குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் ; 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக அந்த திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றிய மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் I.S.முத்துமால நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக்கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் H.M.மங்கல தெஹிதெனிய, நுகேகொடை பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் பெரேரா, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகள் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் I.U.K.லொகுஹெட்டி, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B.மனதுங்க ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக செயற்படுகிறார்.