முதன்முறையாக ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம்: இந்தியாவில் இருந்து வருகைதந்த 19 ஆசிரியர்கள்
.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் இணைந்து நடாத்தும் பெருந்தோட்டத் துறையின் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம் “வித்யார்வதன – VIDHYAWARDANA” ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஒழுங்குப்படுத்தலுடன் இந்த நிகழ்வானது அலரிமாளிகையில் நடைபெற்றது.
மேலும் இந்த ஆரம்ப நிகழ்வில் மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள சுமார் 2000 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் H.E. காலாநிதி சத்தியஞ்சால் பாண்டே, தேசிய கல்வி நிறுவன பொது பணிப்பாளர் பேராசிரியர் பீரசாத் சேதுங்கல், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, கல்வி அமைச்சின் செயலாளர், அமைச்சு அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஆசிரியர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அமைச்சர்கள் பங்குகொள்ளும் நிகழ்வுகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முன்மாதிரியாக செயற்பட்டு இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துக்கொள்ளவில்லை.
ஆகவேதான் இந்நிகழ்வு தொடர்பான ஊடக சந்திப்பொன்றை கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் ஏற்பாடு செய்திருந்தார்.
தொடர்ந்து ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
மலையக பாடசாலை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்தியாவில் இருந்து 19 ஆசிரியர்கள் வருகைத்தந்துள்ளனர். இவர்களின் ஊடாக மலையக பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்சிகள் வழங்குவதற்கு இவ் ஆசிரியர்கள் வருகைத் தந்துள்ளனர்.
அத்தோடு முதல் தடவையாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இடம்பெறுகின்றனர். அதனைதொடர்ந்து பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் தொடர்ந்தும் மூன்று மாதகாலம் பயிற்சிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மலையக பாடசாலை மாணவர்கள் 30 சதவீத கல்வியே பெருகின்றனர் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினோம்.
இதேவேளை எமது நாட்டின் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த மற்றும் எனது அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் அனைவருக்கும் இவ்வேளையிலே நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என கருத்துறைத்தார்.