மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "மன்னிப்பு கேட்கிறேன்": கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டுக்கு மாநிலங்களவையில் விளக்கம்!
"யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்."

"யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்." என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் பகிரங்கமாக கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி மக்களவை சபாநாயருக்கு நேற்று எழுதியிருந்த கடிதத்தில், 'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
கனிமொழியின் இக்குற்றச்சாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் இன்று மாலை பதிலளித்தார். அப்போது அவர், "கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் சில விஷயங்கள் போய் கொண்டிருக்கின்றன. இந்த பிரச்னையை கனிமொழி அவர்கள் மக்களவையில் எழுப்பி உள்ளார். இதுகுறித்து தெளிவுப்படுத்த விரும்புகிறேன். கனிமொழி எம்.பி. அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். ஆனால் நீங்கள் (கனிமொழி) உண்மையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்" என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
மேலும் பேசிய அவர், "மத்திய அரசு ஒருபோதும் யாருக்கான நிதியையும் நிறுத்தி வைக்கவில்லை. நிதி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு 13 முறை கடிதம் எழுதி உள்ளது. தமிழ் மொழி மீது நாங்கள் மிகுந்த பற்று வைத்துள்ளோம். தேசிய கல்விக் கொள்கையில் எந்தவொரு மொழியும் திணிக்கப்படவில்லை. என்னை நீங்கள் முட்டாள் என்று கூறலாம். ஆனால், தமிழக மக்களை நீங்கள் அப்படி ஆக்க முடியாது. நீங்கள் என்னை துஷ்பிரயோகம் செய்யலாம். ஆனால் கடவுளின் பொருட்டு, இளைஞர்களின் வாய்ப்பை கெடுக்காதீர்கள்." என்று அமைச்சர் பிரதான் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், "தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு அவர்கள் (திமுக) என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனவே அவர்கள், அவை மரபு குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்." என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆவேசமாக பேசினார்.
முன்னதாக நேற்று, கனிமொழி எம்.பி. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியிருந்த கடிதத்தில், 'மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, தமிழகத்தை சேர்ந்த திமுக எம்.பி. டி.சுமதி, 141 கேள்வி எண் மீது மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் துணை கேள்வி ஒன்றை எழுப்பினார். சம்கார சிக்ஷா அபியான் திட்டத்தின் கீ்ழ் ஒன்றிய அரசு நிதியை தமிழ்நாட்டுக்கு விடுவிக்காதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தபோது என்னை பற்றி குறிப்பிட்டார். தவறான தகவலை அவர் கூறியதால், அதற்கு நான் விளக்கம் அளிக்க முயன்றேன். அந்த சமயத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர், மிகவும் தீங்கிழைக்கும், தவறாக வழிநடத்தும் மற்றும் அவதூறான கருத்துகளை கூறினார். இது மக்களவைக்கு தவறான தகவலை தருவது மட்டும் அல்லாமல், அவையின் உரிமை மீறலாக மட்டுமின்றி அவையை அவமதிப்பதாகவும் உள்ளது. எனவே அவர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்ற கோரியிருந்தார்.