கார்த்திகை தீபத் திருவிழா நமது பாரம்பரிய வழிபாடுகளில் ஒன்று.
.
விளக்கேற்றி இறைவனை வழிபடுவது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். கார்த்திகை மாதம் இருள் சூழ்ந்த மாதம், குளிர் கூடிய மாதம் இம் மாதத்தில் இருளாகற்றி ஒளி ஏற்றுவதன் மூலம் மனங்களில் புத்துணர்வு ஏற்படுகின்றது.
மழை காலத்தில் புயல் தோன்றி அதனால் மழை அதிகமாக பொழிவது வழக்கம். மழை நல்ல விடயம் என்றாலும், புயலால் பல சேதாரம் ஏற்படுவதும் வழக்கம்.புயலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பெரும் தீபம் ஏற்றுவதால், புயல் தோன்றுவது தடுக்கப்படுவதோடு, அப்படியே தோன்றினாலும் அதன் வேகம் தணிக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழா நமது பாரம்பரிய வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு மண் அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.கார்த்திகை மாதம் பௌர்ணமி நாள் என்பது கிருத்திகை நட்சத்திரத்தின் மீது சந்திரன் வரும்போது கொண்டாடப்படும் விழாவாகும். அப்படி பார்க்கும்போது பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் வரும் நாள் கார்த்திகை தீபமாகும். கார்த்திகை தீபத்தின் முதல் நாள் ஏற்றப்படும் தீபம் பரணி தீபமாகும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் காலை / மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. பொதுவாக கார்த்திகை மாதம் என்பது முருகனுக்குரிய வழிபாடு செய்யக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது தடைகள் அகலும். திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது.
கார்த்திகை மாத பௌர்ணமி - கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அன்று விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுவதே முறையான வழிபாடாகும். மாலை மாவிளக்கு ஏற்றி அந்த விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும். கார்த்திகை அன்று பகலில் உண்ணா உபவாசம் இருக்க வேண்டும்.
கார்த்திகை அன்று மாலையில் வீட்டிலிருக்கும் எல்லா திருவிளக்குகளையும் ஏற்ற வேண்டும். வாசலில் சிறு விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும். இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.
திருவண்ணாமலை தீபம்
திருவண்ணாமலையில் சிவன் அக்னி ரூபமாக காட்சி அளித்த நாள் திருக்கார்த்திகை. திருவண்ணாமலையில் இருக்கும் மலை மிகவும் பவித்ரமான மலை. கிருதயுகத்தில் அக்னியாகவும் - திரேதாயுகத்தில் மாணிக்கம் - துவாபரயுகத்தில் பொன்மலை - கலியுகத்தில் கல்மலையாக இருக்கிறது. இந்த மலையை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டினர் இந்த மலை அக்னியிலிருந்து (Ignitious rock) வந்தது என கண்டுபிடித்துள்ளனர்.
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ வெள்ளை துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த தீபச்சுடர் ஒன்பது நாட்களுக்கு எரியும். 70 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது.
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது.ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. திருவிளக்கால் அறியத்தக்க மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும்.