துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மூன்று சுவிஸ் தமிழர்கள் விபத்தில் பலி!
டாக்ஸி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்று சாலையோர நீர்க்கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற பயங்கர டாக்ஸி விபத்தில், சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த மூன்று தமிழர்கள் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 6 மணியளவில், இஸ்தான்புல்லின் Pendik பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இடம்பெற்றது. பயணித்த டாக்ஸி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்று சாலையோர நீர்க்கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் சுவிஸ் குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட மொத்தம் மூன்று தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இருவர் பெண்களும் ஒருவர் ஆணும் ஆவர். இவர்கள் மூவரும் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்தில் சிக்கிய மற்றொருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்தவுடன் தீயணைப்புத் துறையினரும் மருத்துவ அவசரக் குழுவினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை Swiss Federal Department of Foreign Affairs உறுதிப்படுத்தியுள்ளதுடன், இஸ்தான்புல்லில் உள்ள சுவிஸ் தூதரகம் துருக்கி அதிகாரிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


