தம்மிக்க பெரேரா: பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்?
.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் உருவாகியுள்ளது.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் அவருக்கு ஆதரவானவர்களும் வர்த்தகர் தம்மிக பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கட்சிக்குள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தால் வெற்றியின் பின்னர் அவர் பொதுஜன பெரமுனவை ஓரங்கட்டிவிடுவார் என நாமல் தரப்பு சுட்டிக்காட்டி வருவதுடன், தமது கட்சியின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளது.
என்றாலும், ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் தம்மிக்க பெரேராவை வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து பசில் ராஜபக்ச கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நடைபெற்ற சந்திப்பிலும் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் தம்மிக்க பெரேரா முன்னிலையில் இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான பின்புலத்தில் விரைவில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் தீர்மானமிக்க சந்திப்பொன்று இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.
இந்த சந்திப்பின் பின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பொதுஜன பெரமுன இறுதி நிலைப்பாட்டை தெரிவிக்கும் எனவும் அறிய முடிகிறது.