பெற்றோரின் முன்னிலையிலேயே மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்ட மீனவ இளைஞரை போதைப்பொருள் கடத்தல்காரராகச் சித்தரித்தது பொலிஸ்!
கொலையை மூடிமறைப்பதற்கான திட்டமொன்று தீட்டப்பட்டு வருவதாக குடும்ப உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் குற்றம் சுமத்துகின்றனர்.
பொலன்னறுவை மாவட்ட மோட்டார் சைக்கிள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கடந்த 12ஆம் திகதி பெற்றோரின் முன்னிலையிலேயே பட்டப்பகலில் மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்ட மீனவ இளைஞரை போதைப்பொருள் கடத்தல்காரராகச் சித்தரித்து இந்தக் கொலையை மூடிமறைப்பதற்கான திட்டமொன்று தீட்டப்பட்டு வருவதாக குடும்ப உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் குற்றம் சுமத்துகின்றனர்.
வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய ஜி.ஏ.கே. டிஷான், இதயத்துக்குள் ஊடுருவிய துப்பாக்கி ரவை காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது ஜனவரி 13 ஆம் திகதி நடத்தப்பட்ட மரணப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு, பல வழக்குகளில் சந்தேகநபராகவும் இருந்துள்ளார்.
உயிரிழப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னதாக, வீதியின் மூன்று இடங்களில் வைத்து பொலிஸார் அந்த இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் அந்த இளைஞனை சுட்டுக் கொன்றது கொலை செய்யும் நோக்கத்துடனேயே அன்றி, திடீரென ஏற்பட்ட ஒரு சூழ்நிலையால் அல்ல என இலங்கை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி சேனக பெரேரா குறிப்பிட்டார். அத்துடன் அந்தப் படுகொலையின் பின்னர் பொலிஸ் உயர் அதிகாரிகளின் செயற்பாடுகளும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உயிரிழந்த இளைஞனின் பெற்றோரைச் சந்தித்த பின்னர் அவர் தெரிவித்தார்.
குற்றப்பின்னணியைத் தேடி குற்றங்களை மூடிப்புதைத்தல்!
"தெளிவாகவே இந்தக் கொலை தவறுதலாகவோ அல்லது தற்காப்புக்காகவோ செய்யப்பட்டது அல்ல. பொலிஸார் உச்சக்கட்ட பலத்தைப் பிரயோகித்து சட்டவிரோதமாகச் செய்த ஒரு மனிதப் படுகொலையாகும். பொலிஸார் அந்த இளைஞனின் கடந்தகால பின்னணியை முன்னிலைப்படுத்தி இந்தக் கொலையை நியாயப்படுத்த முயல்கின்றனர். அவருக்கு எதிராக வழக்குகள் இருந்தன எனக் கூறி இந்தக் கொலையை நியாயப்படுத்தவும், எந்த விதமான விசாரணையும் இன்றி மூடிமறைக்கவும் பொலிஸார் தற்போது பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்," என குற்றம் சுமத்தும் சட்டத்தரணி சேனக பெரேரா, பொலிஸாரின் இவ்வாறான நடத்தை புதிய ஒன்றல்ல எனவும் சுட்டிக்காட்டினார்.
"பொலிஸார் எப்போதுமே இதைத்தான் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் கொல்லப்பட்ட நபர்கள் மீதும் பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நாம் பார்த்தோமே? பொலிஸாரின் கொலைக் குற்றத்தை மறைப்பதற்காக, கொல்லப்பட்ட நபர் குறித்த தவறுகளைப் பெரிதுபடுத்தி அவற்றை சமூக மயப்படுத்தி, பொலிஸாருக்கு ஆதரவாக பொதுமக்களின் கருத்தைத் திருப்ப முயற்சிப்பதுதானே இது?"
நாட்டின் குடிமக்கள் இவ்வாறான குற்றங்களை அங்கீகரிக்கும் வரை பொலிஸாருக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என வலியுறுத்திய சட்டத்தரணி சேனக பெரேரா, பொலிஸாரால் செய்யப்பட்ட ஒரு மனிதப் படுகொலையின் பின்னர் இவ்வாறான முறையில் செயற்படுவதன் ஊடாக முறையான விசாரணைக்கான வாய்ப்புகள் பாரிய அளவில் தடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் குழப்பம் ஏற்படுத்துபவராக நடந்துகொண்டவர் எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.
"அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளன" பொலன்னறுவை SSP
"இந்த இளைஞருக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் அவருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது," என பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க எம்மிடம் தெரிவித்தார்.
'கார்தி அம்பிரோசி கங்கானம்கே டிஷானின் முன்னைய குற்றங்கள் மற்றும் நிலுவையிலுள்ள வழக்குகள்' என்ற தலைப்பிலான ஆவணமொன்றை எமக்கு அனுப்பிவைத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனதுங்க, சம்பவம் நடந்த தினத்திலும் அந்த இளைஞன் வீதியில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், டிஷானின் கொலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு ஆவணமும் எமக்கு வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்ட சட்டத்தரணி சேனக பெரேரா, முன்னைய குற்றங்கள் இருந்த காரணத்தால் மாத்திரம் இவ்வாறான முறையில் நிராயுதபாணியான ஒருவரைத் திட்டமிட்டுச் சுட்டுக்கொல்ல எந்தச் சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.
"ஒரு நபரைக் கொலை செய்ய பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன? வழக்குகளை விசாரிப்பது பொலிஸாரா? முன்னைய குற்றங்கள் இருந்ததற்காக இவ்வாறு வீடுகளுக்குள் புகுந்து மனிதர்களைக் கொல்ல பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது யார்? இவை இவ்வாறே நடக்குமாயின் நாட்டுக்கு ஒரு நீதிமன்றம் எதற்கு? சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நீதிமன்றத்தின் பொறுப்பாகும். விசாரணை செய்வது, தீர்ப்பு வழங்குவது ஆகிய இரண்டும் தமது உரிமையென பொலிஸார் கருதுகின்றனரா?" என அவர் கடுமையாக கேள்வி எழுப்பினார்.
தனது சகோதரனுக்கு எதிராகப் பல வழக்குகள் இருந்த போதிலும், அன்றைய தினத்தில் நிகழ்ந்த சம்பவத்துக்கும் அந்த வழக்குகளுக்கும் என்ன தொடர்பு என கொலை செய்யப்பட்ட டிஷானின் இளைய சகோதரரான் ஜி.ஏ.கே. தில்ஷான் கேள்வி எழுப்பினார்.
"அண்ணனுக்கு எதிராக சில வழக்குகள் இருந்தது உண்மைதான். ஆனால் அவை பாரிய குற்றங்களுக்காக அல்ல. பொலிஸார் பலமுறை அண்ணனுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர். அதற்காக இப்படி வீட்டுக்கே துரத்தி வந்து தாய், தந்தை முன்னிலையில் மார்பிலேயே சுட்டுக்கொல்ல முடியுமா? சுட்டுக்கொன்றுவிட்டு அவருக்கு முன்னைய வழக்குகள் இருந்தன எனக் கூறுவது சரியா?" என அவர் மிகுந்த வேதனையுடன் கூறினார்.
துரத்தித் துரத்தி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு!
தனது சகோதரர் அவரது நண்பர்கள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது சிங்கபுர சந்தியில் அதனை நிறுத்துமாறு பொலன்னறுவை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் இரு உத்தியோகத்தர்கள் கையசைத்து சமிக்ஞை செய்ததாகவும், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் செலுத்தியதால் அந்த உத்தியோகத்தர்களும் பின்னால் துரத்தி வந்து வழியில் மூன்று இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் உயிரிழந்த இளைஞனின் சகோதரர் மேலும் தெரிவித்தார்.
"பொலிஸார் முதலில் தம்மை வெலிகந்தை சிங்கபுர வீதியில் உள்ள எல்.ஜி. பாம் அருகில் வைத்து சுட்டதாக அண்ணனின் நண்பர்கள் இருவர் எங்களிடம் கூறினார்கள். அந்த நேரத்தில் குண்டு பாயவில்லை. பொலிஸாரும் பின்னால் வந்து முத்துவெல்ல சந்தியில் வைத்து மீண்டும் சுட்டுள்ளனர். அதன் பின்னர் கல்கந்தை கிராமத்துக்குள் நுழையும் போதும் மீண்டும் சிலமுறை சுட்டதாக அண்ணனின் நண்பர்கள் இருவர் எம்மிடம் கூறினார்கள்," என தில்ஷான் விளக்கினார்.
பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தச்சொல்லி சமிக்ஞை செய்த இடத்திலிருந்து கல்கந்தை கிராமத்திற்கு சுமார் 18 கிலோமீற்றர் தூரம் உள்ளதாகவும், வழியில் இராணுவ முகாம் ஒன்றும் இருப்பதாகவும் உயிரிழந்த டிஷானின் சகோதரர் எம்மிடம் மேலும் தெரிவித்தார்.
டிஷானைத் துரத்தி அவரது வீட்டுக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் பொலிஸ் கட்டளையை மீறிச் செல்வதாகவோ அல்லது உயிரிழந்த இளைஞர் குழப்பம் விளைவிப்பவராகவோ பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ அறிவித்தார்களா என வினவியபோது, அவ்வாறு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
"அவர்களுக்கு அவ்வாறு கூற வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கையால் மோட்டார் சைக்கிளைச் செலுத்திக்கொண்டு பொலிஸாருக்குத் கதைத்துச் சொல்ல முடியாதுதானே," என அவர் கூறியபோதிலும், டிஷானின் பெற்றோரின் கூற்றுப்படி, குறித்த இளைஞரைத் துரத்தி வீட்டுக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மணிநேரம் அந்த மீனவ இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"மார்பிலேயே சுடு"
வீட்டுக்குச் சென்ற அந்த உத்தியோகத்தர்கள் அதன் பின்னர் நடந்துகொண்ட விதம் தற்போதைய நிலையில் இரகசியமான ஒன்றாக இல்லாததற்குக் காரணம் சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி ஆகும். அந்தக் காணொளியிலுள்ள காட்சிகள் மற்றும் உரையாடல்களைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும் நபர்களும் கவனத்திற் கொண்டிருந்தால், துப்பாக்கிச் சூடு நடத்திய உத்தியோகத்தர்கள் இந்நேரத்துக்கு சிறையில் இருந்திருக்க வேண்டும்.
அந்த காணொளியை மிக முக்கியமான குற்றவியல் ஆதாரமாகக் கருதி சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதா என்பது பற்றித் தெரியவில்லை.
காணொளியில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்குத் தயாராகும் விதம் மிகத் தெளிவாகக் கேட்கிறது.
"ஏய், துப்பாக்கியைக் கொண்டு வா. இது அன்லோடாக உள்ளது. விரைவாக வா, விரைவாக வா," என ஓர் உத்தியோகத்தர் கூறும்போது, மற்றைய நபர் "இதில் இருக்கிறது" எனக் கூறுகிறார். "ஏய் வா, மார்பில் சுட வேண்டும். மார்பிலேயே சுடு," என மீண்டும் முதலாவது குரல் கூறுவது மிகத் தெளிவாகக் கேட்கிறது. அதே நேரத்தில் அருகில் பெண் ஒருவர் அழுவதும் கேட்கிறது. அது தனது பிள்ளைக்கு ஆபத்து விளைவிக்க வேண்டாம் என டிஷானின் தாய் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் செய்த உருக்கமான வேண்டுகோள் ஆகும்.
அதன் பின்னர் கேட்கும் துப்பாக்கிச்சூடு சத்தத்துடன் அந்த இளைஞர் உடனடியாகத் தரையில் வீழ்வதைக் காண முடிகிறது.
படுகொலை நிகழ்ந்த நேரத்தில் அந்த இளைஞருடன் வீட்டில் அவரது தாயும் தந்தையும் மாத்திரமே இருந்துள்ளனர்.
டிஷானைத் துரத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவரை ஏளனம் செய்தும் பலவாறாக அவமானப்படுத்தியும் அவரை ஆத்திரமூட்டும் வகையில் நடந்துகொண்டதாக தந்தை கூறுகிறார்.
"மகன் கத்தியை எடுத்துக்கொண்டு வந்தது பிறகுதான். அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கு முன்னர் அவரைப் பிடிக்கவோ, கைது செய்யவோ பொலிஸாருக்குப் போதிய சந்தர்ப்பம் இருந்தது. பொலிஸார் கூறியவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில்தான் மகன் கத்தியையும் கதவுத் தடியையும் எடுத்துக்கொண்டு முன்னோக்கிச் சென்றார்," என கொல்லப்பட்ட டிஷானின் தந்தை டி.ஏ.கே. திலகசிறி கூறினார்.
அவர் கூறுவது உண்மை என்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளியைப் பார்க்கும் எவருக்கும் புரியும் என்பதில் ஐயமில்லை.
"சுமார் அரை மணிநேரம் நிராயுதபாணியாக இருந்த பிள்ளையைத்தான் எமது கண்களுக்கு முன்னாலேயே ஒரு மிருகத்தைப் போலச் சுட்டுக்கொன்றனர். சுட முற்படும்போதே மகனின் தாய் சுவரை நோக்கித் திரும்பினார். ஏனெனில் பொலிஸார் கொல்வோம் என்றே சொன்னார்கள். சுடுவதை நான் பார்த்தாலும் எனக்கு ஒன்றும் செய்ய தைரியமிருக்கவில்லை. மகனும் பொலிஸாரும் இரண்டு மூன்று மீற்றர் தூரத்தில் கூட இருக்கவில்லை. மார்பிலேயே வைத்துச் சுட்டார்கள். துப்பாக்கி முனை சரியாக மார்பையே இலக்கு வைத்தது. அதன் பிறகு எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது." டிஷானின் தந்தையின் நடுங்கும் குரல் மிகுந்த மனவேதனை தருவதாக உள்ளது.
"துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்க முடியாமல் காதுகளை பொத்திக்கொண்டேன்"
"நான் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் கேட்டேன், ஐயா என்ன செய்யப் போகிறீர்கள் என்று. 'வெறென்ன செய்வது? சுடப் போகிறோம்' என அவர்கள் சொன்னதும் நான் ஓடிப்போய் வீட்டுக்குள் சென்று சுவரை நோக்கித் திரும்பி காதுகளை இறுக்கமாக பொத்திக்கொண்டேன். அப்போது இரண்டு துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள் கேட்டன. சற்று நேரத்தின் பின் மெதுவாக வெளியே வந்து பார்த்தபோது பிள்ளை விழுந்து கிடந்தார். நான் அருகில் செல்லும்போது பொலிஸார் தொட வேண்டாம் என்றனர். அப்போது நான் ‘ஏன் ஐயா கண்கள் திறந்தே இருக்கின்றன?’ என்று கேட்டேன். 'ஆ, அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது' என்று என்னிடம் சொன்னார்கள்," என அழுதுகொண்டே டிஷானின் தாய் கூறினார்.
எங்கே சுட்டீர்கள் என்று தான் பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'இல்லை, இல்லை பிரச்சினை இல்லை காலில்தான் சுட்டோம்' என அவர்கள் தன்னிடம் கூறியதாக, சட்டத்தரணி சேனக பெரேராவிடம் தாய் கூறியுள்ளார்.
டிஷான் மீது இரண்டு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முதல் குண்டு மார்பிலும் இரண்டாவது குண்டு இடது காலிலும் பட்டிருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
"பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்து அம்மாவிடம் ஜே.எம்.ஓ ஐயா, மார்பில் பட்ட காயத்தால் மார்பினுள் இரத்தம் கசிந்ததால்தான் அண்ணன் இறந்துள்ளார் என," சகோதரர் தில்ஷான் கூறுகின்றார்.
மார்பைத் துளைத்த ரவை!
மரணப் பரிசோதனையை மேற்கொண்ட பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரி லசந்த எஸ்.கே. டி சில்வாவினால் வழங்கப்பட்ட 'மரணப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றுவதற்கான அனுமதிப்பத்திரத்தில்', மார்புக் குழியில் இரத்தக் கசிவு (Hemothorax) மற்றும் இதயத்தில் காணப்பட்ட துப்பாக்கி ரவை காயமே (Bullet injury to the heart) மரணத்துக்கான காரணம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஷான் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போக்குவரத்துப் பிரிவின் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது அடையாளத்தை மறைத்துள்ளனர். ஒருவரைக் கைது செய்ய வரும் பொலிஸ் உத்தியோகத்தர் அடையாளத்தை இரகசியமாக வைத்திருக்க முயல்வது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
முகமூடி மனிதர்களாக பொலிஸ் உத்தியோகத்தர்கள்.
"பிள்ளையைச் சுட்ட பொலிஸார் இருவரும் சீருடையில் இருந்தபோதிலும், முகம் முழுமையாக மறையும் வகையில் தலைக்கவசம் அணிந்திருந்தனர். அதனால் அவ்விருவரின் முகத்தையும் பார்க்க முடியாமல் போனது," என வந்த அதிகாரிகளை அடையாளம் காண முடியுமா என நாம் கேட்டபோது டிஷானின் தந்தை தெரிவித்தார்.
டிஷான் கொல்லப்பட்ட பின்னர் பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று வந்துள்ளதுடன், பின்னர் அவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு வெலிகந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் அவ்வேளையிலேயே டிஷான் உயிரிழந்திருந்ததால், மரணப் பரிசோதனைக்காகச் சடலம் அடுத்த நாள் பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.
.
பொலன்னறுவை பதில் நீதவான் 12 ஆம் திகதி இரவே டிஷானின் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற நீதவான் விசாரணை குறித்து இதுவரை எதுவும் அறியக்கிடைக்கவில்லை. அத்துடன், இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பான பொலன்னறுவை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்கள் எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் வழக்கம் போலப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.
இது தொடர்பாக பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவிடம் தொலைபேசி ஊடாக நாம் வினவியபோது, அது குறித்து எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு அவர் தெரிவித்தார்.
அதற்கமைய அவரது வட்ஸ்அப் இலக்கத்திற்கு 2025 ஜனவரி 18 ஆம் திகதி சில கேள்விகளை அனுப்பிய போதிலும், இதுவரை அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அவரிடம் நாம் கேட்ட ஒரு கேள்வி, துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறதா என்பது பற்றியதாகும். மேலும், அந்தக் காணொளி ஒரு குற்றவியல் ஆதாரம் என்பதால் அதனை வீடியோ எடுத்த நபர் அடையாளம் காணப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா எனவும் நாம் கேட்டோம்.
இந்தக் குற்றத்தை மூடிமறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொலை தொடர்பாக ஏதேனும் ஒரு தரப்பினருடன் பேசினால் சடலத்தை இறுதிச் சடங்குக்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் போவதில்லை என பொலிஸார் விடுத்த அச்சுறத்தல் அதன் முதல் நடவடிக்கையாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
"இது பற்றிப் பேச வேண்டாம் என மகன் கொல்லப்பட்ட அன்றே பொலிஸார் எம்மிடம் கூறினார்கள். வெளிநபர்களுடன் இது பற்றிப் பேசினால் நீதிபதியிடம் கூறி சடலத்தை அவர்களே புதைத்து விடுவோம் என பொலிஸார் எம்மை அச்சுறுத்தினார்கள்," என டிஷானின் தாய் சட்டத்தரணி சேனக பெரேராவிடம் தெரிவித்த கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சண்.பார்த்தீபன்


