AI உச்சி மாநாடு: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
,

பிரான்ஸ் நாட்டில் நடக்கவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்காக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்சில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்காக டெல்லியில் இருந்து இன்று (பிப்.10) புறப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு பிப்ரவரி 11, 12 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதற்காக பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்.
இன்று இரவு பிரான்ஸ் சென்றடையும் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் வரவேற்பார். அதனை தொடர்ந்து அதிபர் இமானுவேல் மேக்ரான் அளிக்கும் இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வார். அந்த விருந்தில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த ஏராளமான தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் உச்சி மாநாட்டிற்கு வரும் பல சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். அதன் பின்னர் நாளை காலை நடக்கவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு மோடி தலைமை தாங்குவார்.
பிரான்சின் உச்சி மாநாட்டிற்கு பிறகு பிப்ரவரி 12-13 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வார் என்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி மோற்கொள்ளவுள்ள இருக்கும் இந்த முதல் பயணம் இரு நாட்டு உறவுகளுக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார்.
இதுகுறித்து வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ''அமெரிக்காவில் புதிய அரசு அமைந்த மூன்று வாரங்களுக்குள் பிரதமர் மோடி அந் நாட்டுக்கு வருகை தர அழைக்கப்பட்டிருப்பது இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது'' என்று தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அந்நாட்டு போர் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டனர். அப்போது அமெரிக்கா விமான படைக்கு சொந்தமான விமானத்தில் வந்த இந்தியர்களை கை, கால்களை கட்டியபடி அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பின. அதற்கு மத்திய அரசும் விளக்கம் அளித்திருந்தது. அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் மோடி அதுகுறித்து அந்நாட்டு அதிபரிடம் விவாதிப்பாரா? எனவும் கேள்வி எழுகிறது.