கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் 10 நாடுகளைச் சேர்ந்த 1,081 பேர் மரணித்திருப்பதாக பதிவாகியுள்ளது.
எகிப்தைச் சேர்ந்த 658 யாத்திரிகர்கள் மரணத்திருப்பதோடு 630 பேர் பதிவு செய்யப்படாத யாத்திரிகர்களாவர்.
இந்த ஆண்டு ஹஜ் கடமையில் மரணித்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டி இருப்பதோடு இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் கடுமையான வெப்பத்திற்கு மத்தியில் பதிவு செய்யப்படாது ஹஜ் யாத்திரையில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.
எகிப்தைச் சேர்ந்த மேலும் 58 வழிபாட்டாளர்கள் மரணித்திருப்பதாக சவூதி அரேபிய இராஜதந்திர வட்டாரத்தை மேற்கோள்காட்டி நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன்படி எகிப்தைச் சேர்ந்த 658 யாத்திரிகர்கள் மரணத்திருப்பதோடு இதில் 630 பேர் பதிவு செய்யப்படாத யாத்திரிகர்களாவர். வசதி படைத்த முஸ்லிம்கள் குறைந்தது ஒரு முறை செய்ய வேண்டிய இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையின்போது சுமார் 10 நாடுகளைச் சேர்ந்த 1,081 பேர் மரணித்திருப்பதாக பதிவாகியுள்ளது.
இம்முறை ஹஜ் கடமை சவூதியில் கடுமையான வெப்பம் கொண்ட கோடை காலத்தில் இடம்பெற்றிருந்தது. மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இந்த வாரத்தில் 51.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருப்பதாக தேசிய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலை 0.4 பாகை உயர்ந்து வருவதாக கடந்த மாதம் வெளியான சவூதியின் ஆய்வொன்று குறிப்பிட்டிருந்தது.
இதில் ஹஜ் கடமைக்கான உத்தியோகபூர் அனுமதிக்கான அதிக செலவை ஏற்க முடியாத ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் முறையற்ற வழிகளில் அந்தக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கானவர்களை மக்காவில் இருந்து வெளியேற்றியதாக சவூதி நிர்வாகம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.
எனினும் கடந்த வாரம் இடம்பெற்ற ஹஜ் வழிபாட்டில் கணிசமான பதிவு செய்யப்படாதவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி இல்லாததால் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும் குளிரூட்டப்பட்ட வசதிகள் கிடைப்பதில்லை.
‘அரபா தினத்திற்கு முன்னர் பாதுகாப்புப் படையினரால் துரத்தப்பட்ட மக்கள் களைப்படைத்துள்ளனர். அவர்கள் சோர்வடைந்தனர்’ என்று அரபு இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் கடமையின் முக்கிய அம்சமான முழு நாளும் வெட்ட வெளியில் வழிபாட்டில் ஈடுபடும் நிகழ்வு குறித்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் எகிப்தியர் இடையே ஏற்பட்ட மரணங்களுக்கான பிரதான காரணம் கடுமையான வெப்பம் என்று குறிப்பிட்டுள்ளனர். கடும் வெப்பம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவிர, பாகிஸ்தான், இஸ்தோனேசியா போன்ற நாடுகளிலும் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.