“கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேலே இருக்காது” – நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப் கூறியது என்ன?
.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
ரஷ்யா – யுக்ரேன் போர், இஸ்ரேல் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளுடன் வரி விதிப்பு, குடியேற்றம், கருக்கலைப்பு போன்ற அமெரிக்க பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் மக்கள் மனதில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த விவாதம் உலகம் முழுவதுமே உற்றுநோக்கப்பட்டது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏபிசி ஊடகம் இந்த விவாதத்தை நடத்தியது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்டது.
ரஷ்யா – யுக்ரேன் போரை நிறுத்த டிரம்ப் விருப்பம்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, “போரை நிறுத்த நான் விரும்புகிறேன்” என்று டிரம்ப் பதிலளித்தார்.
ரஷ்யப் படையெடுப்பை சமாளிக்க யுக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா அதிகம் செலவிடுவதாக குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா மிகக் குறைந்த அளவே நிதி அளிப்பதாக கூறினார்.
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆகிய இருவரையும் எனக்கு நன்றாக தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
“கமலா ஹாரிஸ் அதிபரானால் இஸ்ரேலே இருக்காது” – டிரம்ப்
காஸாவில் நடைபெற்று வரும் போர் குறித்து கமலா ஹாரிஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போரை எப்படி அவர் கையாள்வார் எனவும், எப்படி முடிவுக்குக் கொண்டு வருவார் எனவும் கேட்கப்பட்டது.
இதுகுறித்து பிரசாரத்தில் தான் முன்பு கூறிய கருத்துகளை மீண்டும் கூறிய ஹாரிஸ், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை அந்நாடு எப்படி பாதுகாக்கிறது என்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த போர் முடிவுக்கு வர வேண்டும்,” எனவும் அவர் கூறினார். “உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.” என்று அவர் உறுதிபடக் கூறினார்.
போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஹாரிஸ், காஸாவை மறுகட்டமைக்கவும், இருநாடுகள் தீர்வையும் வலியுறுத்தினார்.
காஸா போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவார் என்றும் ஹமாஸால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட மக்களை எப்படி மீட்பார் என்று டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தான் அதிபராக இருந்திருந்தால், இந்த போரே “தொடங்கியிருக்காது” என அவர் கூறினார்.
“அவர் (கமலா ஹாரிஸ்) இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் இருக்காது என்று கருதுகிறேன்,” என்றார் அவர்.
தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரஷ்யா – யுக்ரேன் போரும் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக தொடர்ந்து கூறிவரும் கமலா ஹாரிஸ், டிரம்பின் கூற்றை மறுத்தார். “டிரம்ப் பிளவுபடுத்த முயல்வதாகவும் உண்மையிலிருந்து திசை திருப்புவதாகவும்” ஹாரிஸ் கூறினார்.
“அவர் சர்வாதிகாரிகளை போற்றுபவர் என்பதும் அவர் சர்வாதிகாரியாக விரும்புவதும் நன்றாகவே தெரியும்” என கமலா ஹாரிஸ் கூறினார்.
ராணுவ தலைவர்கள் டிரம்ப் “அவமானகரமானவர்” என கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து டிரம்பிடம் கேள்வி
தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உரைகளில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கமலா ஹாரிஸ் சமீபத்தில் தான் தன்னை கருப்பின பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்வதாக தவறான கூற்றை டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து விவாதிப்பது ஏற்றது என கருதுவது ஏன் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“அவர் (கமலா ஹாரிஸ்) யார் என்பது குறித்து நான் கவலைகொள்ளவில்லை” என டிரம்ப் பதிலளித்தார்.
“அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்த இனத்தைப் பயன்படுத்த முயற்சித்த ஒருவர், தொடர்ந்து அதிபராக விரும்புவது துரதிருஷ்டவசமானது” என்று கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
வரிவிதிப்பு – கமலா குற்றச்சாட்டும் டிரம்ப் பதிலும்
விவாத மேடைக்கு வந்ததுமே கமலா ஹாரிசும், டிரம்பும் கைகுலுக்கிக் கொண்டனர். பின்னர் விவாதம் தொடங்கியது.
முதல் கேள்வி பொருளாதாரத்தில் இருந்து கேட்கப்பட்டது. அதாவது, அமெரிக்கர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் தற்போது நன்றாக இருப்பதாக கருதுகிறார்களா? என்பது கேள்வி.
முதலில் பதிலளித்த கமலா ஹாரிஸ், வாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புவதாக கூறினார். இளம் தம்பதியரின் குடும்பத்திற்கும், அதிகரித்து வரும் வீட்டு விலை மற்றும் வாடகை பிரச்னையைத் தீர்க்கவும் அவர் உறுதியளித்தார்.
பின்னர் டிரம்ப் மீதான தாக்குதலைத் தொடுத்த கமலா, டிரம்ப் முன்பு அதிபராக இருந்த போது கோடீஸ்வரர்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும் வரிச் சலுகை அளித்ததைப் போலவே அடுத்தும் தொடர விரும்புவதாக கூறினார்.
டிரம்ப் அதிபரானால், அமெரிக்கர்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் ‘டிரம்ப் விற்பனை வரியை’ செலுத்த வேண்டியிருக்கும் என்றார் கமலா ஹாரிஸ் .
கமலாவுக்கு பதிலளித்த டிரம்ப், மற்ற நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப் போவதாக கூறினார். “உலகிற்கு இதற்கு முன்பு நாம் செய்ததற்கு அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று அவர் கூறினார்.
சீனாவைக் குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், அந்த நாட்டில் தயாராகும் பொருட்கள் மீது தனது ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகளால் தற்போதும் கூட அமெரிக்க அரசு பல பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக கூறினார்.
டிரம்பின் பொருளாதார கொள்கை மீது கமலா ஹாரிஸ் சாடல்
அமெரிக்காவுக்கு நெருக்கடியான கால கட்டமான பொருளாதார பெருமந்தத்திற்குப் பிறகு மிக மோசமான அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம், டிரம்ப் ஆட்சியை விட்டுச் செல்லும் போது நிலவியதாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். டிரம்ப் ஏற்படுத்திய பிரச்னைகளை பைடன் அரசே சரி செய்ததாக அவர் கூறினார்.
டிரம்ப் முன்வைக்கும் பொருளாதார கொள்கைகளை கமலா ஹாரிஸ் சாடினார். டிரம்ப் செய்யப் போவதாக வாக்குறுதியளிக்கும் திட்டங்களை நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார நிபுணர்கள் விமர்சித்ததை அவர் சுட்டிக்காட்டினார். டிரம்ப் கூறுவதை அமல்படுத்தினால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.
“மக்களுக்கான திட்டங்கள் ஏதும் டிரம்பிடம் இல்லை. ஏனெனில், மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் தன்னை தற்காத்துக் கொள்வதிலேயே டிரம்ப் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்” என்று கமலா விமர்சித்தார்.
டிரம்ப் பதில்
“எனது ஆட்சியில் பணவீக்கம் உச்சத்தில் இருந்ததாக கமலா ஹாரிஸ் கூறுவத தவறு” என்று டிரம்ப் கூறினார்.
பைடன் ஆட்சியில் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக இருந்ததாக அவர் குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலுமே விலைவாசி உயர்வு பெரும் பிரச்னையாக இருந்தது.
அமெரிக்க வரலாற்றில் அதற்கு முன்பு 1981-ம் ஆண்டுதான் பணவீக்கம் 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உச்சம் தொட்ட பணவீக்கம் பின்னர் படிப்படியாக குறைந்து இந்தாண்டு மே மாதத்தில் 3.3 சதவீதத்தை எட்டியது.
ஆனாலும், விலைவாசி உயர்வு என்பது கணிசமான வாக்காளர்களின் மனதில் உள்ள பிரச்னைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
கருக்கலைப்பு – கமலா, டிரம்ப் கருத்து என்ன?
பின்னர், அமெரிக்காவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக பார்க்கப்படும் கருக்கலைப்பு உரிமை பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது.
கருக்கலைப்பு உரிமை குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், 9-வது மாதத்தில் கூட கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜனநாயக் கட்சி விரும்புவதாக விமர்சித்தார்.
ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு அதீதமான ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸின் தேர்வான டிம் வால்ஸ் 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பு செய்ய ஆதரவாக இருப்பதாக கூறினார்.
கருக்கலைப்பைப் பொருத்தவரை, பாலியல் குற்றங்கள் போன்ற சில விதிவிலக்குகள் தவிர்த்த மற்ற தருணங்களில் மாகாணங்களில் முடிவுக்கே விட்டுவிட உதவியதாக டிரம்ப் தெரிவித்தார். சில மாகாணங்களில் குழந்தை பிறந்த பிறகு கொன்றுவிட அனுமதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், “அமெரிக்காவின் எந்தவொரு மாகாணத்திலும் பிறந்த குழந்தையை கொல்ல சட்டம் அனுமதிக்கவில்லை” என்றார்.
கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
விவாதத்தின் விதிகள் என்ன?
• 2024ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலை முன்னிட்டு நடக்கும் இரண்டாவது விவாதம் இதுவாகும்.
•முதல் விவாதம் ஜூன் மாதம் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிபர் ஜோ பைடனுக்கு இடையே நடைபெற்றது. அதன் பின்னர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக முடிவு செய்தார்.
• இந்த விவாதத்தில் நேர வரம்புகள் கடுமையாகப் பின்பற்றப்படும். மதிப்பீட்டாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒவ்வொரு வேட்பாளருக்கும் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதன் பின்னர் எதிர் வேட்பாளரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து விவாதிக்க இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும்.
ஒரு வேட்பாளர் பேசும்போது மற்றொரு வேட்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்து வைக்கப்படும். மேலும் விவாத அறையில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள்.
•கமலா ஹாரிஸ் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்யப்படக் கூடாது என்று விரும்பினார், ஆனால் சமீபத்தில் விவாத விதிகளுக்கு ஒப்புக் கொண்டார்.
• இந்தக் குறிப்பிட்ட விதி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. டிரம்புக்கும் பைடனுக்கும் இடையிலான முதல் விவாதம் பல்வேறு குறுக்கீடுகள் மற்றும் வாக்குவாதங்களால் நிறைந்திருந்தது. அதைத்தொடர்ந்து இது கொண்டு வரப்பட்டது.
இந்த விவாதம் டேவிட் முயர் மற்றும் லின்சி டேவிஸ் ஆகிய இரண்டு மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இருவரும் ஏபிசி ஊடகத்தின் செய்தியாளர்கள்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும்.
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.