சாதனைகள் பலவற்றின் பின்னால் கேணல் ராயு. பாகம் - 03
ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது.
சாதனைகள் பலவற்றின் பின்னால் கேணல் ராயு. பாகம் - 03
1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.
ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார். எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.
அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.
ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது. அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார். தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை. வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது. இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.
படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.
ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..
அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.
எங்கள் பொரியார் சாதனைகளையெல்லாம் நாங்கள் பேசும்போதும் எழுதும்போதும் வெளித்தெரிந்து விடாதபடி பக்குவமாய் மறைத்து வைத்திருந்த ஈடிணையற்ற போரியலாளனின் பிரிவைச் செரிக்க முடியாது நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் கேணல் ராயு அவர்கள் பதற்றமற்ற, அமைதியான, திடகாத்திரமான இரும்பு மனிதன். புலிகள் இயக்கத்தின் புதிரான பக்கங்களின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இரகசிய மனிதன். நாளும் பொழுதும் உயிர்தின்னும் களங்களுக்குள்ளேயே அவர் வாழ்ந்தபோதும் தமிழீழ தேசம் விடியும் நாள்வரை வாழ்வாரென்றே நம்பியிருந்தோம். இயக்கத்தின் இரகசியத் தன்மைகருதி வெளித்தெரியாது வைக்கப்பட்டிருந்த எங்கள் தளபதியைப் போர்க்களங்களிலும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தோம். இப்போது அவரை அவர் நேசித்த மக்களுக்கு ஒரே இரவில் அறிமுகம்செய்ய எப்படி முடியும்? ஒய்வு ஒழிச்சலற்ற உழைப்பிற் கழித்த பத்தொன்பது வருடங்களின் நினைவுகளும் காட்டாற்று வெள்ளம்போல் எம்முள் பாய்கின்றன.
பொறியியலாளனாவதற்குத் துடித்த இளைஞனின் கல்வி தரப்படுத்தலால் வீழ்த்தப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகம் ஒன்றினூடாக அந்த இலக்கை அடைந்துவிடும் அலாவுடன் 1983ம் ஆண்டு தனது இருபத்து இரண்டாவது வயதிற் சிங்களத்தின் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அப்போது சிங்களம் பெரும் கொலைவெறிகொண்டு ஆடியது. குழந்தைகள், பெரியோர், பெண், ஆண் என்ற வேறுபாடின்றித் தமிழர் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். தமிழரின் உடைமைகள் சூறையாடப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தனக்கும் எதுவித பாதுகாப்புமில்லையென உணர்ந்த ராயு எவ்வாறோ தாயகம் வந்து சேர்ந்தார். சிங்களத்தின் கொடுமைகளிலிருந்து தமிழர் மீட்சி பெறவேண்டுமென்றெண்ணிய அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.
இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமிற் பயிற்சி பெறும்போது பொன்னமானால் இனங்காணப்பட்டார். ஐந்தாவது பயிற்சிமுகாமின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராதா அவர்களின் துணைவனாகச் செயற்பட்டார். அவருடனேயே தமிழிழத்தில் கால்பதித்தார். அன்றிலிருந்து இயக்கம் பெற்ற வெற்றிகள் பலவற்றிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
தொலைத் தொடர்பு, இலத்திரனியல், வெடிமருந்து ஆகியவற்றில் ராயு கொண்டிருந்த ஆற்றல், தளபதி விக்ரரின் வழிகாட்டலில் மன்னாரில் நாம் பெற்ற பல பெறுமதியான வெற்றிகளுக்கு வழிகோலியது. களங்களில் நேரடியாகவும் போரிட்டார். திருகோணமலைக்குத் தாக்குதலுக்காகச் சென்ற அணியில் இடம்பெற்ற அவர் தன்மார்பில் விழுப்புண் அடைந்தார். பின்னர் மன்னாரில் நடந்த சண்டை ஒன்றிலும் தன் கால்களிலொன்றில் எதிரியின் குண்டுபட்டுப் பெரிய விழுப்புண்ணைத் தாங்கினார். தளபதி விக்ரர் அடம்பனில் வீரச்சாவடைந்த பின்னர் தளபதி ராதாவின் தலைமையிற் பணியாற்றினார்.
துரோகி ஒருவன் வீசியகுண்டினால் கேணல் கிட்டு அவர்கள் தன் காலை இழந்த பின்னர், ராதாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ராயுவின் பணி தொடர்ந்தது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைத் தொடர்புப் பிரிவு ராயுவின் பொறுப்பில் மேலும் வளர்ந்தது. அவரின் வெடிகுண்டு நுட்பங்களுக்குப் போர்க்களங்களில் எதிரி அதிக விலைகொடுத்தான். பலாலி, காங்கேசன்துறை வீதியில் எதிரியின் விநியோக அணிகள் மீது ராயுவால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பலராலும் அறியப்பட்டவை. அப்போதெல்லாம் ஒரு தோட்பை நிறைந்த வெடிப் பொருட்களுடன் எதிரியைத் தேடிப்போகும் தாடிக்கார ராயு மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார்.