தும்மல் ஓர் அனிச்சைச் செயல் ! - தும்மலை அடக்க நினைத்தால் உடல் பாதிப்பது உறுதி !!
ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ
"ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. இவ்வளவு வேகத்தில் வெளிப்படும் தும்மலை அடக்க நினைத்தால் உடல் பாதிப்பது உறுதி"
`நாகரிகத்துக்காக தும்மலை அடக்க வேண்டாம்; உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்!' - எச்சரிக்கும் மருத்துவர்
"ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. இவ்வளவு வேகத்தில் வெளிப்படும் தும்மலை அடக்க நினைத்தால் உடல் பாதிப்பது உறுதி"
நிறைய பேர் நாகரிகத்துக்காக தும்மலை அடக்குகிறார்கள். தும்மலை அடக்கலாமா? நவீன மருத்துவம் என்ன சொல்கிறது? டாக்டர் கு. கணேசன் விளக்குகிறார்.
தும்மல் நல்லது!
தும்மல் ஓர் அனிச்சைச் செயல். காற்று தவிர வேறு எந்த அந்நியப்பொருள் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச்செயலே தும்மல்.
நம் நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள், தொற்று போன்றவை இருந்தால், அவற்றை வடிகட்டி அனுப்புவது இவற்றின் வேலை.
இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாக அந்நியப் பொருள்கள் நுழைந்தால், இந்தச் சவ்வுப்படலம் தூண்டப்படுகிறது. உடனே, அவற்றை வெளியில் தள்ளும் முயற்சியில் சவ்வுப்படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது.
சுவாசப்பாதையின் பாதுகாப்புக்கான இயற்கை அரணே தும்மல்!
இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை, வாய், வயிற்றுத் தசைகள் எல்லாமே கூட்டணி அமைத்து, சுவாசப்பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளியில் தள்ளுகின்றன. இதுதான் தும்மல்.
இதனால் அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது. நம் சுவாசப்பாதையின் பாதுகாப்புக்கான இயற்கை அரணே தும்மல்.
அடக்குவது ஆபத்து!
சரி, இதை அடக்குவதால் ஆபத்துகள் என்னென்ன? ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. இவ்வளவு வேகத்தில் வெளிப்படும் தும்மலை அடக்க நினைத்தால் உடல் பாதிப்பது உறுதி.
மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டால்...
பொதுவாக, ஒரு தும்மல் தொடங்கும்போது மூக்கில் உணரப்படும் அழுத்தத்தின் அளவு, 1 – 2 kilopascal. தும்மல் வரும்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டால், இந்த அழுத்தம் 20 மடங்கு அதிகமாகிவிடுகிறது. அதேநேரத்தில் அந்த அழுத்தம் வடிய வேறு வழியைத் தேடுகிறது; பெரும்பாலும், உடலின் பலவீனமான பகுதிகளையே அது தேர்ந்தெடுக்கிறது.
விழியில் அழுத்தம் அதிகரிக்கலாம்!
அதன் விளைவால், சுவாசப்பாதையில் உள்ள தொண்டை கிழிவது மட்டுமன்றி, செவிப்பறையும் கிழிய வாய்ப்புண்டு. விழியில் அழுத்தம் அதிகரிக்கலாம். ரத்தக்குழாய்களில் காயம் ஏற்படலாம். கழுத்துவலி, விழுங்குவதில் சிரமம், குரலில் மாற்றம் உண்டாகலாம்.
உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்!
நடுநெஞ்சில் இரண்டு நுரையீரல்களுக்கு இடையில் காற்று புகுந்துகொள்ளக்கூடும் (Pneumomediastinum). இது கடுமையான நெஞ்சுவலியையும் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம்.
மூளையில் ஏற்கெனவே தமனிப்பெருக்கம் (Aneurism) இருக்குமானால், அது வெடித்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம். ஆகவே, தும்மல் வந்தால் தும்முவதே நல்லது. அடக்க வேண்டாம்.


