செலவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.