சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதிக்கு மீண்டும் கடிதம்! எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய சாட்சியாளர் மாத்திரமே.
பெரிய தலைகளைக் காப்பாற்ற தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடா சோமரத்ன ராஜபக்ஷ!
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு முன்னர் அனுப்பிவைத்த கடிதம் மூலம் உங்களுக்கு அறியத்தந்து சுமார் ஒரு வருடம் கடந்திருக்கிறது. எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய ஒரு சாட்சியாளர் மாத்திரமேயாவார். எனவே இதுகுறித்து உங்களது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறியத்தாருங்கள் என வலியுறுத்தி மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளிடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அதனையடுத்து இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர்.
அச்சந்திப்பினது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளித்த சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,
இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரமவினால் ஜுன் 4 ஆம் திகதியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் மற்றுமொரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எனது கணவர் உட்பட 5 இராணுவ வீரர்களுக்கு 1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் குற்றத்துடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு முன்னர் அனுப்பிவைத்த விரிவான கடிதத்தின் மூலம் உங்களுக்கு அறியத்தந்து சுமார் ஒரு வருடம் கடந்துள்ளது.
இதுகுறித்து உங்களது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறியத்தருமாறும், எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய ஒரு சாட்சியாளர் மாத்திரமே என்பதுடன், அவர் 1996 இல் கைதுசெய்யப்பட்டு அன்று முதல் இன்று வரை தண்டனை அனுபவித்து வருவதனால், இதுகுறித்து ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.


