ஐ.தே.க.விற்கு அடுத்த 6 வருடத்திற்கு ரணிலே தலைவர்
.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வரும் நிலையிலும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை இவர் தன்னகத்தே கொண்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளில் படுதோல்வி அடைந்தது. 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் வெற்றி பெற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்கூட்டியே அறிவித்தார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க பொதுத் தேர்தலில் போட்டியிடாமலேயே தேசியப் பட்டியலில் நுழைந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார போட்டியிடவில்லை என்பது மட்டுமன்றி கட்சியின் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் பங்குபற்றாமல் தேர்தல் தொடங்கியவுடன் வெளிநாடு செல்ல நடவடிக்கை எடுத்தார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன கம்பஹாவில் போட்டியிட்ட போதிலும், கடந்த முறை போன்று கடும் தோல்வியை சந்தித்தார். மாத்தறையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐ.தே.க தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க இந்த ஆண்டு கொழும்பில் இருந்து தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அவரும் கடுமையான தோல்வியை சந்திக்க நேரிட்டது. இது தவிர, முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரே அமைச்சரவையில் அமர்ந்திருந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை இந்தத் தேர்தலில் வீட்டுக்குச் செல்வதற்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்வளவு கடுமையான தோல்வியைச் சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைந்த நிலையிலும் கட்சியின் தலைமைப் பதவியை இன்னும் 6 வருடங்களுக்கு வைத்திருக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.