கப்பல்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையை நிறுத்தியது அமெரிக்கா!
ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
கப்பல்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையை நிறுத்தியது அமெரிக்கா; ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நடைபெறும் முக்கிய நகர்வுகள் குறித்த சமீபத்தியத் தகவல்களின் தொகுப்பு :
1. முடிவுற்றது 'காவியச் சீற்றம்' நடவடிக்கை
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், "அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி, ஈரானுக்கு எதிரான 'காவியச் சீற்றம்' என்ற மாபெரும் ராணுவ நடவடிக்கை முழுமையாக முடிவடைந்துவிட்டது. நாங்கள் இப்போது 'தற்காப்பு' நிலைக்கு மாறியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தடையற்ற கடல்வழிப் பயணத்தை நிலைநாட்டவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் அமெரிக்கா ஒரு புதிய தீர்மானத்தைக் கொண்டுவரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
2. 'விடுதலைத் திட்டத்தை' நிறுத்திய டிரம்ப்
வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 'விடுதலைத் திட்டத்தை' தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
"மாபெரும் ராணுவ வெற்றியின் காரணமாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தலைவர்களுடன் முழுமையான மற்றும் இறுதியான ஒரு ஒப்பந்தம் எட்டப்படுவதில் பெருமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும்" இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
3. துறைமுக முற்றுகை தொடரும்!
ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாலும், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 'கப்பல் போக்குவரத்து முற்றுகை' தொடர்ந்து அமலிலிருக்கும் என அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கையை ஏற்றே இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4. சரக்குக் கப்பல் மீது மர்மத் தாக்குதல்
அமெரிக்காவின் இந்த அமைதி அறிவிப்புகள் வெளியாவதற்குச் சற்று முன்பு, செவ்வாய்க்கிழமை இரவு ஹார்முஸ் நீரிணையில் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் கடல்சார் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
- சிவா சின்னப்பொடி


