மதுவுக்குள் சிக்குண்டவர்கள் மலையக மக்கள் அல்லர்
.
பெருந்தோட்ட தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. தங்களுடைய சுய இலாபத்திற்காகவே இவ்வாறு அந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
”ஒரு குறிப்பிட்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தேர்தல் காலப்பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதுவும் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற மக்களுக்கு தரம் குறைந்த கள்ளு போத்தல்கள் தேர்தல் இலஞ்சமாக வழங்கப்படுகின்றன.
இந்த விடயத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனெனில் தற்பொழுது பெருந்தோட்ட தொழிலாளர்களை குறிவைத்து திட்டமிட்ட அடிப்படையில் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை காணமுடிகின்றது.
மலையக மக்கள் தொடர்பாக தவறான கருத்தக்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அதன் மூலமாக பணம் சம்பாதிக்கின்ற செயற்பாடுகளில் ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
இதனை வன்மையாக கண்டிப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் இது தொடர்பாக நாம் நீதிமன்றத்தை நாடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
மலையக மக்கள் இந்த நாட்டில் மிகவும் கௌரவாமாகவும் இந்த நாட்டின் பொருளாதாரதிற்கு பங்களிப்பு செய்து கொண்டும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை பல சந்தர்ப்பங்களில் இழிவுபடுத்தப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். ஏதோ மலையக மக்கள் மாத்திரமே மது அருந்துபவர்களாகவும் வேறு எந்த சமூகமும் அதனை செய்வதில்லை என்பது போலவும் காட்டப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான அருந்துவதாக புள்ளவிபரங்களை காட்டுகின்றார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான ஒரு செயற்பாடாகும். ஏனெனில் இந்த மாவட்டமானது ஒரு சுற்றுலா நகரமாகும். இங்கே அதிக அளவில் உல்லாச விடுதிகளும் விருந்தகங்களும் அமைந்திருக்கின்றன.
எனவே, சுற்றுலாப் பிரயாணிகளாக இங்கு வருகின்ற உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மது அருந்துகின்றனர். இந்த கணக்கையும் எங்களுடைய பெருந்தோட்ட மக்களின் கணக்கில் சேர்ப்பது என்பது எந்த விதத்தில் நியாயமானது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
திட்டமிட்ட அடிப்படையில் எங்களுடைய மக்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாடுகளில் அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நாம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.