பொலிஸார் அசமந்தப்போக்கு- அநீதிகளுக்கு முடிவில்லையா?; சசிகலா ரவிராஜ் விசனம்..!
.
என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுடைய வீட்டுக்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார்.
திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் பகுதிகளில் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர் என்று கருதப்படும் பெண் ஒருவரால் என்னுடைய வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் நொருங்கின.
அதேவேளை, வீட்டு வாசல் தூணில் என்னுடைய கணவர் மாமனிதர் நடராஜா ரவிராஜ்ஜின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் மீது மை பூசி அழிக்கப்பட்டது.
அதேவேளை,எமது மதில் சுவர்களில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
என்னுடைய கணவர் ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டுக்கொண்டிருந்தபோதே தென்னிலங்கையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இன்று வரை அவருடைய கொலையை மேற்கொண்டவர்களுக்கோ, அதற்குக் காரணமானவர்களுக்கோ தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
எனவே இந்த நாட்டில் அநீதிகளுக்கு முடிவில்லையா?” – என்று அவர் கேள்வி எழுப்பினார்.