தபால் மூல வாக்களிப்பைப் புறக்கணியுங்கள்; கஜேந்திரன் வேண்டுகோள்
.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்து அரச உத்தியோகத்தர்களும் வாக்களிக்காது முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக விடுக்கின்றோம் எனத் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
“இது வெறுமனே தமிழ் மக்களின் நலன்களுக்கானது மாத்திரமல்ல. மாறாக ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களினதும் நலன்களுக்கானது.
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் ஒற்றையாட்சி அரசமைப்பை நீக்குவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தவும் சமஷ்டி அரசமைப்பைக் கொண்டுவரவும் முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக இருக்கின்றோம்.” – என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்து பிரதான வேட்பாளர்கள் மிகத் தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நானும் இந்த நாடாளுமன்றத்திற்கு வந்த நாளிலிருந்து 75 வருடங்களாகப் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்த அவையிலுள்ள மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் ஆகியோர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். எனினும், யாரும் இதனைக் கருத்திலெடுக்கவில்லை.
இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஆட்சியிலிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராகவும் அவரது அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடினார்கள்.
அதன் விளைவாக அவர் ஜனாதிபதிப் பதவியை விட்டு வெளியேறினார். இதன்பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களை நோக்கி தான் இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
குறிப்பாக எங்கள் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரைக் குறிப்பிட்டுத் தான் இனப்பிரச்சினையைத் தீர்க்கப் போவதாகவும் நீங்கள் அரைவாசித் தூரம் ஒத்துழைத்தால் கூட இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதாகக் கூறியிருந்தார்.
அதேநேரம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாகவிருந்தால் 75 வருடங்களாகத் தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் பகைமையை வளர்த்து ஒரு இன அழிப்பு யுத்தத்துக்கு வித்திட்ட இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இந்த அரசமைப்பை நீக்கி ஒரு சமஷ்டி அரசமைப்பைக் கொண்டு வர வேண்டும். தமிழ் மக்களின் தேசத்தை அங்கீகரிக்கும் வகையிலும், இனங்களைச் சமத்துவமாக வழிநடத்தக் கூடிய வகையிலும் ஒரு சமஷ்டி அரசமைப்பைக் கொண்டுவருவதன் மூலம்தான் இனங்களுக்கிடையில் ஒரு சமத்துவத்தையும் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய முதல் அடியை எடுத்து வைக்க முடியுமென்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
இதனை செய்ய தென்னிலங்கை தலைமைகள் தயாராக இல்லை என்பதே அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்கள் கூடாக தெளிவாக தெரிகிறது. எனவே, இந்தத் தேர்தலை தமிழ் தேச அரச ஊழியர்கள் புறக்கணிக்க வேண்டும்.” என்றார்.